முக்கியக்
குறிப்பு: இந்தக்கட்டுரை இரண்டு பெருமைகளை உள்ளடக்கியது.
பெருமை
1:
தத்துவம், கடவுள், படையெடுப்பு, ஆட்சி, புத்தகம், முத்தம், கம்யூனிஸ்ட் இப்படி சாதாரணமாக
தொனிக்கும் எந்த வார்த்தைக்கு முன்னாலும் முதல் என்ற முன்னொட்டைச் சேர்த்துவிட்டால்
அது வரலாற்றைக் குறிக்கும் முக்கியமான சொல்லாடலாக மாறிவிடுகிறது. எதையும் முதல் என்று
சொல்வதில்தான் என்ன ஒரு அலாதி மகிழ்ச்சி. இந்த முதல் என்பது முதல்தான் அதற்கு முந்தையது
ஒன்றை கண்டுபிடிக்கும் வரை. புதிய ஆதாரங்கள் கிடக்கும் போது பழைய முடிவுகள் மறுபரிசீலனைக்கு
உள்ளாக்கப்படும், இதுவே வரலாற்று விதி.
பெருமை
2:
இதுவரை வெளிவராத, இதுவரை கண்டிராத, இதுவரை உணர்ந்திடாத என்று சொல்வதில்தான் எவ்வளவு
போதை இருக்கிறது. இப்பூவுலகத்திலே இதற்கு முன் யாராலும் இந்த தகவல் அனுபவிக்கப்படவில்லை.
இப்போது புத்தகம் எழுதுபவர்களும் குறிப்பாக ஆவணங்களை மய்யப்படுத்தி எழுதப்படும் வரலாற்றுப்
புத்தகங்களில் முக்கியமாக ஒரு குறிப்பை காணமுடியும். அது, “இதுவரை வெளிவராத ஆவணங்களின்
துணைக்கொண்டு எழுதப்பட்டது”. ஆம் இந்தக்கட்டுரையும் அப்படித்தான். வெளிவராத புதிய தகவல்களைக்
கொண்டுள்ளது.
சூரியோதயம்
(1869)
இதுவரை கிடைத்த முதன்மை ஆதாரங்களின்படி
பார்த்தால் 1869-ல் திருவேங்கிடசாமி பண்டிதர் என்பவரால் தொடங்கப்பட்ட சூரியோதயம் இதழ்தான் முதல் தலித் இதழ் என்ற
முடிவுக்கு வர முடிகிறது. அயோத்திதாசர் தனது தமிழன் இதழில் தலித் அறிவாளிகள் குறித்து
குறிப்பிடும்போது "இச்சென்னை ராஜதானியில் ஆதியாகத் தமிழ்ப்பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டவர்களும்
இக்குலத்தோர்களேயாகும். அதாவது புதுப்பேட்டை திருவேங்கிடசாமி பண்டிதர் 'சூரியோதயப்பத்திரிக்கை'
என்னும் ஒன்றை வெளியிட்டிருந்தார். இரண்டாவது சுவாமி அரங்கையாதாஸவர்களால் 'சுகிர்தவசனி'
என்னும் பத்திரிக்கை வெளியிட்டிருந்தார். மற்றும் இக்குலத்தோருள் அனந்த பத்திரிக்கைகளும்
புத்தகங்களும் வெளிட்டிருக்கிறார்கள். நாளதுவரையிலும் வெளியிட்டும் வருகின்றார்கள்"
என்கிறார்.[i] மற்றொரு
கட்டுரையில் அயோத்திதாசர் "இச்சென்னையில் பர்ஸீவேலையர்[ii] தமிழ்ப்பத்திரிக்கை
வெளியிடுவதற்கு முன் புதுப்பேட்டையில் 'சூரியோதயப்பத்திரிக்கை' யென வெளியிட்டு வந்த
திருவேங்கிடசாமி பண்டிதரால் சித்தர்கள் நூற்களையும் ஞானக்கும்மிகளையும், தேரையர் வைத்தியம்
ஐந்தூரையும், தன்விந்தியர் நிகண்டையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்".[iii] என்று
குறிப்பிடுகிறார். இதிலிருந்து சூரியோதயம் பத்திரிக்கையை நடத்திய திருவேங்கிடசாமி பண்டிதர்
பத்திரிக்கை மற்றும் பதிப்புப்பணிகளிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தது புலப்படுகிறது.
