Tuesday 2 February 2016

கலக்கிட்ட வாத்தியாரே

கலக்கிட்ட வாத்தியாரே
திரை பிம்பம் எனும் பொறியில் சிக்கிய தமிழர்கள்

ஜெ.பாலசுப்பிரமணியம்

       எம்.எஸ்.எஸ். பாண்டியனின் The Image Trap: M.G. Ramachandran in Film and Politics புத்தகம் 1992 ஆம் ஆண்டு SAGE பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. The Image Trap எனும் ஆங்கிலத் தலைப்பை “பிம்பம் எனும் பொறி” என்று மொழி பெயர்தாலும் அதை விளக்கினால்தான் அதன் முழுமையான அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும். கதாநாயக பிம்ப உருவாக்கத்தின் மூலம் சாமானிய தமிழர்கள் எவ்வாறு பொறியில் சிக்கினார்கள் என்பதை விளக்கும் புத்தகம். பாண்டியன் அரசியற் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதால் எம்ஜிஆர் ஆட்சி காலத்தின் மாநிலத்தின் வருமானம் அதில் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பங்கு என்ன போன்ற புள்ளி விபரங்களை வைத்து ஆய்வை விளக்குகிறார். எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் மாநில வருமானத்தின் பெரும்பகுதி (60%) விற்பனை வரி மூலம் ஈட்டப்படுகிறது. இந்த வரி பெரும்பாலும் நடுத்தரவர்க்க மக்கள் வாங்கும் பொருட்களிலிருந்தே (சோப்பு, மருந்து பொருட்கள்) பெறப்படுகிறது. ஆனால் ஏழை மக்கள் அத்தியாவசிய பொருட்களில் மட்டுமே முக்கியத்துவம் தருவதால் மாநில அரசின் உள்நாட்டு வரியில் அவர்களின் பங்கு முக்கியமாகும். மாநிலத்தின் மொத்த வருமானத்தில்1980-ல் 1 சதவீதமாக இருந்த உள்ளூர் வரி கள்ளுக்கடை சாராயக்கடைகள் திறந்ததன் மூலம் 13.9 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்கள் செலுத்தும் நில வர், விவசாய உற்பத்தி வரி போன்ற நேரடி வருமானம் 4.6 சதவீதத்திலிருந்து (1975) 1.9 சதவீதமாக குறைந்தது. இதற்கு காரணம் வசதி படைத்தவர்கள் வர்விதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டும் கண்டுகொள்ளப்படாமலும் இருந்தனர். இப்படி பெறப்பட்ட வருமானத்தின் சிறிய பங்கு இலவச மதிய உணவு, இலவச பல்பொடி என்று ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது ஆனால் பெரும்பகுதி மானியமாக நிலவுடமையாளர்களுக்கு இலவச மின்சாரம், நீர்பாசன திட்டங்கள் என்று செலவிடப்பட்டன. இந்த புள்ளி விவரங்கள் நிரூபிக்கும் விசயம் என்னவென்றால் ஏழைகளின் இதயக்கனி என்று போற்றப்படும் எம்ஜிஆரின் ஆட்சி என்பது ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சரிகட்டும் விதமாக பணக்காரர்களிடமிருந்து வரிகளை பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை செய்யாமல் ஏழை மக்களின் மிச்ச சொச்ச பணத்தையும் வரியின் மூலம் வசதிபடைத்தவர்களுக்கு திருப்பியது. எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு பாதகமான பல விசயங்களை பட்டியலிடுகிறது பாண்டியனின் புத்தகம். பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது இந்த அரசு. இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன, காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர். விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது. 1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியைசேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது. எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கொமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும் நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது. இதைத் தழிவி எடுக்கப்பட்ட K. பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தை தடைசெய்ய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். மக்களின் ஆதரவிருந்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது.




