Saturday 30 January 2016

மேலிருந்து கீழாகச் சரியும் உயர்கல்வி

மேலிருந்து கீழாகச் சரியும் உயர்கல்வி

ஜெ.பாலசுப்பிரமணியம்


   பல்கலைக்கழகங்கள் என்பவை பலகலைகளைப் பயிற்றுவித்து வெறும் பட்டங்களை வழங்கும் கழகங்கள் மட்டுமல்ல. அது சமூக அக்கறை கொண்ட விமர்சனப்பூர்வமான சமூக அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சமூகத்தின் சமநிலையற்றத் தன்மையை மாற்ற துணைபுரியக் கூடியவைகளாகவும், அரசாங்கத்திற்கு சமூகம், அறிவியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற துறை சார்ந்த அறிவுரைகளை வழங்கக்கூடிய அறிவுக்கூடாரங்களாகவும் திகழவேண்டும். உலக வரலாற்றில் அரசியல், சமூக மாற்றத்தில் பல்கலைக்கழகங்களுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. கல்விப்புலம் சாராத சிந்தனையாளர்கள் பலர் நம்மிடையே உண்டு என்றாலும் சிந்தனையின் முதலிடம் அதுதான், சீர்திருத்தத்தின் விருப்பம் அங்குதான் உருவாக்கப்படும், சமத்துவத்தின் குரல் அங்கிருந்துதான் எழும். இதற்காகத்தான் பல்கலைக்கழக வளாகங்களை சுதந்திரமான வளாகங்களாகப் பார்த்துக்கொண்டனர். அங்கு மாணவரகள் ஜனநாயக ரீதியாக தாங்கள் நம்பும் கருத்தியல்களை பரிசோதித்துப் பார்க்கும் களமாக இருக்க வேண்டும். சமூகத்தில் கற்பிக்கப்பட்ட ஆண் பெண் பாலின வேறுபாடுகளை களையும் இடமாக இருக்க வேண்டும். சாதியை நொறுக்கும் தளமாகவும் மதத்தை கேள்விக்குள்ளாக்கும் இடமாகவும் இருக்க வேண்டும்.
தமிழக உயர்கல்வியின் கவலைக்கிடமான நிலை குறித்த ஊடகங்களின் மூலம் ஓரளவு எல்லோரும் அறிந்திருப்பார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. துணைவேந்தர் நியமனங்கள், பேராசிரியர் வேலை நியமனங்கள், முனைவர் பட்ட ஆய்வுகள் நடக்கும்விதம், அறிவுத்திருட்டு ஆய்வுகள், தொலைதூரக்கல்வி நிலையங்களில் வழங்கப்படும் அவசர அட்டைகள் (பட்டங்கள்), பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், பல்கலைக்கழகத்தின் மோசமான் நிர்வாகத்தை விமர்சிக்கும் பேராசிரியர்களை பழிவாங்கும் போக்கு இப்படி பல பிரச்சனைகள் குறித்து சமீப காலமாக நாம் செய்தித்தாள்களில் படித்து வருகிறோம். என்னதான் நடக்கிறது பல்கலைக்கழகங்களில்.




