Tuesday, 1 July 2014

அறிக்கை
சாதிகளின் இன்றைய உருநிலை
சி.லட்சுமணன், ஸ்டாலின்ராஜாங்கம், ஜெ.பாலசுப்பிரமணியம், அ.ஜெகநாதன், அன்புசெல்வம்
சாதிசார்ந்து உருவாகி வரும் சமகால மாற்றங்களை உள்வாங்கி சாதி இன்று என்ற விரிவான அறிக்கையை தலித் செயல்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம் (Intellectual Circle for Dalit Action, ICDA) சார்பாக சி.லட்சுமணன், ஸ்டாலின்ராஜாங்கம், ஜெ.பாலசுப்பிரமணியம், அ.ஜெகநாதன், அன்புசெல்வம் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். விரைவில் வெளிவரவிருக்கும் அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகள்.

தமிழ்ப் பகுதி சார்ந்து சாதிகளின் தோற்றம் காலம் தோறும் அவை பெற்று வந்த மாற்றங்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்த ஆய்வுகள் ஏதும் இல்லை. திராவிட இயக்கம் உருவாக்கித் தந்த பிராமணர் ஜ் பிராமணரல்லாதார் என்ற எளிமைப்படுத்தப்பட்ட எதிர்வுதான் சாதி பற்றிய புரிதலாக இன்று வரையிலும் செல்வாக்கோடு நிலவி வருகிறது. சாதியின் இன்றைய எதார்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்த எதிர்வு பயன்படவில்லை. மாறாக பிராமணர் எதிர்ப்பும் சாதி இந்துக்களின் எழுச்சியும் மட்டுமே இங்கு சாத்தியமாகி இருப்பதோடு அவை கேள்விக்கு உட்படுத்தப்படாமலும் இருக்கின்றன. பிராமணரல்லாதார் எழுச்சியே ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான இன்றைய எழுச்சியாக வடிவம் கொண்டிருக்கிறது.
சாதிகளின் தோற்றம், சாதி அமைப்பில் பிராமணர்களுக்கு இருக்கும் பங்கு முதலானவை குறித்து மிகத் தீவிரமாக மதிப்பீடு செய்த அம்பேத்கர் சாதியின் தோற்ற நிலைகள் ஏற்கெனவே இங்கு இருந்ததாகவும் அதை அமைப்பாகவும் கருத்தியலாகவும் மாற்றியது மட்டுமே மனுவின் வேலையாக இருந்தது என்றும் கூறுகிறார். ஆரிய இனம் பற்றிய இனக்கருத்தாக்கத்தை ஏற்றுக்கொள்ளாத அம்பேத்கர் போலச்செய்தல், சாதி படிநிலை வரிசை, அகமணமுறை ஆகிய கூறுகள் சாதியின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் பெற்றிருக்கும் இடங்களை எடுத்துக் காட்டினார். இதில் பிராமணர்கள் வகித்த முதலிடத்தைச் சுட்டினார். சாதி ஒழிப்பு நவீன அரசியல் சூழலால் உருவான கருத்தியலாகும். நவீன இந்தியாவின் சிந்தனையாளரான அம்பேத்கரின் தனித்த பங்களிப்பாக 'சாதி ஒழிப்பு' என்கிற கருத்தியல் அமைந்தது. சாதி ஒழிப்பை சனநாயகச் செயலாக முன்வைத்தார் அம்பேத்கர். சாதி ஒழிப்பில் தீண்டாமையைப் பிரயோகிக்கும் தீண்டப்படும் சாதிகளுக்கும் பெரும்பங்கு இருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த வகையில் அனைவரும் இணைந்து வாழும் அரசியல் ஜனநாயகத்தை அவர் வலியுறுத்தினார். சாதியை பிராமணர்களோடு இணைத்து விளக்கினாலும் அதில் அவர்களுக்கு மட்டுமே பங்கு இல்லை என்பதையும் சாதியின் பெயரால் பயனடையும் அனைத்துச் சாதிகளுக்கும் அதில் பங்கு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அதனால்தான் அவர் தீண்டப்படுகிற (Touchable) தீண்டப்படாத (Untouchable) என்கிற சமூக எதிர்வை முன் வைத்தார். இவ்வாறு சாதியமைப்பில் பிராமணர்களுக்கு இருக்கும் பங்கை சுட்டிக்காட்டுவதினாலேயே அதனால் பலன் பெறும் பிற சாதிகளை காப்பாற்றும் கோட்பாட்டை, அரசியல் நீதியாக அவர் பேசவில்லை. 'நான் பிராமணியம் என்று குறிப்பிடுவது பிராமணர்கள் ஒரு சாதியாக இருந்து பெறும் அதிகாரம், நலன் ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடவில்லை. சமத்துவத்துக்கு எதிரான, சகோதரத்துவத்துக்கு எதிரான கூறுகளைக் குறிப்பிடுகிறேன்' என்று அம்பேத்கர் கூறினார்.

அந்த வகையில் பிராமணியம் என்பது பிராமணர்களிடம் மட்டுமல்ல அது தலித்துக்களிடம் இருந்தாலும் அவற்றை ஆதிக்க குணமாகவே கருத வேண்டும். அதுவே சாதியின் பண்பு. இத்தகைய அணுகு முறையைச் சொல்லியதன் வாயிலாக 'சாதி ஒழிப்பு' என்கிற கருத்தியல், பிராமணர் என்ற ஒற்றைச் சாதிக்கு எதிரான பிரச்சினையாக மட்டும் சுருக்கி விடாமல் அதனை ஒரு பரந்து விரிந்த தளத்தில் ஜனநாயக வடிவமாக மறுஉருவாக்கம் செய் வதில் அம்பேத்கர் ஆர்வம் காட்டினார்.

