மதுவிலக்கில் தலித்துகளும் காந்தியர்களும்
விசிகவின் மது, போதை ஒழிப்புப் பெண்கள் மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த ராஜாஜியின் கட்-அவுட்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களில் மதுவிலக்குக் குறித்த விவாதம் தொடங்கியது. விடுதலைச் சிறுத்தைகளின் மாநாட்டில் அதிமுக வும் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பு ஆளும் திமுக விற்கான நெருக்கடியாகவும், அடுத்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணி மாற்றத்திற்கான தொடக்கமாகவும் ஊடக விவாதங்களாயின. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களே இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கான அவசியத்தை உருவாக்கியது என்று விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. விஷச்சாராயத்தால் 65 பேர் மரணமடைந்தது அவ்வளவு எளிதில் கடக்கக்கூடியது அல்ல. மது மனமகிழ்வுக்கானது என்ற வாதம் வறிய நிலையிலுள்ள மனிதர்களுக்குப் பொருந்துவதில்லை. மது எளியவர்களின் பணத்தையும் ஆரோக்கியத்தையும் ஒருசேர எடுத்துச்செல்கிறது. அது விற்பவர்களுக்கு லாபத்தையும் அருந்துபவர்களுக்குத் துன்பத்தையும் தந்துவிட்டுச்செல்கிறது. இந்தியச் சமூகச் சூழலில் குடியினால் அதிகம் பாதிக்கப்படுவது உழைக்கும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர், பழங்குடி வகுப்பினர்களே. இதனால் பெருமளவிலான மனிதவளம் பாதிக்கப்படுகிறது என்ற புரிதலில்தான் மது ஒழிப்புக் கோரிக்கையை முன்வைக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
மாநாட்டில் வைத்திருந்த காந்தி, இராஜாஜி கட்டவுட்டுகள் பல தரப்பினராலும் விமர்சனத்துக்குள்ளாயின. குலக்கல்வியை ஆதரித்த இராஜாஜியையும், இரட்டை வாக்குரிமையைப் பறித்த காந்தியையும் ஏன் தலித்துகள் தூக்கிப்பிடிக்க வேண்டும் என்பதுதான் விமர்சனத்தின் மையம். அம்பேத்கரியர்கள் காந்தி குறித்து நினைவு கூரும்போது காந்தி தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டிய இரட்டை வாக்குரிமையை பூனா ஒப்பந்தம் மூலம் பறித்துக்கொண்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டை வைப்பதுண்டு. அம்பேத்கரும் காந்தி குறித்தும் காங்கிரஸ் குறித்தும் விமர்சனங்களை எழுதியும் பேசியும் வந்துள்ளார். அம்பேத்கரின் அரசியல் கொள்கைகளுக்கு எதிராகவே காந்தி இருந்தார் என்பதால், கிராமத் தெருமுனைக் கூட்டங்களில்கூட அம்பேத்கரியர்களிடம் காந்தி குறித்த எதிர்மறையான விமர்சனம் எதிரொலிக்கும். அன்றைய அரசியல் சூழலில் அம்பேத்கருக்குக் காந்தியை எதிர்க்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்று தலித்துகள் காந்தியையும் காந்தியர்களையும் ஏற்றுக்கொண்டால் கூட மற்றவர்கள் அதை ‘அனுமதிக்க’த் தயாராக இல்லை என்பதையே இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன.
ஆனால் காந்தியர்களோ அம்பேத்கரிய அமைப்பினர் காந்தியைக் கையில் எடுத்திருப்பது மிகச்சிறந்த அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம் என்று வரவேற்கிறார்கள். இதுவரை விடுதலைச் சிறுத்தைகள் அல்லது வேறு எந்த தலித் அமைப்பின் மாநாடுகளிலும் காந்தி, இராஜாஜியின் படங்கள் இடம் பெற்றதில்லை. இந்த இருவரையும் விலக்கிவிட்டு மதுவிலக்கைக் கோர முடியாது என்ற விசயம் வரலாற்றைப் பயின்றவர்களுக்குப் புரியும். இந்தத் தருணத்தில் தலித்துகள், வரலாற்றில் காந்தியர்களின் மதுஒழிப்புச் செயல்பாட்டை நினைவுறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டம் பல நூறாண்டுகளுக்கும் மேலானது. இதைத் திருக்குறளின் கள்ளுண்ணாமை அதிகாரத்தைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். நவீன இந்திய தேசத்திற்கான விழுமியங்களில் தீண்டாமை ஒழிப்பைப் போல மதுவிலக்கும் இணைத்தே பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்திய அளவில் மதுவிலக்கு வரலாறானது தேசியவாதிகளை குறிப்பாக காந்தி, காங்கிரஸை மையப்படுத்தியே விளக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டத்தின் முன்னோடிகளாகத் தலித்துகள் இருந்துள்ளார்கள். காந்தி இயக்கத்திற்கு முன்பே தமிழகத்தில் தலித் அறிவுக் குழுவினர் மதுவிலக்குப் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். மதுவிலக்கிற்காகத் தலித்துகள் தனி இயக்கத்தையும் இதழையும் நடத்திவந்தனர்.