இந்த இதழ் ஒன்றுகூட பார்வைக்கு கிடைக்கவில்லை. இந்தியமொழி பத்திரிக்கைகளின் அறிக்கைப்படி
(Native Newspapers Report) இந்த இதழ் சென்னை புதுபேட்டையிலிருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்த
முடிகிறது.[iv]
சுகிர்தவசனி
(1872)
சுவாமி அரங்கையாதாஸ் அவர்களால்
1872-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[v]ராயப்பன்
என்பவருக்கு சொந்தமான, எண். 28, நைனப்பன் தெரு, பிளாக் டவுண், மெட்ராஸ் எனும் முகவரியில்
செயல்பட்டு வந்த சுகிர்தவசனி அச்சகத்தில் இந்த இதழ் அச்சிடப்பட்டது. 1873-ஆம் ஆண்டு
இதன் விற்பனை எண்ணிக்கை 250 ஆக இருந்துள்ளது.[vi] அயோத்திதாசர்
இந்த இதழ் குறித்து எழுதிய குறிப்பிலிருந்து[vii] இது
ஒரு தலித் இதழ் என்ற முடிவுக்கு வர முடிகிறது. 1872-ஆம் ஆண்டின் இந்திய மொழி பத்திரிக்கை
அறிக்கையில் இந்த இதழில் வெளி வந்த சில செய்திகளின் சுருக்கம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு
பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இதழில் வெளிவந்த நான்கு செய்திகள் கிடைக்கின்றன. இந்த
தகவல்களிலிருந்து இந்த இதழின் சமூக அரசியல் பார்வை குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த இதழ் முற்போக்கு கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்துள்ளது. குறிப்பாக மூட நம்பிக்கை
ஒழிப்பு, கடவுள் மறுப்பு, சமூக சீர்திருத்தம் போன்ற விசயங்களில் தீவிரமாக செயல்பட்டு
வந்துள்ளது புலப்படுகிறது. உதாரணமாக ஒரு கட்டுரையில் வள்ளலாரின் (இராமலிங்க அடிகள்-1823-1874)
தெய்வீக சக்தி குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது, வள்ளலார் தனது சக்தியை விஞ்ஞான ரீதியாக
நிரூபிக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார் கட்டுரையாளர்.
இந்துமத அடிகளாரான இராமலிங்கப்பிள்ளை
இறந்தவரை பிழைக்க வைப்பேன் என்று உறுதிகூறி வந்தார். ஆனால் ஒரு மாதமாகியும் எதுவும்
நடக்கவில்லை. அறியாமையிலிருக்கிற பல இந்துக்கள் இவரின் வாக்குறுதியை நம்பி தங்கள் வேலைகளை
துறந்துவிட்டு இவருக்காக காத்திருக்கின்றனர். பாவப்பட்ட விதவைகள் இறந்துபோன தங்கள்
கணவர் திரும்ப கிடைப்பார் என்ற நம்பிக்கையில் பெருங்கூட்டமாக கூடியிருக்கின்றனர். இவரை
பின்பற்றுபவர்களில் ஒருவர் இவரின் ஆசி பெறுவதற்காக தனது அரண்மனையை விட்டு ஒரு குடிசையில்
காத்துக்கிடக்கிறார். இராமலிங்கம் அவர்கள் இறந்தவரை உயிர்பிக்கும் செயலை நிரூபிக்கும்
வண்ணம் ஒரு காய்ந்த இலையை மீண்டும் பச்சையாக்குவாரா என்று கேட்கிறோம்.[viii]
அடுத்த செய்தி விதவை மறுமணத்திற்கு
ஆதரவாக பேசுகிறது அந்த செய்தியில், பம்பாயில் ஒரு பள்ளியில் வேலைபார்க்கும் ஒரு விதவை
ஆசிரியை மறுமணம் செய்து கொண்டார் என்பதற்காக அந்தப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள்
பள்ளிக்கு வராமல் நிறுத்தப்பட்டனர். உறுதியாக பெண்கள் சாதிக்கட்டுபாடுகளை மீறுவதாலும்
சாதியை துறப்பதாலும் அவரின் கற்றுக்கொடுக்கும் திறன் எந்தவிதத்திலும் குறைந்து போகாது.[ix]