காலனிய அதி காரம் மற்றும் காலனி யத்துக்குப் பிந்தைய அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் மூலம் நடந்த மாற்றங்களின் காரணமாக சாதி அமைப்பு பெற்றிருக் கும் பரிமாணங்களை மதிப்பிட்டுப் பார்க் கிற ஆய்வு அணுகு முறை என்பது இங்கு அறவே பின்பற்றப்படவில்லை. தலித்துக்களை மிகத் தீவிரமாக ஒடுக்கத் தொடங்கியுள்ள எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதிகளின் சாதியத்தை உரிய அளவிற்கு கண்டுகொண்டு விவாதிக்காமல் 'பிராமணர் எதிர்ப்பு' என்கிற பழைய கருத்தியலை மட்டுமே பயன்படுத்துவதால் சமகாலத்திய எண்ணிக்கை பெரும்பான்மைச் சாதிகளின் அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்படாமல் தொடர்கிறது. ஒடுக்கப்படும் சாதிகளின் கோபம் பிராமணர்களை நோக்கி மட்டுமே திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியல் தளத்தில் மட்டுமல்லாது சிந்தனைத் தளத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. இச்செயல்பாடுகள் பிற்படுத்தப்பட்டோர் சார்பு சிந்தனையின் ஆதிக்கத்தையே காட்டுகின்றன. ஆனால் தமிழ்ச் சூழலில் இதுவரைப் பேசப்பட்டு வரும் பிராமண எதிர்ப்பு எனும் கருத்தியல் பிராமணரல்லாதோரிடம் அதிகாரத்தைக் கொண்டு சேர்ப்பதில்தான் முடிந்திருக்கிறது. எனவே இன்றைய சாதி அமைப்பின் பெயரை 'பிராமணியம்' என்று கொள்வதைவிட 'சாதியம்' என்று கொள்வதே பொறுத்தமானது.
இன்றைய சாதி குழுக்களைப் பொதுநிலையில் நான்கு பிரிவாகப் பார்க்க இந்த அறிக்கை முயற்சிக்கிறது.
1. தீண்டப்படாத சாதிகள்
2. பிராமணர்கள்
3. பிராமணரல்லாத எண்ணிக்கை பெரும்பான்மைச் சாதிகள்
4. பிராமணரல்லாத எண்ணிக்கை சிறுபான்மைச் சாதிகள்

தீண்டப்படாத சாதிகள்:

இந்தியாவில் தீண்டப்படாத சாதிகளைக் குறிக்கும் Scheduled Caste என்கிற தொகுப்பு காலனியகாலத்தில்தான் வகைப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஒரே பட்டியலில் அடக்கப்பட்டிருந்தாலும் இவை அதனளவில் தனித்தனி சாதிகளே. இடம், தொழில், மொழி, பண்பாடு சார்ந்து வேறுபட்ட பண்புகளைக் கொண்டவையாகும். இப்பட்டியலுக்குள் கொணரப்படாத காலத்திற்கு முன்பு வரையிலும் இச்சாதிகள் தனித் தனியாகவே இயங்கி வந்தன. அதேபோல தங்கள் மீது திணிக்கப்பட்ட இழிவிற்கு எதிராகவும் தனியாகவே போராடின. இவ்வாறு போராடி வந்த போதிலும் 1911 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போதுதான் காலனிய அரசு தீண்டப்படாதாருக்கான வரையறைகளை திட்டவட்டமாக முன்வைக்க முயன்றது. ஏறக்குறைய 10 வகையான முறைகளை அடிப்படையாகக் காட்டி தீண்டப்படாதோரை வரையறுத்தது. இன்றைய தீண்டப்படாத சாதிகள் யாவும் அந்தப் பத்து வரையறைக்குள்ளும் முழுமையும் அடங்கத்தக்கன என்று கூறமுடியாவிட்டாலும் நடைமுறையில் தீண்டப்படாத குழுவாகவும் சமூக அதிகாரம் மறுக்கப்பட்ட குழுவாகவும் ஏதேனுமொரு வகையில் இழிவு சுமத்தப்பட்ட வகுப்பாகவும் இருந்தவர்களை தீண்டப்படாதோர் பட்டியலில் காலனியம் அடக்கியது. சாதி ரீதியாக இழிவு காணுவதிலும் சமூகப் பண்பாட்டு நடைமுறைகளில் ஒற்றுமை இருந்தமையாலும் இந்தியா முழுவதிலும் இருந்து இத்தகைய அரசியல் ரீதியிலான பட்டியலாக்கம் உருவாக்கப்பட்டது. இப்பட்டியல் உருவாக்கத்தின்போது இதில் இடம் பெறவும் விலகிடவும் இச்சாதியினரிடையே போராட்டங்கள் நடந்தன. இப்பட்டியலில் இடம் பெறுவது குறித்த ஓர்மை சில சாதிகளுக்கு இருந்தன. சில சாதிகளுக்கு இல்லை. ஆனால் நவீன கால அரசியலில் இப்பட்டியலாக்கம் முக்கிய இடத்தைப் பெற்றது. நவீன அரசியல் வெளியில் உருவாகி வந்த இத்தகைய பட்டியலாக்க முயற்சிகளுக்குப் பின்னர் அம்பேத்கரின் அரசியல் ரீதியான வருகை நிகழ்ந்தது. தீண்டப்படாத குழுக்களுக்கிடையேயான வேறுபாடுகளை அறிந்திருந்தாலும் சாதியின் பெயரால் சமூக அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டவர்கள் என்ற வகையில் இந்திய அரசியலில் இக்குழுவினரை அரசியல் அழுத்தம் தரத்தக்க ஒரு குழுவாக மாற்ற எண்ணிக்கை அளவிலான ஒருங்கிணைவு அவசியம் என்பதை அம்பேத்கர் உணர்ந்திருந்தார். சமூக உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் இக்காலத்திலும் இவர்களை இன்றைய அரசும் கட்சிகளும் மதிப்பதற்கு ஒரே காரணம் அவர்கள் ஒரே பட்டியலில் எண்ணிக்கை அளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதே ஆகும்.