காலனிய இந்தியாவில் மதுக்கொள்கை
இந்தியப் பண்பாட்டில் மது களிப்பிற்கான பானமாகவும் மருத்துவத்திற்காகவும் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலனியக் காலத்தில் இது பெரும் மாற்றத்திற்குள்ளானது. இன்று மக்களிடமுள்ள மது அருந்துதல் குறித்த ஒழுக்கம், உடல் ஆரோக்கியம் குறித்த புரிதல்கள் காலனியக் காலப் பண்பாட்டு அரசியலின் விளைவாகும். இந்தியாவில் மது அரசியல், பண்பாடு, பொருளாதாரம், ஒழுக்கம் போன்ற பார்வைகளில் பார்க்கப்பட்ட ஒரு பண்டமாக உருவாகியது. 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து மது குடித்தல் விக்டோரிய ஒழுக்கம் சார்ந்து பார்க்கப்பட்டது. இதன் விளைவாகத் தேசியவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் மதுவிலக்குக் குறித்துப் பேச ஆரம்பித்தார்கள். இது பிரிட்டீஷ் இந்திய அதிகாரிகளுடன் பணிபுரிந்த பிராமணர்களின் பண்பாட்டு மேலாண்மைக்கு ஏற்றதாக இருந்தது. மதமாற்ற விசயத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் மாறுபட்ட சனாதனிகள் மதுவிலக்கில் ஒன்றுபட்டனர். மதுபானங்கள்மீதான வரி அரசின் முக்கிய வருவாயாக இருந்ததால் அரசின் தரப்பில் முழு மதுவிலக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மது அருந்துதலும் மதுவிலக்குப் பிரச்சாரமும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அரசாங்கத்திற்கு மதுமீதான வரி வருவாய் முக்கியம்; அதேவேளை ஒட்டுமொத்த மக்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்ற முரண்பாட்டில்தான் பிரிட்டீஷ் இந்திய அரசு மதுக்கொள்கைமீது விவாதம் நடத்திவந்தது. தேசியவாதிகளின் முழு மதுவிலக்கு கோரிக்கை எழுந்த அதேவேளையில் காலனிய அரசின் சட்ட வல்லுநர்கள் உள்நாட்டுச் சாராயத்தை அனுமதிக்கலாமா அல்லது உள்ளூரில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு அனுமதி தரலாமா, இந்த இரண்டில் எது அதிக தீங்கானது என்றும் மதுப் பயன்பாட்டினால் இராணுவ வீரர்கள், பொதுமக்களுக்கு ஏற்படும் உடல் நலத் தீங்கு குறித்த மருத்துவர்களின் அறிவுரைகள், மதுமீதான வரியை நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மாகாணங்களுக்கிடையிலான வரியையாவது நீக்க வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கை, பெயின்ட், வார்னிஷ், டை, ஈத்தர் போன்ற தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காகத் தேவைப்படும் ஆல்கஹால் அனுமதி குறித்துக் கவலைகொண்ட அறிவியல் விஞ்ஞானிகள் - தொழிற்சாலை அதிபர்களின் கோரிக்கை எனப் பலதரப்பு கருத்துகள் வெளிப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் ஆல்கஹாலைக் கொண்டு மோட்டார் வாகனங்கள் இயக்குவதற்கான பரிசோதனைகளும் நடந்துவந்தன. ஆகவே மது மக்களுக்கான பயன்பாடு என்ற ஒற்றை நோக்கத்தில் மட்டும் இந்த விவாதம் நடைபெறவில்லை என்பதைக் கவனங்கொள்ள வேண்டும்.
இதே காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தரப்பில் நடந்த மதுவிலக்குச் செயல்பாட்டைச் சமஸ்கிருதமயமாக்கல், சமூகப் படிநிலையில் மேல் நோக்கிப் பயணித்தல் என்று சமூக அறிவியல் ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள். ஆனால் தமிழக அளவில் தலித்துகள் மத்தியில் நடைபெற்ற மதுவிலக்கு நடவடிக்கைகள் கிறிஸ்தவம், பௌத்தம் ஆகியவற்றின் தாக்கம் பெற்றதாகவும் சீர்திருத்தம். முன்னேற்றம் நோக்கம் கொண்டதாகவும் இருந்துள்ளதைக் காண முடிகிறது.