      மேற்சொன்ன பாதகமான பலவிசயங்களுக்கு ஒரு மாநிலத்தின் முதல்வராக எம்ஜிஆருக்கு பொறுப்பு உண்டு. ஆனால் அன்று மக்களிடம் எம்ஜிஆரின் செல்வாக்கு இம்மியளவும் குறையவில்லை. இதன் பின்னனி அவரின் 40 வருட திரை வாழ்க்கையில் அவர் நடித்த 136 திரப்படங்களில் இருக்கிறது. எம்ஜிஆரின் இந்த ஏழைகளின் நண்பன் எனும் செல்வாக்கு முழுக்க திரைபிம்பத்தின் மூலம் மக்கள் மனதில் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும். இலங்கை கண்டியில் பிறந்து நாடகக் கலைஞராக தொடங்கி 1936-ல் சதிலீலாவதி மூலம் திரையில் அறிமுகமானார். 1953-ல் திமுகவில் சேர்ந்த பின்பு அவரது படங்கள் அரசியல் பேச ஆரம்பித்தன, 1962-ல் அவர் சென்னை சட்டமன்ற எம்.எல்.சி ஆனபின்பு பிரச்சார சினிமா உத்தி கையாளப்பட்டது. அவரது படங்களின் மையக்கரு ஏழைகளின் மீட்பராக உருவாக்கப்பட்டது. விவசாயி படத்தில் ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் வில்லன் அதை தடுக்கும் கதாநாயகன் (மன்னிக்கவும் எம்ஜிஆர்). எங்கவீட்டுப்பிள்ளையில் பணக்கார கோழை எம்ஜிஆரை கொடுமைபடுத்தும் வில்லன், அதை தடுக்கும் வீரமான ஏழை திருட்டு எம்ஜிஆர். படகோட்டியில் ஏழைகளை உறிஞ்சும் வட்டிக்காரர்கள் அதில் ஏழைகளை காப்பாற்றும் படித்த வீரமான எம்ஜிஆர். இப்படி தீயசக்திகளை தனது தனிமனித சாதனைகள் மூலம் முறியடித்து ஏழைகளை காப்பாற்றும் எம்ஜிஆரை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். எம்ஜிஆரின் படங்கள் மூன்று விசயங்களை மய்யப்படுத்துகிறது அதாவது ஒன்று, அநீதி ஒன்றை கட்டமைத்து அதை வன்முறை மூலமாக அடித்து நொறுக்கி நீதி வழங்கும் எம்ஜிஆர்,  இரண்டு, எவ்வளவு கஷ்டப்பட்ட அல்லது கிராமத்து குடும்பத்தை சேர்ந்த கதாநாயகனாக இருந்தாலும் படித்து அறிவாளியாக உள்ள எம்ஜிஆர், மூன்று, எப்பேர்பட்ட பணக்கார, உயர்சாதி, படித்த, அழகான, கர்வம் பிடித்த பெண்ணாக இருந்தாலும் அதை அடையும் எம்ஜிஆர். இப்படி அடித்தட்டு மக்களுக்கு மறுக்கப்படும் நீதி, கல்வி, காதல் அனைத்தையும் அந்த மக்களின் பிரதிநிதியான எம்ஜிஆர் அடைகிறார். இப்படி இருந்ததால்தான் முன்வரிசையில் மணலை கூட்டிவைத்து டூரிங்க் தியேட்டரில் படம் பார்த்த ஒரு பார்வையாளன் ‘நம்மாளு கலக்கிடாருப்பா’ என்று சொல்ல முடிந்தது. எம்ஜிஆர் படங்களில் பெண்கள் குறித்த சித்த்ரிப்பு மிகவும் பிற்போக்காக இருந்தது. விவசாயி படத்டின் “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள; இங்கிலீஸீ படிச்சாலும் இந்த தமிழ் நாட்டுல” என்ற ஒரு பாடல் இதற்கு உதாரணம் போதும். உலகம் சுற்றும் வாலிபனின் நிலவு ஒரு பெண்ணாகி என்று தொடங்கும் பாடலில் “மடல் வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க” என்ற பாடல் பெண்ணுடல் வர்ணிப்புக்கு மற்றொரு உதாரணம்.