காலனிய காலம் தொடங்கி சுதந்திர இந்தியா வரையிலும் தீண்டப்படாதவர்கள் என்று கருதப்படும் தலித்துகளின் மேம்பாட்டிற்காக அரசு சலுகைகள் அளித்து வருகின்றது. இங்கு சமூக உரிமைகளில் எந்த பாத்தியதையும் பெற முடியாமலிருக்கும் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி அரசியல் ரீதியான வாய்ப்பான இடஒதுக்கீடு மட்டும்தான். இந்திய அரசியலில் சாதி மட்டுமே அதிகாரத்திற்கான தவிர்க்க முடியாத வழியாக ஆக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்றைய அதிகாரத்தால் ஒடுக்கப்படும் தலித்துகள் அதிலிருந்து மீளுவதற்காக அதே அதிகாரத்தினை அடைய விரும்புகின்றன. இந்நிலையில் அதற்காக அவை மீண்டும் சாதியையே கைக்கொள்ள விரும்புகின்றன. அதனால் சமூகத்தின் சாதி உளவியலுக்கு தீண்டப்படாத சாதிகளும் சென்று சேர்கின்றன. தத்தமது அடையாள உருவாக்கத்தில் ஈடுபடும் தீண்டப்படாத சாதிகள் இன்றைய அதிகாரத்திற்கு தேவைப்படும் எண்ணிக்கை பலம் போன்றவற்றில் ஈடுபடுவதோடு தங்களுக்கு கீழிருப்பதாகக் கருதும் சாதியை தாழ்ந்த சாதியாகப் பார்த்து விலக்கும் பண்பையும்கூட எடுத்துக்கொள்ள எத்தனிக்கின்றன. இது படிநிலைப்பட்ட சாதிய சமூக உளவியலின் வெற்றி எனலாம்.
எல்லாவற்றுக்கும் சமச்சீரற்ற சமூக அமைப்பே காரணமாகும். இன்றைய சமகால சமூகச் சூழலில் தலித்துகளுக்கு ஒரே வாய்ப்பாக உள்ள இடஒதுக்கீடு கூட முறைப்படி நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த ஒதுக்கீடு குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட சாதிகளில் பெரும்பான்மையாய் உள்ள சாதிக்கானதாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அளவில் இப்பெரும்பான்மைவாதம் அமைந்துள்ளது. ஆனால் அனைத்து தாழ்த்தப்பட்ட சாதிகளும் ஒரே இடத்தில் பெரும்பான்மையாய் இருக்க முடிவதில்லை. அதேபோல இதில் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமே பொறுப்பு இருப்பதாகவும் கூற முடியாது. இப்பெரும்பான்மைவாதத்தை எந்த விதத்திலும் சாதி இந்துக்கள் பெற்றிருக்கும் சமூக அரசியல் கலாச்சார பெரும்பான்மைவாதத்தோடு ஒப்பிட முடியாது.

கிராமச் சூழலில் உடலுழைப்பு மட்டுமே தலித்துகளின் உரிமையாக இருக்கிறது. மற்றபடி ஊர் பொதுச் சொத்துக்களின் குத்தகை ஏலம் மூலம் லாபம் பெறுகிறவர்களாக இருப்பதில்லை. கோயில் நிலம், கண்மாய் மீன், மரங்கள் போன்ற சொத்துக்களில் ஏலம் கோர முடிவதில்லை. அதைப் போல கிராம நிர்வாக அமைப்பில் கிராம நிர்வாக அலுவலர், எழுத்தர் போன்ற பணிகளிலோ சாலை அமைத்தல் ஊர் மராமத்து போன்ற பணிகளிலோ தலித்துகள் நுழையவோ இலாபம் பெறவே முடிவதில்லை. கடந்த சில பத்தாண்டுகளில் தலித்துகள் மீதான வன்முறைகள் ஏலம் உள்ளிட்ட பொதுச் சொத்துகள் மீதான உரிமை கோரலால் நடந்தவையும் அடங்கும். (1992 மதுரை மாவட்டம் சென்னகரம்பட்டி). தமிழகத்தின் அனைத்துக் கிராமங்களிலும் கள ஆய்வு என்று மேற்கொண்டால் சூத்திர சாதிகளின் அதிகாரத்திற்கான இந்த வன்முறைகளை வெளிப்படையாக அறிய முடியும். இதேபோலச் சிறு நகரம், நகரம் என்ற அளவில் வாகன நிறுத்தம், கழிப்பறை, பொது மார்க்கெட், டெண்டர் சார்ந்த பணிகளில் தலித்துகளுக்கு எத்தகைய பங்கும் இருப்பதில்லை. பொது இடத்தில் ஒரு டீக்கடை கூட தலித் ஒருவரால் வைக்க முடிவதில்லை.