மதுவிலக்குச் சங்கம்
பி.ஒய். தெய்வசிகாமணி போன்ற சிலரால் ‘மதுவிலக்குச் சங்கம்’ 1902ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காகவே இச்சங்கம் தொடங்கப்பட்டது. 1850களில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட டெம்பரன்ஸ் இயக்கங்கள் கிறிஸ்தவ மிஷனரிகள்மூலம் இந்தியாவிலும் மதுவிலக்குப் பிரச்சாரங்களைத் தொடங்கியது. அமெரிக்கக் கிறிஸ்தவ மிஷனரிகள் சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தலித்துகள் மத்தியில் வேலை செய்துவந்தன; தேசியவாதிகளுக்கு முன்பே தலித்துகளின் முன்னேற்றத்திற்கு மதுவிலக்கு அவசியம் என வலியுறுத்திப் பேசிவந்தன.
காங்கிரசாரின் மதுஒழிப்புப் போராட்டம் (1931)
தலித்துகள் மத்தியில் பண்டிதர் அயோத்திதாசர், பூஞ்சோலை முத்துவீரன் நாவலர் போன்றோரின் முயற்சியில் பௌத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தீவிரமாகச் செயல்பட்டன. கள்ளுண்ணாமையைப் பஞ்ச சீலங்களில் ஒன்றாக வலியுறுத்தும் பௌத்த மார்க்கப் பரவலும் மதுவிலக்குச் சங்கத் தோற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். சங்கத்தின் அடிப்படை நோக்கம் மக்களிடம் சென்று குடியின் தீமை குறித்தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் பிரச்சாரம் செய்வது. இவர்கள் தங்களது சொந்தச் செலவிலே நகரங்களுக்கும் தூரத்திலுள்ள கிராமங்களுக்கும் சென்று மதுவின் தீமை குறித்துப் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பிரச்சாரத்தில் குடியால் சீரழிந்த குடும்பங்களின் கதைகள், பாடல்கள், பழமொழிகள் போன்றவற்றின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். வருடந்தோறும் சங்கத்திற்கான ஆண்டறிக்கை வாசித்தல், ஆண்டின் வரவு செலவுக் கணக்குப் பார்த்தல், சங்கச் செயல்பாடுகளை அளவிடுவது, வரும் ஆண்டிற்கான செயல்பாடுகளைத் திட்டமிடுவது என்று சங்கத்தைத் திறம்பட நடத்தினார்கள். மேலும் பண்டிதர் அயோத்திதாசர் போன்றோர்களை அழைத்துவந்து குடியின் தீமை குறித்துப் பிரசங்கம் நிகழ்த்தியுள்ளார்கள்.
மதுவிலக்குச் சங்கத்தின் ஒரு கூட்ட நடவடிக்கை பூலோகவியாஸன் (ஜூலை 1909) இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஜியார்ஜ் டவுனிலுள்ள சர்வதேசாபிமான மதுவிலக்கு சங்கத்தார் தங்களது 8ஆவது வருடோற்சவத்தைக் கொண்டாடச் சென்னை பாபம்ஸ் பெரிய சாலையிலுள்ள டேனிஷ் மிஷன் வாசகக் கூடத்தில் இவ்வருடம் ஜூலை மாதம் 31ந் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கூடினார்கள். அப்போது வேதவிற்பனர் சங்கை எம்.ஜி. கோல்ட் ஸ்மித் தேசிகர் பி.ஏ. அவர்கள் அக்கிராசனாதிபதியாய் வீற்றிருந்தார்.
சங்கத்தின் காரியதரிசி கனம் பி.ஒய். தெய்வசிகாமணியவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் நடத்தப்பட்ட வேலைகளைப் பற்றியும், வரவு செலவுக் கணக்கு விவரங்களைப் பற்றியும் ஸங்ஷேபமாக ஓர் அறிக்கைப் பத்திரம் வாசித்தார். அதிலடங்கிய விஷயங்களுள் குடியின் மயக்கத்தால் அறிவிழந்து சிறுமைக்குச் சமீபமாயும் பெருமைக்குத் தூரமாகவும் தாங்களே கெட்டுப்போவதல்லாமல் தம்சந்ததியும் தரித்திரத்தால் கணித்துப்போகும் ஜனங்களுக்கென்று வாராந்திரக் கூட்டமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் பட்டணத்தில் மாத்திரமல்ல. வெளியூர்களிலும் யாதோர் சம்பளமின்றித் தாங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு உற்சாகத்தோடு சென்று குடியின் தீமைகளைப் பிரசங்கித்து வரும் பரோபகாரமானது மிகவும் சிலாகிக்கத் தகுந்ததே. இந்தச் சங்கத்தாரைப் போல் பொதுநலத்தோடும் விருப்பமுள்ளவர்கள் ஆங்காங்கு மதுவிலக்குச் சபைகளை ஸ்தாபித்து இம்மாதிரி நடத்துவார்களானால் நம் நாடும் ஜனங்களும் எவ்வளவு மேன்மையை அடையக் கூடும்.