பல்கலைக்கழக நிர்வாக பதவிகள் அனைத்துமே அரசியல் நியமனங்களைப்போல் நடைபெறுகிறது. இதில் பணம், அரசியல், சாதி என அனைத்து காரணிகளுக்கும் சம பங்குண்டு. இந்த ஊழல் நீரோட்டம் மேலிருந்து கீழ் பாயக்கூடியதாக இருப்பதால் பல்கலைக்கழக துணைவேந்தரிலிருந்து அடிமட்டம்வரை பாய்கிறது. ஆனால் இதன் ஊற்றுக்கண் எங்கிருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும். அதன் விளைவு கல்விப்புலம் என்பது முதல் போட்டு லாபம் பார்க்கும் தொழிலாகிப்போனது. அதனால் பல்கலைக் கழகங்களுக்கென விதிக்கப்பட்ட கற்பித்தல், ஆராய்ச்சி, சமூகம் சார்ந்த செயல்பாடுகள் போன்ற மரபான பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. சீர்கேடுகளைக் கண்டு  ஜனநாயக வழி அறச்சீற்றம் கொள்ளும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களை எளிதில் அப்புறப்படுத்துவதற்கு (தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ) பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரம் உதவுகிறது. ஏனென்றால் பல்கலைக்கழகங்களின் உயர் நிர்வாகக்குழுவான சிண்டிகேட் உறுப்பினர்கள் துணைவேந்தரை சார்ந்து ஆதாயம் பெறுபவர்களாக இருப்பதால், அவர்கள் கையெழுத்து போடும் எந்திரங்களாக ஆகிப்போனார்கள். பல்கலைக்கழக வளாகங்களில் ஜனநாயக ரீதியான அரசியல் செயல்பாடுகளுக்கு முழுமையாக தடைவிதிக்கப்படுகிறது. மாணவர், ஆசிரியர் அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மீறிப் போராடும் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். புதிய தலைமுறை பேராசிரியர்கள் தொழிற்சங்க செயல்பாடுகள் மீது மிகவும் அவநம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். நாம் உண்டு நமது வேலை உண்டு என்று இருப்பதே சிறந்த பேராசிரியப் பண்பாக வரித்துக் கொண்டுள்ளனர். அதிகாரத்திடம் மக்கள் எதையும் உரிமையாகக் கேட்கக்கூடாது என்ற அரசின் நிலையும், தயவால் மட்டுமே பெற முடியும் என்ற மக்களின் அவநம்பிக்கையும் இணைந்து போராட்ட குணத்தை மங்கிப்போகச்செய்கிறது. இந்த எதிர்ப்பற்ற சூழல் உயர்கல்வியை மேலும் சீரழிவிற்கு தள்ளுகிறது. இந்தப் பேராசிரியர்கள் மத்தியிலே படித்து வெளியேவரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும், கற்பனை செய்து பாருங்கள்.




இன்று அரசு பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்விக்காக நாடிவரும் மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையினர், கிராமத்தினர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆவர். இவர்கள் வெறும் பட்டம் பெறுபவர்களாக இல்லாமல் உயர்கல்விக்கான அறிவைப்பெற வேண்டும். பிற தனியார் பல்கலைக்கழகங்களில் படித்து வெளியே வரும் மாணவர்களுடன் போட்டியிடும் தகுதியைபெற வேண்டும். அதற்கு இப்போதைய பல்கலைக்கழக சூழல் நூறு சதவீதம் எதிராகவே உள்ளது. உயர் கல்வியின் சீரழிவை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது அரசின் மாற்றத்தை முடிவு செய்யும் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அரசுக்கு அக்கறை இல்லை என்றே அர்த்தமாகும். இன்னமும் காலம் இருக்கிறது. இதையெல்லாம்  சரிபடுத்துவதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. பல்கலைக்கழகங்கள் இன்னும் முழுமையாக சரிந்துவிடவில்லை. ஆனால் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறது. துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை அகற்ற வேண்டும். பணத்திற்கு விற்கப்படும் எந்தப்பதவியும் ஊழலின் உறைவிடமாகவே இருக்கும். பல்கலைக்கழகங்களிலிருந்து, மாணவர், ஆசிரியர், அலுவலர், ஓய்வூதியதாரர், இப்படி எந்தத் தரப்பிலிருந்தும் வரும் புகார்களுக்கு அரசு உடனே செவி சாய்க்க வேண்டும். இன்னமும் மாணவர்களின் மீது அக்கறை கொண்ட பேராசிரியர்கள், சிறந்த அறிஞர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் அவர்களை துணைவேந்தர்களாக நியமியுங்கள். காட்டு வளத்தை கானுயிர்களில் உணவுச்சங்கிலியின் மேலிருக்கும் புலியை வைத்தே அளவிடுவார்கள். புலி இல்லாத காடு வளமில்லாத காடாகும். ஒரு நாட்டின் வளம் அறிவைக்கொண்டே அளவிடப்படும். அந்த அறிவை உற்பத்தி செய்யும் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக இருப்பதே நாட்டின் வளமாகும்.




நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனும் பாரதிதாசனின் வரிகள் நல்ல குடும்பத்தைக் குறிப்பதற்கு இதுவரை பயன்படுத்தபடுகிறது. ஆனால் இனியும் பயன்படுத்தவேண்டுமானால் தமிழக உயர்கல்விக்கு தேவை தீவிர சிகிச்சை.