தலித்துகள் உழைப்பின் மூலமாக லாபமீட்டும் போது பெரும்பான்மை எண்ணிக்கை சூத்திர சாதிகளால் தடுக்கப்படுகின்றனர். பெரும் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். கொடியங்குளம் (1993) தொடங்கி தருமபுரி (2012) வரையிலான வன்முறைகளில் தலித்துகளின் பொருளாதார மேம்பாடுமீது நடத்தப்பட்ட தாக்குதலாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு கணக்கிற்காக 1947க்குப் பின்னர் என்று வைத்துக்கொண்டாலும் தலித்துகளிடம் பெரும் இலாபம் சேகரமாகவில்லை என்பதைப் பார்க்க முடியும். உபரி தரக்கூடிய எந்த வேலைவாய்ப்பும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.

பிராமணர்கள்:-

இந்தியச் சாதிய தோற்ற நிலைகளைச் சாதியெனும் அமைப்பாக ஆக்கியதிலும் அது இன்று வரையில் நிலைத்திருப்பதற்கான கருத்தியல் பின்புலமாகவும் இருப்பவர்கள் பிராமணர்கள். சாதியை மத அமைப்பின் பகுதியாக மாற்றியவர்கள் இவர்களே. இடைநிலைச் சாதிகள், தலித்துகள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர்களையும் இன்று வரையிலும் தாழ்ந்தசாதிகளாகக் கருதி தங்களை மேலிருத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய அரசு, நிர்வாகம், நீதித்துறை, விஞ்ஞானம், ஊடகம் போன்ற தீர்மானகரமான தளங்களில் பிராமணரல்லாதவர்களின் செல்வாக்கு ஏற்பட தொடங்கியிருப்பினும் அவற்றில் பிராமணர்களின் ஆதிக்கம் குறைந்துபோய் விடவில்லை.

தமிழ் வரலாற்றைப் பொறுத்த அளவில் சங்க இலக்கியங்களிலேயே அந்தணர்கள் என்கிற புனித சாதி பற்றிய குறிப்பு வருகிறது. ஆனால் அதிகாரச் சாதியாக இருந்திருப்பதற்கான குறிப்புகள் இல்லை. இத்தகைய புனித அதிகாரம்மூலம் மெல்ல மெல்ல பிற்காலங்களில் சமூக அதிகாரத்தை அடைந்தவர்களாக பிராமணர்கள் மாறினர். எனினும் பிராமணர்கள் அரசை நிர்வகித்ததற்கான சான்றுகள் இல்லை. மாறாக அரசை நிர்வகிப்பதற்கு ஆலோசகர்களாக இருந்துள்ளனர். அதன்மூலம் பிராமணர்களுக்கு நில உரிமை உள்ளிட்ட வாய்ப்புகள் கிடைத்துச் செல்வாக்கடைந்தனர். அரசுக்கும் பிராமணருக்குமான இத்தகைய உறவில் பிராமணரை மட்டுமே அடையாளம் காட்டும் ஒற்றைச் சார்பு பார்வையே இங்கிருக்கிறது. மாறாக வட்டார அளவிலான அரசுகளுக்குப் பிராமணர்களைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? இதில் தமிழ் அரசுகளின், அதிகாரக் குழுக்களின் நோக்கம் என்ன? என்கிற கேள்விகளே எழுப்பப்பட்டதில்லை. உண்மையில் இவ்விசயத்தில் பிராமணருக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ தமிழ் மற்றும் தெலுங்கு சாதி அரசுகளுக்கும் பங்குண்டு.
நம் அரசின் அதிகாரத்தை மக்கள் ஏற்பதற்கும் எதிர்க்காமல் இருப்பதற்கும் இங்கிருந்த அரசுகளுக்கு கருத்தியல் தேவைப்பட்டது. அரசதிகாரத்தை புனிதமாக்குவதற்குப் பிராமணர்களின் ஆன்மீக அதிகார உதவி தேவைப்பட்டிருக்க வேண்டும். 
அரசமமைப்புக்குட்படாத அடங்காத குழுக்களை அடக்குவதிலும் சாதியமைப்பு இறுக்கமடைந்த பின்னால் அவற்றை அதிகார நலனுக்குட்பட்டதாக மாற்றிக் கொள்வதிலும் இராணுவ அமைப்பே எப்போதும் உதவியாய் இருந்ததில்லை. அத்தகைய இராணுவ அமைப்பைப் போரில்லாத காலத்திலும் காத்துவரக் கூடிய பலம் பெற்றவையாய் அரசுகள் இருந்ததில்லை. இவ்விடத்தில் அரசுகளுக்குப் புனித அதிகாரம் அதிகம் உதவியிருக்கிறது. பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரையிலான மன்னர்களாலும் பிந்தைய ஜமீன்தார்கள் மற்றும் பண்ணையார்கள் வரையிலும் நிலங்கள் உள்ளிட்ட தானங்கள் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டன. பிராமணர்கள் வழங்கும் இடத்தில் எப்போதும் இருந்ததில்லை. இவ்வாறு வரலாறு முழுக்க அவர்கள் வலுப்பெற்றிருந்ததே உள்ளூர் பிராமணரல்லாத அரசுகளாலும் குடிகளாலும்தான். பிராமணரல்லாதவர்களின் உள்ளூர் அதிகாரம் மற்றும் சாதி ஆதிக்கத்தை தக்க வைப்பதற்கான கருத்தியல் வடிவத்தை தந்தவர்கள் என்பதால்தான் இத்தகைய சலுகைகள். இவ்விருதரப்பாருக்கும் இடையே இவ்வித உறவே நிலவின. எனவே பிராமணர் எதிர்ப்பு குறித்து பேசும்போது வரலாற்று ரீதியாக மதத்திற்கும் சாதிக்குமான கூட்டுறவைப் பிராமணருக்கும் பிராமணர் அல்லாதாருக்குமான கூட்டாகவும் அவை இருந்ததையும் கணக்கில் கொண்டுதான் விமர்சிக்க வேண்டும். ஆனால் இன்றைக்குப் பிராமணரை மட்டுமே மொத்தப் பிரச்சினைக்குமான பொறுப்பாக்கி விமர்சிப்பது பிராமணரல்லாதாரின் நலன்களைக் காத்துக்கொள்ளும் உத்தி.