கனம் எம்.எஸ். இராமசாமி நாயகர் தமிழன் பத்திராதிபர் சங்கை க. அயோத்திதாஸப் பண்டிதரிவர்களிருவரும் தமிழிலும் கனம் எஸ். அஜீம் உதீன் சாயுபு அவர்கள் ஆங்கிலத்திலும் மதுவின் கேட்டைப் பற்றி முறையே வெகு விமரிசையாக உபந்நியாசித்தனர். அக்கிராசனாதிபதியும் சமயோஜிதமாக இரண்டொரு வார்த்தைகள் பேசினார். முடிவில் வந்தனங்களுடன் புட்பாரங்கள் அக்கிராசனாதிபதிக்கும் உபந்நியாசர்களுக்கும் சங்கை பி.பி. இராகவய்யரவர்களுக்கும் சூட்டப்பட்டன. இச்சங்கம் உழைப்பில் தளராமல் மென்மேலும் ஊக்கமடையவும் இத்தகைய அநேக சங்கங்கள் ஆங்காங்கு ஏற்படவும் எல்லாம் வல்ல முழு முதற்கடவுள் அநுக்கிரகஞ் செய்வாராக
ஓர் பரோபகார சிந்தையான்
மதுவிலக்கு தூதன்
மதுவிலக்குச் சங்கத்தின் சார்பில் மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கெனத் தமிழும் ஆங்கிலமும் கலந்த இருமொழி இதழாக வெளிவந்த மதுவிலக்கு தூதன் அல்லது டெம்பரண்ஸ் ஹெரால்டு எனும் இதழை 1900ஆம் ஆண்டு தொடங்கினார்கள். வழக்கமாகச் சங்கத்தை முதலில் தொடங்கி அதன் குரலாகப் பத்திரிகையைத் தொடங்குவார்கள். ஆனால் இங்கு பத்திரிகையை முதலில் (1900 ஆம் ஆண்டில்) தொடங்கி சங்கத்தை 1902 ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளனர். இந்த இதழில் குடியினால் விளையும் தீமைகளைச் சிறு சிறு கதைகளாகவும் பழமொழிகளாகவும் விவரித்தனர். டி. மனுவேல் பிள்ளை (இவர் இதற்கு முன்பு திராவிடக் கோகிலம் எனும் பத்திரிகையை நடத்தியவர்) என்பவர்தான் இந்தப் பத்திரிகையையும் நடத்தினார். 300 பிரதிகள் விற்ற இப்பத்திரிகையின் வருடச் சந்தா ஒரு ரூபாய் எட்டணா. பிரிட்டிஷ் பாரிஸ்டர் அதிகாரி நார்டன் என்பவரிடம் பட்லராக வேலை பார்த்துவந்த ஆதிதிராவிடக் கிறிஸ்தவரான மனுவேல் பிள்ளை பின்பு அலுமினியப் பாத்திரக் கடை நடத்திவந்தார். இந்த இதழின் ஆசிரியர்களாக டி.ஏ சுந்தரம் BA.L.T, எல்.ஐ. ஸ்டீபன் ஆகியோர் பணியாற்றினார்கள். இவர்களில் கிறிஸ்தவ ஆதிதிராவிடரான சுந்தரம் இராயப்பேட்டையிலுள்ள வெஸ்லியன் மிஷன் பெண்கள் பள்ளியில் தலைமையாசிரியராகவும் இராயப்பேட்டையிலுள்ள வெஸ்லியன் மிஷன் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார், அதேபோல இலண்டன் மிஷன் இவாஞ்சலிஸ்ட் ஆதிதிராவிடக் கிறிஸ்தவரான ஸ்டீபன் இதற்கு முன்பு சென்னை தாரகை எனும் தமிழ்ப் பத்திரிகையில் ஆசிரியராகப் பொறுப்பிலிருந்தார். சி.எம். சுந்தரம் பிள்ளை என்பவரின் அச்சகத்தில்தான் இப்பத்திரிகை அச்சானது.
