Saturday 10 March 2012

மாற்று ஊடகம் விடுதலைக்கான ஊடகமாக மாற வேண்டும்

மாற்று ஊடகம் விடுதலைக்கான ஊடகமாக மாற வேண்டும்

சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் மால்கம் ஆதிசேசையா நூற்றாண்டு விழாவின் ஒரு நிகழ்வாக, மூன்று நாட்கள் (சனவரி 25–27) தலித் ஆவணப்பட விழா மற்றும் ஓவியக் கண்காட்சி, சென்னை அடையாறில் நடைபெற்றது. இவ்விழாவில்தலித் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு, அதன் மீதான விவாதமும் நிகழ்த்தப்பட்டன. திரையிடப்பட்ட ஆவணப்படங்களின் இயக்குநர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்று விவாதித்தனர். இது, கடந்த பத்து ஆண்டுகளாக காட்சி ஊடகங்கள் மூலம் தலித் விடுதலைக்கான செயல்பாடுகள் குறித்த மதிப்பாய்வாக அமைந்தது.

இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற தியடோர் பாஸ்கரன், ஆவணப்பட வரலாற்றைப் பார்த்தால், முதலில் அது அரசு ஆட்சி குறித்த பரப்புரைக்காகவே பயன்படுத்தப்பட்டது. பின்னாட்களில் இந்த வடிவம் தனி நபர்களின் கைகளில் வந்தபோது அரசியல், பண்பாடு குறித்த ஆவணப்படங்களாக வெளிப்பட்டன. தலித் அரசியல் எழுச்சிக்குப் பிறகõன காலங்களில் சமூக செயல்பாட்டாளர்கள், ஆவணப்படம் என்ற வடிவத்தின் மூலம் சமூக அவலங்களை, சாதியின் கொடுமைகளை, தீண்டாமையின் உக்கிரங்களை ஆவணப் படுத்தினர்.

இன்றைய சூழலில் இது போன்ற ஆவணப்படங்களை ஒரு மாற்று காட்சி ஊடகமாகவும் நாம் பார்க்க முடிகிறது. எந்த ஓர் ஊடகமும் ஆதிக்கம் செலுத்தும்போது, அது கவனப்படுத்தாத விசயங்களை முன்னெடுக்க, மாற்று ஊடகம் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அந்த வகையில் இந்த ஆவணப்படங்கள் காட்சி ஊடக வெளியில் ஒரு மாற்றாக செயல்படுகின்றன என்றார்.

பேராசிரியர் மாதவ் பிரசாத்,திரைப்படத்திற்கான இயக்கத்திற்கும், இயக்கங்களுக்கான திரைப்படம் என்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. முதலாவது, திரைப்படத்தை மய்யப்படுத்துகிறது. இரண்டாவது, இயக்கச் செயல்பாட்டை முன்னிறுத்துகிறது. தலித் ஆவணப் படம் என்பதற்கான வரையறை தலித்துகளின் பிரச்சனைகளை படம்பிடிப்பது என்பதைக் கடந்து, வியாபார ஊடகங்கள் செய்யத் தவறியதை, கவனப்படுத்தாததை செய்யும் ஒரு ஊடகமாகத் திகழ வேண்டும் என்றார்.

ஆவணப்பட விழாவில் அறிமுக உரை நிகழ்த்திய முனைவர் லட்சுமணன், தமிழகச் சூழலில் திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான தொடர்பு, நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. திரைப்பட அரசியல், ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதும் திரைப்பட நடிகர்கள் அரசியல் பதவிகளை அடைந்ததும், திரைப்படம் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை உணர்த்துகிறது. ஆனால் அதே திரைப்படம், சமூக அக்கறை கொண்டவர்களின் கைகளுக்கு வரும்போது, அது விடுதலைக்கான ஊடகமாக மாறுகிறது.

அந்த வகையில் ஆவணப் படங்கள்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஊடகமாக செயல்பட்டு வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் ஆக்கத் திறன்களை அங்கீகரிப்பதும் சமூக நீதியே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் படைப்பையே ஒரு போராட்ட கருவியாக்குகிறார்கள்.இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்கள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. ஒரு படைப்பை படைப்பாளனின் சமூகப் பின்புலத்தைக் கொண்டு பார்க்காமல், அவனுடைய திறமையைக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம் என்றார்.