வரலாற்று ரீதியான இந்த உறவு நவீன காலத்தின் தொடக்கம்முதல் இன்றுவரை தொடர்கின்றது. இன்றைக்கும் இந்துமத அமைப்புகளின் நிர்வாகிகளாகவும் தங்களை உண்மையாகவே இந்துவாக உணரும் வாக்காளர்களாகவும் இருப்பது தமிழ் இடைநிலைச் சாதிகளேயாவர். ஏனென்றால் இங்கு சாதியுணர்வும் அதற்கான மத ஆதரவும் ஒன்றாகி இருக்கிறது. இந்திய அளவில் வழங்கப்படும் இன்றைய இந்து மதத்திற்கு வட்டார அளவில் வழங்கப்பட்டுவரும் சாதிய அமைப்புக்களே இராணுவப் பாதுகாப்பு. சாதியமைப்பை மதத்தின் புனித நூல்கள் நியாயப்படுத்துகின்றன. இவ்வாறுதான் மதத்திற்கும் சாதிக்குமான கொள்வினை கொடுப்பினை நிலவுகிறது. இரண்டையும் பிரித்தறிய முடிவதில்லை. தமிழ்ச் சூழலில் பிராமணர் எதிர்ப்புக்காக தங்களை இந்துக்கள் இல்லை என்று சொல்லிக்கொள்கிறவர்கள் கூட சாதி நடைமுறைகளிலிருந்து விலகுவதோ தங்களை இன்ன சாதி இல்லை என்றோ சொல்லிக் கொள்வதில்லை. மேலும், கடவுள் மறுப்பு பேசிக் கொண்டே தமிழ்ச்சூழலில் இந்துவாகவும் இருக்க முடியும். சாதி அந்த அளவிற்கு வலுப்பெற்றிருக்கிறது.
பிராமணர்கள் இன்றைய அளவில் கைக்கொண்டிருக்கும் அதிகாரத்திற்கு வந்தடைந்தது காலனிய காலத்தில் தான். காலனிய காலத்தில் நவீன அதிகாரம் உருவாகியபோது அதனை உடனடியாகக் கண்டு கொண்டு உள்நுழைந்தவர்கள் பிராமணர்களே. ஆனால் பிராமணர்களுக்கு கொடையளிக்கும் நிலையிலிருந்த உள்ளூர் உடைமை சாதிகள் இந்த புதிய அதிகார வருகையை தங்கள் அதிகாரத்திற்கும் கீழாகப் பார்த்தனர். ஆனால் உருவாகிவந்த புதிய அதிகாரம் தவிர்க்க முடியாதது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டபோது அதிகார நிலைகளில் பிராமணர்கள் நிறைந்திருந்தனர். இதை எதிர்த்துதான் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிராமணரல்லாத உடைமைச் சாதிகளால் பிராமணரல்லாதார் அமைப்புத் தொடங்கப்பட்டது. பிற்காலச் சோழர் காலம் முதலே பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்குமான அதிகாரத்திற்கான போராட்டம் நடந்து வந்ததின் தொடர்ச்சிதான் அது.
அதே வேளையில் காலனிய காலத்தில் உருவான சாதிய வரையறை பிராமணர்கள் பார்வையின் கீழ் நடந்தது. பிராமணர்களின் மனுதர்மம் என்கிற எழுத்து ஆவணம் சொல்லுகிற வர்ணசாதிய வரையறையை எழுத்தை ஆதாரமாகக் கொண்ட ஐரோப்பிய அதிகாரவர்க்கம் ஏற்று அதற்கு தகுந்தபடி இந்திய சமூத்தை புரிந்துகொள்ளவும் பகுத்துக்கொள்ளவும் விரும்பியது. இதற்கு எதிராகவும் அதில் இடம் பெறவும் இந்தியாவின் பல்வேறு வட்டாரங்களிலிருந்தும் பல்வேறு சாதிகளின் எழுச்சி நடந்தது. ஆனால் இத்தகைய புனிதப் பிரதிகள் வழியாக இந்து மதம் என்ற ஒன்றை ஐரோப்பியர் உதவியுடன் கட்டமைத்து, மதத்திற்கான தேசமாக உருவாகி வந்த இந்தியாவை இணைப்பதில் பிராமணர்கள் ஆர்வம் காட்டினர். இச்செயல்பாட்டிற்கு இந்திய தேசியவாதம் என்கிற நவீன சொல்லாடல் கை கொடுத்தது. அந்த வகையில் இந்தியாவின் உயர் அதிகார வர்க்கம் இன்றைக்கும் பிராமணர்களே. ஆனால் பல்வேறு சமூகங்களின் எழுச்சி, கல்வி, இந்தியப் பாராளுமன்ற தேர்தல்முறை, இடஒதுக்கீடு ஆகிய காரணங்களால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள சாதிகள் பலம் பெற்றுள்ளன. இப்போக்கு பிராமண சாதியின் இந்தியத் தன்மையை அசைத்திருக்கிறது. பிராமணர்களின் அதிகாரம் குலைந்துவிடவில்லை என்றாலும் அது முன்பு போலில்லை. அவர்களின் அதிகாரம் மேற்கண்ட சூழல்களால் பெருமளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிராமணரல்லாதவர்களின் எழுச்சி தவிர்க்க முடியாதது என்பதைப் பிராமணர்கள் அறிந்திருந்தாலும் தங்களின் முந்தைய அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று தீராத மனக்குறை அவர்களிடம் உண்டு. இந்தக் கோபம் திறமையின்மை, ஊழல், இடஒதுக்கீடு ஆகியவற்றிற்கான எதிர்ப்பாக வெளிப்படுகிறது. அதற்கான கருத்தியல் பரப்பு ஊடகங்கள் மூலமாகவும் உருவாக்கப்பட்டு வருகிறது. பிராமணர்கள் வாய்ப்பிருக்கும்போது உயர் அதிகாரத்தையும், வாய்ப்பில்லாதபோது பிராமணரல்லாத பெரும்பான்மையினரையும் அண்டி நின்று கொள்கின்றனர். அரசியல் ரீதியாக சாதி மறுப்பில் ஆர்வம் கொண்ட பிராமணரல்லாதார் போல பிராமணர்களும் உண்டு. மொத்தத்தில் பிராமணர்கள் ஆதிக்க சாதி களாகவே உள்ளனர்.