இந்த இதழ் தாழ்த்தப்பட்டோரிடையே நல்ல வரவேற்பைக் கொண்டிருந்தது என்று அரசுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சமகால இதழ்களும் இந்த இதழை அறிமுகப்படுத்தி எழுதியுள்ளன. உதாரணமாக பூஞ்சோலை முத்துவீரன் நாவலர் நடத்திவந்த பூலோகவியாஸன் தலித் பத்திரிகையில் மதுவிலக்கு தூதன் பத்திரிகையைப் ‘பத்திரிகை வரவு’ என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், “மதுவிலக்கு தூதன் என்னும் ஓர் மாதாந்தரத் தமிழ்ப்பத்திரிகை வரப்பெற்றோம். அது இங்கிலீஸ், தமிழ் பாஷைகளில் வெளியிடப்படுகிறது இதனுள்ளடங்கிய விஷயம் பஞ்ச பாதங்களிலொன்றாகிய மது பானத்தைக் கண்டிப்பது,” என்று குறிப்பிடுகிறது. இதழின் தரம் குறித்து எழுதும்போது “சஞ்சிகையோ பார்வைக்கு மிக அழகாகவும், சுத்தமான பதிப்புடையதாகவும், பெருஞ்செலவை மேற்கொண்டதாகவும் விளங்குகிறது. இதே பெயராலாகிய பத்திரிகை முன்னொருக்கால் தோன்றிப் பின் மறைந்ததுபோலும் மற்றும் பத்திரிகைகள் தோன்றித் தோன்றி மறைவது போலுந் தடைபடாது வெளிவர அன்பர்கள் ஆதரிப்பதுசிதமாகும்” (பூலோகவியாஸன், டிசம்பர், 1909) என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
பூலோகவியாஸனும் வழிகாட்டுவோனும்
பூஞ்சோலை முத்துவீர நாவலரின் ஆசிரியத்துவத்தில் வெளியான பூலோகவியாஸன் இதழ் மதுவிலக்குக் குறித்துத் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தது. இந்தக் கட்டுரைகள் குடியை ஒழுக்கம்சார்ந்த பிரச்சினையாகப் பார்க்காமல் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்குக் குடி பெரும் தடையாக உள்ளதை விவாதிக்கிறது. உதாரணமாக மார்ச் 1906இல் எப்.சி. தம்புசாமி பிள்ளை என்பவர் எழுதிய கட்டுரையில், “கடும் உடல் உழைப்பிற்குச் சிறிது குடித்தால்தான் தூக்கம் வரும் என்று குடிப்பவர்கள், நான் சாப்பாட்டிற்கு முன்பு சிறிதளவே குடிப்பவன், எனது கொடூரமான நோய்க்குக் குடியில்லாமல் ஒருநாள்கூட வாழ முடியாது என்பவனும், நான் எனது சொந்தக் காசில் குடிப்பதில்லை எனக்குக் கிடைக்கும் லஞ்சப் பணத்தில்தான் குடிக்கிறேன் என்பவனும், மதியில்லாமல் குடித்துப் புரள்பவனும் ஒன்றே” என்கிறது. “குடிப்பவர்களில் நல்ல குடியர்கள், கெட்ட குடியர்கள் எல்லாம் கிடையாது. குடிப்பழக்கம் உள்ள எல்லோருமே குடியர்கள்தான்” என்கிறது. பூலோகவியாஸன் அச்சகத்தில் மதுவிலக்கிற்கான நூல்கள் அச்சிடப்பட்டன.
வழிகாட்டுவோன் இதழிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் மோசமான நிலைக்கு மது முக்கியக் காரணம் என இந்தியத் தலைமை ஆளுநர் மாண்டேகுவுக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்விண்ணப்பத்தில், “மதுபானம் ஒடுக்கப்பட்ட மக்களின் கீழ்நிலைக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் மதுவின் தீங்குகளைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவைப் பெற்றவர்களாக இல்லை. கள்ளுக்கடைகளோ பெரும்பாலும் தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அமைக்கப்படுகின்றன. மதுவிலக்கை அமுல்படுத்துவதற்காக அரசாங்கம் வருடந்தோறும் அதன்மீதான வரியை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறார்கள். ஆனால் எங்கள் ஜனங்களோ நாளுக்குநாள் மதுபானத்தைப் பெருக்கிக்கொண்டேபோகிறார்கள். ஆகவே மதுவின் வரி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்தளவிற்கு எங்கள் தரித்திரமும் அதிகரித்துவருகிறது. ஆகையால் மதுபானக் கடைகள் எங்களுக்கு அதிகக் கெடுதியும் எங்கள் முன்னேற்றத்திற்குப் பெரிய தடையுமாயிருக்கின்றன. இவைகளைத் தாங்கள் தயவுகூர்ந்து கவனித்து, கள்ளு முதலிய மதுபானக் கடைகள் முற்றிலும் இல்லாமல் போகும்வரை அவைகளை வருடந்தோறும் குறைத்துக்கொண்டுவர வேண்டும் என வேண்டிக் கொள்ளுகிறோம்”, என்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அர்ச் அன்னம்மாள் மதுவிலக்குச் சபை
அர்ச் அன்னம்மாள் மதுவிலக்குச் சபை (St.Anne’s Temperance Society) பிரான்ஸிஸ் சி. தம்புசாமி பிள்ளை, ஜே.பி. சர்வாந்த்தோன் குருஸ்வாமிகள், சா.செ. துரைசாமி பிள்ளை ஆகியோரால் கோலார் தங்கவயல் சாம்பியன் ரீப்ஸில் தொடங்கப்பட்டது. மதுவிலக்கை ‘வெறி விலக்கு’ என்றும் குறிப்பிட்டு வந்தார்கள். கோலார் தங்க வயலில் பெரும் எண்ணிக்கையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் மத்தியில் மதுவின் தீமை குறித்தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் பிரச்சாரம் செய்துவந்தார்கள். மதுவிலக்குச் சங்கத்தில் செயல்பட்டவர்கள் இந்தச் சங்கத்திலும் செயல்பட்டார்கள். எடுத்துக்காட்டாக எஃப்.சி. தம்புசாமி பிள்ளை இந்த இரண்டு சங்கங்களிலும் செயல்பட்டு வந்துள்ளார்.