      தமிழகத்தில் சினிமா ஒரு வெகுஜன ஊடகமவதற்கு சாதகமான பல காரணிகளை கூறமுடியும். இங்கிருந்த நாடக, கூத்து மரபு. இந்தியாவிலேயே அதிகமான திரையரங்குகள் தமிழ்நாட்டில்தான் இருந்தன, 1986-ல் 2,153 திரையரங்குகள் இருந்தன இதில் டூரிங்க் டாக்கீஸ்களின் எண்ணிக்கை 320. இங்கிருந்த நாட்டுபுற கலைகளில் இருந்த சாதி வேற்றுமை என்பது திரையரங்குகளில் கிடையாது, யார் வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் உட்காரலாம். திரையரங்கில் அனைவரும் சமம். திரையரங்குகளுக்கான டிக்கெட்டுகளும் மிகவும் குறைவாகவே இருந்தது. எம்ஜிஆர் ரசிகர்கள்தான் இன்றைய கட்டவுட், பாலபிஷேகம், கைகளில் கற்பூரம் ஏற்றுவது போன்ற எல்லா சடங்குகளுக்கும் முன்னோடிகள். திரைப்படமும் இந்துமத சடங்குகளும் இணைந்தன. சரி சினிமா ஒருவரை கதாநாயகர் என்று சொல்கிறது என்றால் மக்கள் ஏன் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் என்ற கேள்வி எழுவது இயல்புதான். எந்த ஒரு புதிய பண்பாட்டு வரவும் இங்குள்ள பண்பாட்டுடன் இணைவது அல்லது போலச்செய்வது மூலமே மக்களோடு இணைய முடிந்தது. அதாவது கதாநாயக போற்றுதல்/வழிபாடு என்பது ஏற்கனவே தமிழ் மரபில் வாய்மொழி மரபுக்கதைகளாக நிலவிவந்த ஒன்றுதான். சாகசங்கள் புரிந்த பலியாகி அடித்தட்டு மக்களின் நாட்டுப்புற கதாநாயகர்களான காத்தவராயன், முத்து பட்டன், சின்னதம்பி, மதுரை வீரன் போன்ற கதைகளின் மூலம் புரிந்து இந்த மரபை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் எம்ஜிஆரின் திரைப்படங்கள் இந்த நாட்டுப்புற கதாநாயகர்களின் அப்படியே பிரதிபலிக்கவில்லை அதாவது நாட்டுபுற கதாநாயகர்களை வழிபடும் மக்களும் அந்த கதாநாயகனும் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் இங்கு திரை கதாநாயகன் இல்லாதவனாக இல்லை. இந்த சமூகத்தை பிரதிபலிக்கும் கதாபத்திரத்தை தேர்ந்தெடுத்தாலும் சாதாரண மக்களுக்கு கிடைக்காத சில தன்னிடம் உள்ளவனாக இருக்கிறான். மக்கள் சார்ந்த செயல்பாட்டிலிருந்து பிரித்தெடுத்து எல்லாம் பெற்ற தனிநபர் இந்த மக்களை மீட்பார் என்றே திரையில் காட்டப்பட்டது. ஒரு தாழ்ந்த சாதி அல்லது வஞ்சிக்கப்பட்ட அல்லது உழைப்பு சுரண்டப்பட்ட ஒரு பார்வயாளன் தன்னை எம்ஜிஆர் தனது வீரத்தின் மூலம் மீட்பார் என்று நம்பினான். அதாவது மானத்தை வீரத்தின் மூலம் காப்பாற்றுவது, குறிப்பாக பெண்களின் மானத்திற்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் எம்ஜிஆர் சண்டையிட்டு காப்பாற்றுவது. அதையும் மிகவும் சாதாரணமாக செய்வது, அதாவது ஆயுதமுள்ள வில்லனிடம் நிராயுதபணியாக சண்டையிடுவது, ஒரு கையை பின்னால் மடக்கிக் கொண்டு ஒற்றைக் கையால் சண்டையிடுவது, சிலம்பம் சுற்றுவது என்று அவரின் வீரம் செலுமைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது.




