Tuesday, 2 October 2012

இன்னமும் இருக்கின்றன 'பறப்'பருந்துகள்


இன்னமும் இருக்கின்றன 'பறப்'பருந்துகள்

கோயம்புத்தூர் வ.உ.சி. உயிரியல் பூங்காவிலிருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் கூண்டுகளுக்கு முன்பு பெயர் பலகை இருக்கும், அதில் விலங்கு அல்லது பறவையின் பெயர் மற்றும் அது குறித்த தகவல்கள் இருக்கும். அங்கிருக்கும் ஒரு வகைப் பருந்திற்கு பரப்பருந்து (Pariah Kite) என்று பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது (பார்க்க புகைப்படம்). கழுத்தில் வெள்ளை இருக்கும் பருந்திற்கு 'பருந்து' என்றும் முழுவதும் கருப்பாக இருக்கும் பருந்திற்கு பரப்பருந்து என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பரப்பருந்து என்பது 'பறை' என்பதிலிருந்து வந்ததே, அதாவது 'பறப்பருந்து'. வெள்ளைப் பருந்தை (Brahman Kite)கிருஷ்ணப்பருந்தென்று கண்ணத்தில் போட்டுக்கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆனால் பறப்பருந்தென்று பெயர் வைத்து இழிவு படுத்துவதை நூறு வருடங்களுக்கு முன்பே பண்டிதர் அயோத்திதாசர் தனது தமிழன் இதழில் கண்டித்துள்ளார். அதாவது ஆங்கிலத்தில் வந்த செய்தியை English Standard (12 மே 1909) பத்திரிக்கை எவ்வாறு வெளியிட்டது சுதேசமித்திரன் எவ்வாறு மொழி பெயர்த்தது என்பதை விளக்கும் போது "வைஸ்ராயும், லேடி மிண்டோவும் தங்களது சிறிய நாயுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கையில் வேறொரு நாய் ஓடி வந்து கடித்துவிட்டதாம்." இந்த செய்தியை சுதேசமித்திரன் வெளியிடும் போது "ராஜபிரதிநிதி லார்ட் மிண்டோவும், லேடி மிண்டோவும் தாங்கள் வெகு அருமையாய் வளர்க்கும் ஒரு நாயுடன் சிம்லாவில் வெளியே உலாத்தப்போயிருந்த போது பறைநாய் ஒன்று அவர்களுடைய நாயைத் தாக்கி கடித்ததாம்." அதாவது strange dog எனும் வார்த்தையை பறைநாய் என்று பயன்படுத்திய சுதேசமித்திரனை அயோத்திதாசர் கண்டித்து நூறு வருடங்களுக்கு மேலாகிறது ஆனாலும் பறை எனும் சொல் மீதான வன்மமும் வெறுப்பும் துளி கூட குறையவில்லை. இது போன்ற வார்த்தைகள் சாதி வன்மம் கொண்டவர்களால் பரப்பப்பட்டு அது காலனிய காலத்தில் அகராதிகளிலும் பதிவாகியது. இன்றும் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் Pariah எனும் சொல்லுக்கு a person who is not acceptable to society and is avoided by everyone (சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத அனைவராலும் புறக்கணிக்கப் படக்கூடியவன்) என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அர்த்தத்தை அகராதி உருவாக்கிய வெள்ளைக்காரன் எவனோ ஒருவன் தரவில்லை இந்த பாசமிகு தமிழ் சமூகமே தந்தது. அதை இன்னமும் பத்திரமாக உயிரியல் பூங்காக்களில் பாதுகாக்கிறது.

பறையெனென்ற சொல் மீதுள்ள பகை குறித்து அயோத்திதாசர் கூறும் போது, "பவுத்த தன்மத்திற்கும், பவுத்தர்களாம் மேன் மக்களுக்கு சத்துருவாக தோன்றிய வேஷ பிராமணர்கள் [பிராமணர்கள்] பவுத்தர்களை தாழ்த்தி பறையெனென்று பரப்பினர்" என்கிறார். இதை சமூகத்தில் நிலை நிறுத்தும் விதமாக பறைப்பருந்து x பார்பாரப்பருந்து, பறைமைனா x பார்பாரமைனா,  பறைப்பாம்பு x பார்பாரப்பாம்பு என்று பெயர் வைத்தனர். ஆனல் பறைநாய் என்று பெயர் வைத்தவர்கள் அதற்கு எதிர் சொல்லான பாப்பாரநாய் என்பது இழிவு படுத்தும் என்பதால் பறைநாயென்ற சொல்லை மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்கிறார். அம்பேத்கர் இந்திய வரலாற்றை இந்து மதத்திற்கும் பவுத்தத்திற்குமான போராகவே பார்க்கிறார். இந்த போரில் வீழ்த்தப்பட்டவர்களே தீண்டப்படாதவர்கள் என்கிறார். வருடங்கள் பல ஓடி விட்டன 'சமூகப் புரட்சிகள்' பல நடந்ததாக மார்தட்டிக் கொள்கிறோம், இடையிலிருந்த சாதிகள் முன்னுக்கு ஓடி விட்டன, முன்னால் இருந்த சாதிகள் வெளி நாடுகளுக்கு சென்று விட்டன, இந்த திராவிட அல்லது தமிழ் திருநாட்டில் 'பாப்பாரப்பருந்துகள்' பறந்து போய் விட்டாலும் 'பறப்பருந்துகள்' மட்டும் இன்னமும் இருக்கின்றன. (நண்பர்கள் வேண்டுமானால் இணையத்தில் Pariah Kite அல்லது Brahman Kite என்று தேடிப்பாருங்கள் என்ன படம் வருகிறது என்று பாருங்கள்).