பிராமணரல்லாதார் எண்ணிக்கை பெரும்பான்மை சாதிகள்:

எண்ணிக்கை பெரும்பான்மைச் சமூகம் என்பது இடை நிலைச் சாதியினரே. இந்து மத ரீதியாக அடையாளப் படுத்த வேண்டுமானால் பிராமணர்களை 'மத இந்துக்கள்' (Religious Hindus) என்றும் இடைநிலை வகுப்பினரை 'சாதி இந்துக்கள்' (Caste Hindus) என்றும் அழைக்கலாம். இன்றைய சாதியமைப்பு கொள்கையளவில் இந்துமத எல்லைக்குள்ளிருந்து இயங்கி வந்தாலும் நடைமுறையளவில் இந்தியாவிலிருக்கும் பிற மதங்களையும் பற்றி நிற்கிறது. சாதி அமைப்பு மதத்திற்கு முந்தையதாக இருப்பதோடு மதத்தின் ஆசி பெறாமலும் இயங்க வல்லதானது என்கிற காரணத்தினால் இந்த அறிக்கை மேற்குறிப்பிட்ட இந்தச் சொல்லாடல்களில் இருந்து விலகி, சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு சாதி இந்துகள் எனப்படும் இடைநிலைச் சாதியினரின் அதிகார நிலைமையைப் பொறுத்து அணுகுகிறது.

மறவர், அகமுடையார், கள்ளர், கொங்கு வேளாளக் கவுண்டர், வன்னியர், நாடார், யாதவர் உள்ளிட்டோர் எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதியினர் ஆவர். இவர்கள் உடைமைச் சாதியினரின் ஏவலர்களாகவும் படையினராகவும் இருந்து அவர்களின் ஆதிக்கத்தைப் பாதுகாத்தவர்களாகவும் இருந்தனர். நவீன அரசியல் அதிகாரத்தினாலும் தேர்தல் முறையினாலும் திராவிட இயக்க அரசியல் ஆதாயத்தினாலும் ஆதிக்கம் பெற்ற சாதியினராக தற்காலத்தில் மாறி இருக்கின்றனர். அரசு மற்றும் உடைமைச் சாதியினரின் ஏவலர்களாக இருந்து வந்ததன் காரணமாக வன்முறைக்கு (Muscle Power) பழக்கப்பட்டிருந்ததினால் சமகால அரசியல் அதிகாரத்தையும் அதைப் பாதுகாப்பதற்கான வன்முறையையும் இயல்பாகக் கைக்கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள் இன்று ஆதிக்க சாதிகளாக மாறி இருப்பதில் வன்முறைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. கூட்டமாக சேர்ந்த தாக்குதல், மிரட்டுதல், பறித்தல், கொலை போன்றவற்றை கூறலாம். இது ஒரு வகையில் சாதி குழுவுக்கான வடிவமாகும். அரசியல் திரட்சி, வட்டித் தொழில், உள்ளூர் அதிகாரத்தில் பங்கெடுத்தல் போன்றவற்றில் இப்போக்கே அதிக செல்வாக்கு கொண்டிருக்கிறது. இந்நிலையில் சாதி அதிகாரம் மீறப்படும்போது உள்ளூரில் ஆதிக்க சாதி உடல் வன்முறையில் ஈடுபடுகிறது.