       எம்ஜிஆரின் படத்தில் அவர் வெல்லமுடியாதவராக சாகாவரம் பெற்றவராக பார்க்கவே அவரது ரசிகர்கள் விரும்பினர்.1962-ல் வெளியான பாசம் எனும் படத்தில் எம்ஜிஆர் பாத்திரம் இறந்துபோனதால் அந்தப்படம் தோல்வி அடைந்தது. கம்பீரமாக கையை மடித்து விட்ட சிகப்பு சட்டை, அதிகாரம் படைத்த வில்லன்களுக்கு சவால் விடும் வசனம், கையை மார்பில் கட்டி நிமிர்ந்து நிற்கும் உடல் மொழி இப்படி ஒவ்வொரு விசயங்களும் அவர் மக்களை காப்பற்ற வந்தவர் என்பதை சொல்வதாக அமைந்தன. எம்ஜிஆர் என்ற தனி மனிதன் என்பதைத் தாண்டி எம்ஜிஆர் எனும் கருத்து (Idea) உருவானது. இந்த கருத்து உருவாக்கத்தில் பாடல்கள் மிகவும் முக்கியபாத்திரம் வகித்தன. மலைக்கள்ளன் படத்தின் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே”, உழைக்கும் கரங்கள் படத்தின் “உழைக்கும் கைகளே; உருவாக்கும் கைகளே” நம்நாடு படத்தின் “வாங்கைய்யா வாத்தியாரைய்யா; வரவேற்க வந்தோமைய்யாஇந்தப் பாடல்கள் எல்லாம் அதை எழுதிய கவிஞர்களால் அறியப்படாமல் எம்ஜிஆரின் தத்துவப்பாடல்கள் என்றே புரிந்துகொள்ளப்பட்டது. இது அவர் மக்களுக்கு சொல்லும் செய்தியாக பார்க்கப்பட்டது. எம்ஜிஆருடன் உணர்வுரீதியாக மக்கள் பிணைக்கப்பட்டனர். இந்தப்பாடல்கள்தான் இன்றளவும் அ.தி.மு.க. வின் தேர்தல் பிரச்சாரப்பாடல்களாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் தொடர்சியாக அகில இந்திய எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. 1972-ல் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பின்பு ரசிகர்கள் கட்சி தொண்டர்களானார்கள். 1977-ல் தொண்டர்கள் எம்.எல்.ஏக்களானர், மந்திரிகளானார்கள். அதிலிருந்து 11 ஆண்டுகள் அ.தி.மு.க. செல்வாக்கு என்பது எம்ஜிஆரின் செல்வாக்காகவே நிலைத்தது. திமுக பலமுறை அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சாட்டியும் எம்ஜிஆரை எதுவும் செய்யமுடியவில்லை. ஆனால் தாமாகவே முன்வந்து கருப்பு பணத்தை ஒப்படைக்கும் திட்டத்தில் எம்ஜிஆரே முன் வந்து தன்னிடமுள்ள 80 லட்சம் ரூபாயை ஒப்படைத்தார். எம்ஜிஆர் எனும் தனி நடிகர் தமிழ் மக்களின் மீட்பர் எனும் கருத்தாக மாறிப்போனார். 24 டிசம்பர் 1987-ல் எம்ஜிஆர் இறந்தபோது சென்னையில் 20 லட்சம் பேர் கூடினர். தமிழகத்தின் குக்கிராமங்களிலிருந்தும் எம்ஜிஆருக்கு இறுதிமரியாதை செலுத்த சென்றனர். இறுதிமரியாதை செலுத்த முடியாதவர்கள் அவரது படத்தை வைத்து அனைத்து சாவு சடங்குகளும் செய்தனர்.



       இந்த புத்தகம் எம்ஜிஆரை மட்டுமே மையப்படுதினாலும் இன்றைய அரசியல் சீர்கேட்டின் ஒட்டுமொத்த பலியையும் எம்ஜிஆரின் மீது மட்டுமே போட்டுவிட முடியாது. திரைப்படத்தில் அனைத்தையும் கதாநாயகனுக்கு தந்துவிட்டு திரைக்குப் பின்னால் இருந்து கதாநாயகனை இயக்குபவர்களை வசதியாக மறந்துவிட கூடாது. திமுகவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சரியான காலத்தில் பொருத்தமான ஊடகமாக சினிமா பயன்படுத்தப்பட்டது. ஒரு புதிய அரசியல் இயக்க உருவாக்கம் என்பது மாற்றத்திற்கான திட்டங்களை மக்களிடம் பிரச்சாரப்படுத்தி அதன் மூலம் மக்களை திரட்ட வேண்டும். இதற்கு ஊடகங்கள் மிகவும் முக்கியம். வரலாற்றைப் பார்க்கும் போது புதிய இயக்கங்கள் உருவாக்கத்தில் பத்திரிக்கைகள், பிரசுரங்கள், வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல திமுக உருவாக்கத்திலும் சினிமா மூலம் முற்போக்கு கருத்துக்கள் பரப்பப்பட்டன. ஆனால் கட்சியே முற்போக்கு கருத்துகளைவிட மக்களை கவரும் ஒப்பனை பிம்பங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தது. கட்சிக்கூட்டங்களில் அண்ணா தவறாமல் எம்ஜிஆருக்கு இடமளித்தார். ஆனால் இந்த கதாநாயக முக்கியத்துவத்தை எதிர்த்து கட்சியில் குரல்கள் எழும்பாமல் இல்லை. ஈவிகே சம்பத் திமுகவிலிருந்து வெளியேறி தமிழ் தேசியக் கட்சியை ஆரம்பித்ததற்கு அடிப்படைக் காரணம் கட்சித்தலைமை சினிமாக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான். அன்றிலிருந்து இன்றுவரை சினிமாவையும் தமிழ் சமூகத்தின் அரசியலையும் பிரிக்க முடிவதில்லை. கடவுள் இல்லை, சாதிவேற்றுமை இல்லை, ஆண்பெண் பேதமில்லை என்றெல்லாம் பெரியாரிடம் கற்று வந்தவர்கள் சினிமா என்பது பிம்பமே அது நிஜமல்ல என்பதை மட்டும் ஏனோ மக்களுக்கு சொல்ல மறந்துவிட்டனர். அதன் விளைவை இன்றுவரை தமிழ் சமூகம் எதிர்கொண்டுதான் இருக்கிறது.