இச்சங்கத்தின் சார்பில் ‘மதுவிலக்குக் கும்மி’ ஒன்றை 1916 ஆம் ஆண்டு சி.எஸ். ஞானப்பிரகாஸம் பிள்ளை இயற்றியுள்ளார். இவர் செயின்ட் மேரீஸ் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். இந்தக் கும்மி பூலோகவியாஸன் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் முன்னுரையில்:
அன்பிற்கனிந்த அறிஞர்காள்!
பஞ்சமாபாதகத்து ளொன்றாகுங்கொடிய குடிப்பழக்கத்திலாழ்ந்து நம்மனோரில் பெரும்பான்மையோர் ஆத்தும சரீர நஷ்டத்துக்களாய், இகபரநன்மைகளை யிழந்து, வறுமை, குடும்பப் பிரிவு, தற்கொலை, பைத்தியம், ரோகம், அற்ப ஆயுள் முதலிய பெருந்தின்மைகளுக்குள்ளானார்கள், ஆகிறார்கள் என்று நாடோறும் நாம் பிடத்தியக்ஷாநுபவத்தோடு கண்டும் கேட்டும் வருமத்தியந்தப் பரிதாபக் காட்சிபெற்றனைவரும் ஒப்புக்கொள்ளும் பஹிரங்க ரஹஸ்யமன்றோ? இத்தீய பழக்க வழக்கத்தைக் குறைக்க, கல்வி கேள்விகளிற் சிறந்த மேதாவிகளிற் பலர் குடிவெறியாலுண்டாகும் அளவறுக்கப்படாக் கஷ்ட நஷ்டங்களை வியாஸங்களாகவும் செய்யுட்களாகவும் பத்திரிகை வாயிலாகவும் வெள்ளிடைமலைப் போல் விரித்துப் பிரசுரித்து வெளியிட்டிருப்பதோடு ஆங்காங்கு மதுவிலக்குச் சபைகளும் ஸ்தாபித்து வேண்டிய முயற்சியுமெடுத்து வருகின்றனர். வந்து
மென்ன? ஆலைப்பலாவாக்கலாமோ...மூர்க்கரைச் சீராக்கலாமோ? என்னு மூதுரைக்கிலக்காக குடியர்களின் தொகை அதிகப்பட்டுக் கொண்டு வருகிறதே யல்லாமல் குறைவதைக்காணோம். எனினும் “சகோதர நஷ்டம் சருவ நஷ்டம்” என்றறிந்த அறிஞர்களில் சிலர் இங்கு சங்: ஜே.பி. சர்வாந்த்தோன் குருஸ்வாமிகளக்கிராஸனத்தின் கீழ் அர்ச் அன்னம்மாள் மதுவிலக்குச்சபை யொன்று ஸ்தாபித்து இதின் கிளைச் சபைகள் பல இடங்களிலும் பஜனை சபைகளிலுமேற்படுத்தியவைகளினபிவிருத்தியை நாடி யல்லும் பகலுமுழைத்து வருகின்றனர். ஆகவே இச்சபையினங்கங்களும், அவர்கள் குடும்பங்களும் மதுபான பழக்கத்தின் தீமைகளையும் மதுவிலக்கின் நன்மைகளையும் தங்களுக்கொழிவான நேரங்களில் வாசித்துணர்ந்து தங்களயலாருக்கு மன்பர்களுக்கும் அறிவிக்குமாறு எளிய தமிழில் கும்மி நடையில் பாட வேண்டுமென்று விரும்பியதன் படிக்குக் கல்விகேள்விகளிற் சுத்த சூன்யமாகுமடிமை மேற்கூறிய மேதாவிகள் வெளியிட்டதை ஆதாரமாகக் கொண்டு எதிரொலிக்கொப்ப இம் “மதுவிலக்குக் கும்மி” பாடினேன். இது பொதுஜன சமூக நன்மையைக் கருதிய நூலாதலால், தீயக்குடிப்பழக்கமுள்ளோர் குறைகூறி கோபங்கொள்வாரெனினும், அஃதை அற்பமும் பொருட்படுத்தாது அவர்கள். நன்மை கடைபிடித்து நல்லொழுக்கத்தை நாட வேண்டுமென்பதே முழுநோக்கமாம். அறிஞர்கள் குற்றங்களைந்து குணத்தை ஹ்ரஹித்து அடியனை க்ஷமித்தங்கீகரிப்பார்களென்பது பூரண நம்பிக்கை.