சமூக அதிகாரம், சமகாலத்தின் அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் வழியாக இவர்களே தலித்துகளை நேரடியாக ஒடுக்கி வருகின்றனர். காலனியத்திற்குப் பின்பான திராவிட அரசியலின் எழுச்சிக்குப் பின்பு பிற்படுத்தப்பட்டோர் என்ற அரசியல் அடையாளத்தின் மூலம் இட ஒதுக்கீட்டையும் சமூக மூலதனத்தையும் தனதாக்கிக் கொண்ட இந்தப் பிரிவினர் இந்தக் குறைந்த கால இடைவெளியில் பெரும் அதிகார சக்திகளாக மாற்றம் பெற்றுள்ளனர். இத்தகைய அதிகார மாற்றம் சாதி அமைப்பை குலைப்பதற்குப் பதில் அதை வலுவாக்கி இருக்கிறது. சாதிய வலிமையை தக்க வைப்பதே அதிகாரத்தை தக்க வைக்க பயன்படும் என்பதை இச்சாதிகள் தீவிரமாக உணர்ந்துள்ளன. இந்த வாய்ப்பு அதற்கு முன்பிருந்தே தாழ்த்தப்பட்டோர் என்கிற அடையாளத்தின் மூலம் வகைப்படுத்தப்பட்ட தீண்டப்படாத சாதிகளுக்கு கிடைக்கவில்லை. அது மறுக்கப்பட்டு வந்தது. இந்த முரண்பாட்டை இடஒதுக்கீட்டில் நடந்த ஏற்றத் தாழ்வுகள், திராவிட அரசியல் வழி நடந்த அதிகார மாற்றங்கள் ஆகியவற்றின் வழியே புரிந்துகொள்ள வேண்டும். இத்தகையப் போக்குகள் தென்னிந்திய அளவிலும் இந்திய அளவிலும் நிகழ்ந்துள்ளன என்பதை அண்மைக்கால ஆய்வுகள் காட்டுகின்றன. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிந்தைய இன்றைய நிலையில் பிற்படுத்தப்பட்டோர் என்ற வகையினத்தையும் அது பெற்றிருக்கின்ற அரசியல் மாற்றங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

எண்ணிக்கை பெரும்பான்மை சாதியினர்தான் இன்றைய அரசியல் - சமூக - பொருளாதாரத் தளம் எங்கும் ஊடுருவி அனைத்து வகை அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். உதாரணமாக தேர்தல் முறைமூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை எடுத்துக்கொண்டால் தொடக்க காலத் தேர்தல்களில் பிராமணர், வேளாளர், செட்டியார், முதலியார் உள்ளிட்ட உடைமைச் சாதியினர் அதிகமாகவும் இடைநிலைச் சாதியினர் குறைந்த அளவிலும் பங்கு பெற்றதைப் பார்க்க முடியும். ஆனால் படிப்படியாக உடைமைச்சாதியினரின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்து பெரும்பான்மைச் சாதியினரின் பிரதிநிதித்துவம் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம். இதில் பிராமணர்கள் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். உடைமைச்சாதியினர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். பெரும்பான்மை சாதியினர் மட்டுமே இன்று கோலோச்சி வருகின்றனர். இச்செயல்பாடுகள் அரசியல் தளத்தில் மட்டுமல்லாது சமூகப் பொருளாதார ஏகபோகத்திலும் தீவிரமாகப் பிரதிபலித்து வருகிறது.

சிறு ஏலம்முதல் பெரும் டெண்டர்வரை அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வரும் பெரும்பான்மைச் சாதியினரே கைப்பற்றிக் கொள்கின்றனர். அரசு சார்ந்த வளர்ச்சித் திட்டங்களும் நிதி ஆதாரங்களும் இவர்களின் சமூக மூலதனத்தைப் பெருக்கி இருப்பதோடு, அதன் லாபத்தை அரசியலுக்கும் நீட்டித்து அதிகாரத்தை மேலும் தக்க வைத்துக் கொள்ளப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலைக்குச் சவாலாக விளங்கும் அடித்தட்டு மக்களின் சமத்துவக் குரலை அடித்து, நசுக்கக்கூடிய நிலையை இச்சூத்திர சாதியினரே கைக்கொண்டுள்ளனர். இதில் பிராமணரல்லாத சாதிகள் என்கிற வகைமையும் அதில் அடங்கியுள்ள சாதிகளுக்கிடையிலான நலன்களும் ஒன்றுக்கொன்று முரணானவையாக இருந்த போதிலும் அவை மறைக்கப்பட்டு தலித்துகளை ஒடுக்குவதில் ஒரே கண்ணோட்டம் கொண்டவர்கள் என்ற முறையில் தலித்துகளை எதிரியாகக் காட்டி ஒருங்கிணைய முடிகிறது. தங்களுக்கிடையே முரண்பாடுகள் இருந்தாலும் தங்களுக்கு கீழாகக் கருதப்படும் சாதியினர் என்றும் மீட்சி பெறக் கூடாது என்பதில் ஒத்த கருத்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். இது சாதி முறை உருவாக்கியிருக்கும் உளவியல் ஆகும்.

பிராமணரல்லாத எண்ணிக்கை சிறுபான்மைச் சாதிகள்:
இதில் இரண்டு வகை உண்டு.