மற்றொரு செய்தி நாடகங்கள் மற்றும்
புத்தகங்களை தடைசெய்யக்கோரும் செய்தியில், டம்பாசாரி விலாசம் நாடகத்தை அரசாங்கம் தடை
செய்ததில் சுகிர்தவசனி மிக்க மகிழ்சியடைகிறது, அதேபோல சிந்து, கோவை, தெம்மாங்கு போன்ற
பாடல்களுக்கும் அரசாங்கம் இது போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும். இளம்வயதினரை கெடுக்கக்கூடிய
புழக்கத்தில் உள்ள இந்த புத்தகங்களை அழித்துவிட வேண்டும். தருதலை விலாசம் எனும் புதிய
நாடகமொன்று தயாராகிக் கொண்டு இருக்கிறது. இதன் பெயரே இது டம்பாச்சாரி விலாசத்தைவிட
மோசமானதாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. இந்த நாடகத்திற்கான நடிகர்கள் இப்போது
நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வெளிவருவதற்கு முன்பே இதை தடைசெய்ய அரசாங்கம்
நடவடிக்கை எடுத்தால்தான் இதன் மேனேஜர் பிரச்சனைகளில் மாட்டாமல் இருக்கவும் வீணான செலவுகள்
ஏற்படாமல் தவிக்கவும் முடியும்.[x]
அறிக்கையில் (1873) கிடைக்கும்
நான்காவது செய்தி ஒருசில புத்தகங்களையும் பாடல்களையும் தடைசெய்யக்கோருகிறது. இந்தப்
பாடல்களில் ஆபாசமான வார்த்தைகள் நிறைந்திருப்பதாக [அரங்கையாதாஸ்] கூறுகிறார், என்ற
குறிப்பு மட்டுமே கிடைக்கிறது. ஆனால் கிடைத்திருக்கும் இந்த நான்கு செய்திகளைக் கொண்டு
சுகிர்தவசனி இதழ் குறித்து நம்மால் சில முடிவுகளுக்கு வர முடிகிறது. இந்த இதழ் மூடப்பழக்கவழக்கங்களுக்கு
எதிராகவும், முற்போக்கு சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்பவும், கலைப்படைப்புகளிலும்
தனது கருத்தை உறுதியாகவும் எடுத்துக்கூறியுள்ளது. இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலத்திலேயே
அவரின் தெய்வீக சாகசங்கள் குறித்து விமர்சனம் செய்துள்ளது இந்த இதழின் துணிவைக்காட்டுகிறது.
சுகிர்தவசனியில் வெளிவந்த இந்த விமர்சனங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாக பயன்படுத்தும்
அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது இராமலிங்க அடிகளின் அருட்பாவிற்கு எதிர்வினையாக
மருட்பா எனும் நூல் கதிரைவேல் பிள்ளையால் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து இராமலிங்க
அடிகளாரின் தம்பி தனராய வடிவேல் பிள்ளை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த
வழக்கில் கதிரைவேற் பிள்ளைக்கு ஆதரவாக சுகிர்தவசனியில் வெளியான இரமலிங்க அடிகளார் குறித்த
விமர்சனங்கள் பயன்படுத்தப்பட்டன.
வீ.அரசு மற்றும் ஆனைமுத்து ஆகியோர் தனித்தனியாகத் தொகுத்து வெளிவந்துள்ள 'தத்துவவிவேசினி' இதழே முதல் நாத்திக இதழ் என்று அறியப்படுகிறது. P.முனுசாமி என்பவரால் 1878-ஆம் ஆண்டு 'தத்துவவிசாரிணி' என்று பெயர் மாற்றம் பெற்று 1888 வரை வெளிவந்தது. இதற்கு ஆறு வருடங்களுக்கு முன்பே வெளிவந்த சுகிர்தவசனியில் முற்போக்கு கருத்துகளும் நாத்திக சிந்தனைகளும் வெளிப்பட்டுள்ளது உறுதியாகிறது. ஆகவே இனி நாத்திக இதழ்கள் என்று பேசுபோது சுகிர்தவசனி இதழையும் கணக்கில் கொள்ளவேண்டும்.