மாதிகா சமூகத்தினரின் வாழ்க்கையை விவரிக்கும் "மஹாதிகா' என்ற ஆவணப்படத்துடன் விழா தொடங்கியது. இந்தப்படத்தை சுரேஷ் மற்றும் சிந்து ஆகியோர் இயக்கியுள்ளனர். ஆதிக்க சாதியினரால் இழிவு என்று பழிக்கப்படும் பறையிசையின் முக்கியத்துவத்தை இப்படம் விளக்குகிறது. மாதிகா சமூகத்தினரிடம் இருக்கும் இசையறிவு, பறை செய்யும் முறை, ஓலைச்சுவடிகள் மூலம் தங்கள் சமூகத்தின் வரலாற்றைப் பாடும் முறை போன்ற தகவல்களின் மூலம் பிறர் கூறும் இழிவை அடித்து நொறுக்குகிறது.

"தலித் மீடியா நெட்வொர்க்' தயாரித்து ஆர். ஆர். சீனிவாசன் இயக்கிய "தீண்டத்தகாத நாடு' என்ற படம், தமிழகத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமைகளான கீழ்வெண்மணி, உஞ்சனை, தாமிரபரணி படுகொலை, மேலவளவு படுகொலை போன்ற சம்பவங்களைத் தொகுத்து, சாதி என்பது உலக அளவில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் என்பதை உணர்த்தியுள்ளது. மேலும் கோபால் மேனன் இயக்கிய Of Inhuman Bondage(2005), மற்றும் Resillient Rhythms (2006) கே.பி. சசி இயக்கிய Note from a crematorium,, ஜாஸ்மின் ராய் இயக்கிய Scavenging Dreams, ஆர். ஆர். சீனிவாசன் இயக்கிய "ஒரு நதியின் மரணம்', சிறீபாலா கே. மேனன் இயக்கிய "பந்தி போஜனம்', மூன்று பெண் கவிஞர்கள் குறித்து எடுக்கப்பட்ட அஞ்சலி மாண்டேரோ, கே. பி. ஜெய்சங்கர் இயக்கிய she write, கேரள மாநிலத்தின் செங்காரா பகுதியில் நிலத்துக்கான தலித் மக்களின் போராட்டத்தை விளக்கும் To Die for land : the Ulitimate Sacriflce என்ற ஆவணப் படம் போன்றவை திரையிடப்பட்டன.

ஆந்திராவில் மாதிகா சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கையான உள் ஒதுக்கீட்டுக்கான போராட்ட வரலாற்றை விளக்கும் "தண்டோரா' எனும் ஆவணப்படம் குறித்த விவாதத்தில் பேசிய ஆதவன் தீட்சண்யா, தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், இந்தப் படம் குறித்து விவாதிக்க நாம் தயங்குகிறோமோ என்று தோன்றுகிறது என்றார். மேலும் அவர் கூறுகையில் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்த விவாதம் எழுந்தபோதுதலித் சமூகத்தின் பிற சாதிகளான பறையர், பள்ளர் மத்தியிலிருந்து உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துப் போராட்டம் பெரிய அளவில் எழவில்லை.

இதைப் பார்க்கும் போது ஆந்திராவைப் போலன்றி தமிழகத்தின் பிற தலித் சாதிகள் ஜனநாயகத்தன்மையுடன் நடந்து கொண்டதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் ஒரு சிலர் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் போது தகுதி, தலித் ஒற்றுமை, தெலுங்கு பேசுபவர்கள் என்ற சொல்லாடல்கள் மூலம் முட்டுக்கட்டை போட முனைந்ததையும் நினைவு கூர்ந்தார்.

சாந்தா இயக்கிய "மேலவளவு' ஆவணப்படம் குறித்துப் பேசிய மா. வேலுச்சாமி, இந்தப் படம் சோகங்களையும், துக்கங்களையும் மட்டுமே பிரதானப்படுத்துவதாக உள்ளது. அதைத்தாண்டி தனது உரிமைக்காக உயிர்த் தியாகம் செய்த முருகேசனின் வீரத்தையும் பதிவு செய்திருக்க வேண்டும் என்றார். "கல் மனிதர்கள்' எனும் ஆவணப்படம், திண்டுக்கல் பகுதியில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் கொத்தடிமை நிலை, வேலையில் இருக்கும் ஆபத்துகள், பாலியல் கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர்களின் கல்வி போன்ற பன்முகப் பார்வை கொண்டதாக இருந்தது. கோபால் மேனன் இயக்கிய Resillient Rhythms என்ற ஒரு மணி நேர ஆவணப்படம், இந்திய அளவிலான தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பீகாரில் பூமிஹார் எனும் நிலவுடைமை ஆதிக்கச் சாதியினரின் ஆயுதப் படையான ரன்வீர் சேனா நிகழ்த்திய படுகொலைகளை ஆவணப்படுத்தியுள்ளது இந்தப் படம்.