1) வேளாளர், ரெட்டியார், நாயக்கர், முதலியார், செட்டியார், உடையார் உள்ளிட்ட உடமைச் சாதியினர் முதல் வகையினர். இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதும் மன்னராட்சி நெருக்கம், சொத்துடைமை, சமூக அதிகாரம் ஆகிய காரணங்களினால் அதிகாரம் பெற்ற பிரிவினராக இருந்து வருகின்றனர்.

2) அதிகாரமற்ற சூத்திர சாதிகள் கம்மாளர், வேளார், கொசவச்செட்டி, வாணியச் செட்டி, மருத்துவர், ஒட்டர், பண்டாரம் போன்றவர்கள் இரண்டாம் வகையில் அடங்குவர். இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதிலும் தீண்டத்தக்க சாதிக்குழுக்களாகும். ஆனால் சமூக அளவில் அதிகாரமற்றவர்கள். சில இடங்களில் செல்வாக்காகவும் சில இடங்களில் வறிய நிலையிலும் உள்ள இவர்களில் பலர் உடைமைச் சாதியினருக்கும், சூத்திர சாதியினருக்கும் சேவை வகுப்பினராக செயல்படுகின்றனர். 'பிற்படுத்தப்பட்டோர்' பட்டியலுக்குட்பட்டு எத்தகைய அதிகாரங்களையும் இக்குழுக்கள் பெறவில்லை. அதிகாரத்திற்கான எண்ணிக்கை விளையாட்டில் மோசமாகக் காயம்பட்டவர்கள் இவர்கள். அதைப் போன்று அரசு மூலதனம் என்பதை நுகராத குழுக்களும் இவர்களே. ஒட்டு மொத்தத்தில் பிற்படுத்தப்பட்டோர் என்னும் ஒதுக்கீட்டினால் பயன்பெறாத (அரசியல், கல்வி, அதிகாரம், பொதுவளம்) குழுக்களாக இவர்களை அடையாளப்படுத்தலாம்.

இவை தவிர வேறு சில குழுக்களும் இன்றைய சாதியமைப்பில் கணக்கில் கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். பொது சமூகத்தில் கலக்காமல் தனித்து வாழும் பழங்குடிகள், சிறு சிறு இனக் குழுக்கள் போன்றவற்றை இவ்வாறு கூறலாம். இன்றைய அதிகாரத்தில் சிறிதளவு கூட இடம் பெறாத குழுக்களாக இருப்பினும் சிவில் சமூகத்தோடு இணைந்து வாழத் தொடங்கும் தருவாயில் ஏற்கனவே அங்கிருக்கும் சாதிமயப்பட்ட சமூகம் தலித்துக்கள் மீது பிரயோகிக்கும் தீண்டாமையை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் அதைப் பின்பற்றக் கூடியவர்களாக மாறிவிடுகின்றனர். இது இந்தச் சமூகத்தின் முக்கிய முரண்பாடாக சாதிதான் இருக்கிறது என்பதை மேலும் உறுதிபடுத்துகிறது. இந்நான்கு வகைக்குட்பட்டு மட்டுமே சாதிகள் இயங்குகின்றன என்ற இறுக்கமான விதிகள் ஏதுமில்லை. இதற்குள்ளே சிறு சிறு மாற்றங்களும் இருக்க முடியும் என்பதை ஏற்கிறோம். இந்த நான்கு வகைமைகூட எதிர்காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாகக்கூடும்.

மேலே சொல்லப்பட்டவர்களில் எண்ணிக்கை பெரும்பான்மை சாதிகளை தவிர்த்து மற்றவர்கள் இன்றைய ஜனநாயக முறையினாலும் திராவிட அரசியல் கருத்தினாலும் எண்ணிக்கை பெரும்பான்மை வாதத்தினாலும் அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாக உள்ளனர். எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அரசியலில் மேலோங்கி உள்ள சாதிப் பெரும்பான்மை வாதம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். அதற்கு எதிரான கோபம் வேளாளர் உள்ளிட்ட எண்ணிக்கை சிறுபான்மை ஆதிக்க சாதிகளிடம் இருந்தாலும் தலித்துகளோடு தங்களை இணைத்துக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. ஏனெனில் தங்களின் அதிகாரம் பெரும்பான்மை இடைநிலைச் சாதிகளால் பறிபோய்விட்டதால் இத்தகைய கோபம் கொண்டிருக்கிறார்களேயொழிய சாதி மறுப்புக் கண்ணோட்டத்தில் கோபம் கொண்டிருக்கவில்லை. தலித்துகள்மீது தீண்டாமையைப் பிரயோகிப்பதிலும் குறிப்பான சூழலில் தாக்குதலில் ஈடுபடுகிறவர்களாகவும் செயல்படுகின்றனர். பல தருணங்களில் பெரும்பான்மைச் சாதிகளோடு இணைந்து தலித்துகள் மீது தாக்குதல் தொடுப்பவர்களாகவும், தலித்துகளுக்கு எதிராகப் பெரும்பான்மை ஆதிக்க சாதிகளோடு அணி சேர்பவர்களாகவும் இருக்கின்றனர். ஒரு வகையில் இத்தகைய கூட்டு பெரும்பான்மை சாதிய வாதத்தின் வெற்றியாகவும் தலித் எதிர்ப்பு மனோபாவமாகவும் இருக்கிறது.

காலச்சுவடு, டிசம்பர் 2013 இதழில் வெளியான கட்டுரை

No comments:

Post a Comment