இராஜாஜியின் விமோசனம்
காந்தியரான இராஜாஜி மதுவிலக்கிற்காக இந்திய மதுவிலக்குச் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கென விமோசனம் எனும் மாதப் பத்திரிகையை 1929இல் தொடங்கினார். கல்கியை ஆசிரியராகக் கொண்டு திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திலிருந்து வெளியான இப்பத்திரிகையில் மதுவின் தீமைகள் குறித்த கட்டுரைகள், கருத்துச் சித்திரங்கள் முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. காந்தி ஆசிரமம் சார்பில் மதுவிலக்கை வலியுறுத்தும் ‘குடிகெடுக்கும் கள்’, ‘திக்கற்ற பார்வதி’ போன்ற நூல்களும் வெளியிடப்பட்டன. விமோசனம் பத்திரிகை மொத்தம் பத்து இதழ்கள் வெளியானது. அதன்பிறகு இராஜாஜியின் கைதைத் தொடர்ந்து பத்திரிகை நின்றுபோனது. ஆனால் விமோசனம் பத்திரிகையின் கட்டுரைகளும் கருத்துப்படங்களும் இன்றளவும் பயனுள்ளவை. ‘மதுவிலக்கு ஏன்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில், “இப்போது பகிரங்கமாய் அனைவரும் சாப்பாட்டுக் கடைகளுக்குப் போய்த் தின்பண்டங்களைப் புசிப்பது போலவே மதுபானக் கடைக்குள்ளும் போய்ச் சாராய வர்க்கங்களை அருந்துவோம். கடைகளும் பெரிய மனிதர்கள் வருவதற்குத் தக்கவாறு சுத்தமாக்கப்பட்டு விளக்கு முதலியன வைத்து மனதைக் கவருமாறு அலங்கரிக்கப்படும். இப்படி நடக்குமென்பதற்குப் போதுமான அறிகுறிகள் இப்போதே பார்க்கலாம்” என்று நிகழ்காலத்தைக் கொண்டு எதிர்காலத்தைக் கணித்துள்ளனர். பத்திரிகையில் வெளியான கட்டுரைகள் உடல் ஆரோக்கியம், ஒழுக்கம், புத்தஜாதகக் கதைகள், பொன்மொழிகள், குடியினால் ஏற்படும் பணவிரயம், பிறநாடுகளில் பின்பற்றப்படும் மதுவிலக்குப் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டன.
காந்தியர்களின் மது ஒழிப்பு நடைபயணம்
காங்கிரஸார் 1930களில் தீவிரத் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகியவற்றை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டார்கள். அதில் மிகவும் முக்கியமான நடைபயணம் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் நடைப்பயணமாகும். இந்த நடைப்பயணத்தில் மதுவின் தீமையை விளக்கும் படங்களைத் தங்களுடன் எடுத்துச் சென்றார்கள். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மதுவிலக்குப் படங்களை வரிசையாகக் கட்டித் தொங்கவிடுவது அவர்கள் வழக்கம். மக்கள் இந்தப் படங்களைப் பார்ப்பதற்காகக் கூடியவுடன் அவர்களிடம் மதுவின் தீமை குறித்து விளக்குவார்கள் தொண்டர்கள். ஆதிதிராவிடர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று அவர்களின் வீதிகளைப் பெருக்கிச் சுத்தமாக்கிவிட்டு மதுவிலக்குப் படங்களைத் தொங்கவிட்டு அதன் தீமைகளை விளக்கிப் பேசுவார்கள்.
கல்வியறிவு அதிகமில்லாத நாட்டில் பிரச்சாரம் செய்வது மிகவும் கடினம். நூல்களும் துண்டுப் பிரசுரங்களும் ஓரளவே பயன்படும். ஆனால் சித்திரப் படங்களைக் காட்டிப் பிரச்சாரம் செய்வது நல்ல பலனளிப்பதாக காந்தியர்கள் கருதினார்கள். இந்தப் பிரச்சாரத்திற்காகவே தெளிவான படங்களை அச்சிட்டுக் குறைந்த விலையில் விற்றார்கள். படங்களைத் தொங்கவிடுவதற்கான துணி, சட்டம், கம்பி முதலியவற்றையும் சகாய விலையில் விற்றுப் பிரச்சாரத்தை முடுக்கினார்கள்.