இவ்விழாவின் முடிவில் சதானந்மேனன், ஆ. ரா. வேங்கடாசலபதி மற்றும்ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இந்த மூன்று நாள் தலித் ஆவணப்பட விழா குறித்து சதானந்மேனன் பேசுகையில், காட்சி ஊடகம் பரவலாகி வரும் இந்தச் சூழலில் ஆவணப்படங்கள் அதிகமாக வெளிவருவது வரவேற்கத்தக்கது. மேலும், பாலியல் வன்கொடுமை, படுகொலை, நிலமின்மை, அழுகை, சோகம், வறுமை போன்ற விசயங்களோடு நின்று விடுவதால், தலித்துகளின் பண்பாட்டு விசயங்களை நோக்கி ஆவணப்படங்கள் நகருவதில்லை என்றார்.ஒருவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் பிறர் அவனை அடையாளப்படுத்துவதற்கும் பெரியளவில் வேறுபாடு உள்ளது என்றார். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஆறு ஆவணப்பட விழாக்கள் நடைபெற்றுள்ளன. இது போன்ற விழாக்கள் ஆவணப்படத்திற்கான முக்கியத்துவத்தை மீண்டும் உறுதி செய்வனவாக அமைகின்றன.


இது போன்ற தலித் ஆவணப்படங்கள் தலித்துகளை படம் பிடிப்பதைவிட, ஒடுக்குபவர்களை, ஆதிக்கச் சாதியினரை படம் பிடிக்க வேண்டும். ஆதிக்கச் சாதியினரின் சாதிய மனதை விவரிக்கும் இதுபோன்ற படங்களின் பார்வையாளர்கள் தலித்துகளாக இருப்பதைவிட, ஆதிக்கச் சாதியினராக இருப்பதே பொருத்தமாக இருக்கும் என்றார்.

ஆனந்த் டெல்டும்டே தமது உரையில், இது போன்ற ஆவணப்படங்களை சமூக செயல்பாட்டின் ஒரு நீட்சியாகவே நான் பார்க்கிறேன். ஓர் ஆவணப்படம் எடுப்பதற்கு முன்பு அந்தப்படம் எதைப்பற்றியது, அதை எவ்வாறு மக்களுக்கு கொண்டு செல்லப் போகிறோம் என்பன போன்ற கேள்விகள் முக்கியமானவை. சமூக எதார்த்தம் என்பது புரிந்து கொள்பவர்களில் வேறுபடுகிறது. என்ன பார்வையில் ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம், யாருடைய பார்வையில் பார்க்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. இந்த ஆவணப்பட விழாவிற்கு Imagine Dalit Reality : Politics of Visual Representation என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தலித்துகளின் எதார்த்தத்தை காட்சிப்படுத்துதல் என்பதுதான் முன்பாதியின் பொருள். கற்பனை என்று ஒன்று இருந்தால்தான் காட்சிப்படுத்துதல் என்ற ஒன்றும் இருக்கும். தலித்துகளின் எதார்த்தம் என்னவாக இருக்கும் என்ற கற்பனை அனைவருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முறை ஏன் தலித் கலை விழா, தலித் இலக்கியம் என்று எதற்கெடுத்தாலும் தலித் என்ற முன்னொட்டை சேர்க்கிறீர்கள் என்று மராட்டிய எழுத்தாளர் விஜய் டெண்டுல்கர் வினவினார். அப்போது தலித் பேந்தர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான மஹாதேவின் மராட்டிய இலக்கியத்தை கொடுத்து வாசிக்கச் சொன்னபோது, முதல் பாதியை படித்துவிட்டு எதுவுமே புரியவில்லையே என்றார். அது தான் தலித் இலக்கியம். இதற்கென்று தனி அடையாளம் உண்டு. ஆகவேதான் தலித் என்ற முன்னொட்டை சேர்த்திருக்கிறோம் என்றோம்.

இந்திய சமூகத்தில் ஒருவன் எந்த அளவிற்கு அறிவாளியாக இருந்தாலும், அவன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று தெரியவந்தால், அவனது அறிவு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அங்கீகாரம் என்பது சமூகப் பின்புலத்தைக் கொண்டே வழங்கப்படுகிறது. தலித்துகளில் இடஒதுக்கீடு போன்ற உரிமைகளைப் பயன்படுத்தி முன்னுக்கு வரும் சிறு எண்ணிக்கையிலான தலித்துகள், தங்கள் சமூகத்திற்கு எதிரானவர்களாகவே நிற்கிறார்கள். அப்படியானால் மீதமிருக்கும் பெரும்பான்மையான தலித்துகளின் நிலைமை என்ன என்ற கேள்வியை முன்வைத்தார். 

தலித் முரசு ஜனவரி10 2010

-ஜெ. பாலசுப்பிரமணியம்