மதுவிலக்குப் பிரச்சாரத்தின் ஒரு செயலாக மதுவுக்கு எதிராக மக்களிடம் உறுதிமொழிப் புத்தகத்தில் கையெழுத்துப் பெற்றார்கள். ஐந்நூறு தாள்கள் புத்தகத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் உறுதிமொழி அச்சிடப்பட்டிருந்தது. அதில் “நம்முடைய நாட்டில் தருமமும் பொருளும் இன்பமும் வளர்ந்து அனைவரும் ஷேமமாயும் சுகமாயும் வாழ கள்ளு, சாராயம், அபினி, கஞ்சா முதலிய லாகிரி வஸ்த்துக்களை முற்றிலும் ஒழிக்கும் சட்டங்களை உடனே செய்வது அவசியமென்றும், அவ்விதச் சட்டங்களைச் செய்வதற்கு நான் ஆதரவாயிருப்பேனென்றும் இந்திய சட்டசபை, சென்னை சட்டசபை, கிராம, நகர, தாலுகா, ஜில்லா சபைகள் இந்தத் தேர்தல்களில் பூரண மதுவிலக்குக்கு ஆதரவாக உறுதிமொழிக்குக் கையெழுத்திடாத எவருக்கும் நான் வாக்குக் கொடுப்பதில்லை என்றும் உறுதி கூறுகிறேன்” என்று அச்சிடப்பட்ட உறுதிமொழிக்குக் கீழே கையெழுத்துடன் பெயரும் முகவரியும் எழுதப்பட்டன. பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருபாலரிடமும் கையெழுத்துகள் பெறப்பட்டன. இந்தக் கையெழுத்து இயக்கம் இந்தியா முழுவதும் நடத்தப் பட்டது.
காந்தியும் இரட்டைமலை சீனிவாசனும்
1929இல் இரட்டைமலை சீனிவாசன் மதுவிலக்குத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார், அத்தீர்மானத்தில் “கலால் வரி வருமானத்திற்காக பிர்ட்டீஷ் இந்திய அரசாங்கம் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கிவருகிறது. ஆனால் மதுவினால் ஏழை எளிய மக்கள் தங்களது சொற்ப வருமானத்தை இழப்பதுடன் உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. ஆகவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. 1933ஆம் ஆண்டு காந்தி சென்னை வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்து மனு கொடுத்த இரட்டைமலை சீனிவாசன், “மகாத்மாஜீ, கள் குடியின் கேட்டைப்பற்றி நீங்கள் பேசலாம் அது ஒன்றும் தவறில்லை. ஆனால் மதுபானம் குடிக்கும் வழக்கம் அனைத்துச் சமூகத்தினர் மத்தியிலும் இருக்கும்போது தாழ்த்தப்பட்டோரை மட்டும் கூறுவது அவமானப்படுத்துவதுபோல் உள்ளது” என்றார். இதற்குப் பதிலளித்த காந்தி “மற்றச் சாதியினரிடமும் குடிப்பழக்கம் இருக்கிறதென்பது எனக்குத் தெரியும். ஆனால் எவ்வளவோ சிரமப்பட்டு முன்னேற வேண்டிய பிற்போக்கான நிலையிலுள்ள ஹரிஜனங்களுக்கு இது கட்டுப்படியாகாது. ஆகையால் குடிப்பழக்கத்திற்கு விலகி ஒதுங்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கே அதிகம். நான் அவர்களுடைய குடிப்பழக்கத்தை அகற்ற எத்தனையோ ஆண்டுகள் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். ஆகையால் தயவுசெய்து என்னுடைய சுதந்திரத்திற்கு வேலி கட்டிவிடாதீர்கள். யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடிய எந்தச் சொல்லையும் நான் சொல்ல மாட்டேன்,” என்றார். இந்தியாவில் நடந்த மதுவிலக்குப் பிரச்சாரத்தை மேற்கோள் காட்டி பிரிட்டன், அமெரிக்க மதுவிலக்கு இதழ்கள் “இந்திய விடுதலை தவிர்க்க முடியாதது” என்று கருத்துத் தெரிவித்தன.
இந்தியாவில் மதுவிலக்குப் பிரச்சாரத்தை காந்தி தலைமையில் காங்கிரஸ் இயக்கம் 1920களுக்குப் பின்பே தொடங்கியது. காந்தியர்களால் இவ்வியக்கம் இந்தியா முழுவதும் பரவியது. மகாத்மா காந்திக்கு மதுவிலக்கு என்பது தேசத்தின் ஆன்மாவைத் தூய்மையாக்கும் திட்டம். இதையே கிறிஸ்தவ மிஷனரிகள் ஆத்ம இரக்ஷன்யத் தொழில் என்றன. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களைப் பொருத்தமட்டில் தங்களது வாழ்நிலையை உயர்த்தும் நோக்கிலும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழும் நோக்கத்திற்காகவும் மதுவிலக்குக் கோரப்பட்டது என்பதையே மதுவிலக்குச் சங்கமும் மதுவிலக்கு தூதனும் நமக்கு உணர்த்துகின்றன. 120 வருடங்களுக்கு முன்பு தலித் அறிவுக் குழுக்களிடமிருந்து மதுவிலக்குக்கென ஒரு பத்திரிகை வெளிவந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மின்னஞ்சல்: balumids@gmail.com