Friday, 13 December 2024

 

மதுவிலக்கில் தலித்துகளும் காந்தியர்களும்

காலச்சுவடு இதழில் (நவம்பர் 2024) வெளியான கட்டுரை

விசிகவின் மது, போதை ஒழிப்புப் பெண்கள் மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த ராஜாஜியின் கட்-அவுட்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களில் மதுவிலக்குக் குறித்த விவாதம் தொடங்கியது. விடுதலைச் சிறுத்தைகளின் மாநாட்டில் அதிமுக வும் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பு ஆளும் திமுக விற்கான நெருக்கடியாகவும், அடுத்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணி மாற்றத்திற்கான தொடக்கமாகவும் ஊடக விவாதங்களாயின. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களே இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கான அவசியத்தை உருவாக்கியது என்று விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. விஷச்சாராயத்தால் 65 பேர் மரணமடைந்தது அவ்வளவு எளிதில் கடக்கக்கூடியது அல்ல.  மது மனமகிழ்வுக்கானது என்ற வாதம் வறிய நிலையிலுள்ள மனிதர்களுக்குப் பொருந்துவதில்லை. மது எளியவர்களின் பணத்தையும் ஆரோக்கியத்தையும் ஒருசேர எடுத்துச்செல்கிறது. அது விற்பவர்களுக்கு லாபத்தையும் அருந்துபவர்களுக்குத் துன்பத்தையும் தந்துவிட்டுச்செல்கிறது. இந்தியச் சமூகச் சூழலில்  குடியினால் அதிகம் பாதிக்கப்படுவது உழைக்கும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர்,  பழங்குடி வகுப்பினர்களே. இதனால் பெருமளவிலான மனிதவளம் பாதிக்கப்படுகிறது என்ற புரிதலில்தான் மது ஒழிப்புக் கோரிக்கையை முன்வைக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

மாநாட்டில் வைத்திருந்த காந்தி, இராஜாஜி கட்டவுட்டுகள் பல தரப்பினராலும் விமர்சனத்துக்குள்ளாயின. குலக்கல்வியை ஆதரித்த இராஜாஜியையும், இரட்டை வாக்குரிமையைப் பறித்த காந்தியையும் ஏன் தலித்துகள் தூக்கிப்பிடிக்க வேண்டும் என்பதுதான் விமர்சனத்தின் மையம். அம்பேத்கரியர்கள் காந்தி குறித்து நினைவு கூரும்போது காந்தி தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டிய இரட்டை வாக்குரிமையை பூனா ஒப்பந்தம் மூலம் பறித்துக்கொண்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டை வைப்பதுண்டு. அம்பேத்கரும் காந்தி குறித்தும் காங்கிரஸ் குறித்தும் விமர்சனங்களை எழுதியும் பேசியும் வந்துள்ளார். அம்பேத்கரின் அரசியல் கொள்கைகளுக்கு எதிராகவே காந்தி இருந்தார் என்பதால், கிராமத்  தெருமுனைக் கூட்டங்களில்கூட அம்பேத்கரியர்களிடம்  காந்தி குறித்த எதிர்மறையான விமர்சனம் எதிரொலிக்கும். அன்றைய அரசியல் சூழலில் அம்பேத்கருக்குக் காந்தியை எதிர்க்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்று தலித்துகள் காந்தியையும் காந்தியர்களையும் ஏற்றுக்கொண்டால் கூட மற்றவர்கள் அதை ‘அனுமதிக்க’த்  தயாராக இல்லை என்பதையே இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன.

ஆனால் காந்தியர்களோ அம்பேத்கரிய அமைப்பினர் காந்தியைக் கையில் எடுத்திருப்பது மிகச்சிறந்த அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம்  என்று வரவேற்கிறார்கள்.  இதுவரை விடுதலைச் சிறுத்தைகள் அல்லது வேறு எந்த தலித் அமைப்பின் மாநாடுகளிலும் காந்தி, இராஜாஜியின் படங்கள் இடம் பெற்றதில்லை. இந்த இருவரையும் விலக்கிவிட்டு மதுவிலக்கைக் கோர முடியாது என்ற விசயம் வரலாற்றைப் பயின்றவர்களுக்குப் புரியும். இந்தத் தருணத்தில் தலித்துகள், வரலாற்றில் காந்தியர்களின் மதுஒழிப்புச் செயல்பாட்டை நினைவுறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டம் பல நூறாண்டுகளுக்கும் மேலானது. இதைத் திருக்குறளின் கள்ளுண்ணாமை அதிகாரத்தைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். நவீன இந்திய தேசத்திற்கான விழுமியங்களில் தீண்டாமை ஒழிப்பைப் போல மதுவிலக்கும் இணைத்தே பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்திய அளவில் மதுவிலக்கு வரலாறானது தேசியவாதிகளை குறிப்பாக காந்தி, காங்கிரஸை மையப்படுத்தியே விளக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டத்தின் முன்னோடிகளாகத் தலித்துகள் இருந்துள்ளார்கள். காந்தி இயக்கத்திற்கு முன்பே தமிழகத்தில் தலித் அறிவுக் குழுவினர் மதுவிலக்குப் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். மதுவிலக்கிற்காகத் தலித்துகள் தனி இயக்கத்தையும் இதழையும் நடத்திவந்தனர்.

காலனிய இந்தியாவில் மதுக்கொள்கை 

இந்தியப் பண்பாட்டில் மது களிப்பிற்கான பானமாகவும் மருத்துவத்திற்காகவும் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலனியக் காலத்தில் இது பெரும் மாற்றத்திற்குள்ளானது. இன்று மக்களிடமுள்ள மது அருந்துதல் குறித்த ஒழுக்கம், உடல் ஆரோக்கியம் குறித்த புரிதல்கள் காலனியக் காலப் பண்பாட்டு அரசியலின் விளைவாகும். இந்தியாவில் மது அரசியல், பண்பாடு, பொருளாதாரம், ஒழுக்கம் போன்ற பார்வைகளில் பார்க்கப்பட்ட ஒரு பண்டமாக  உருவாகியது.  19ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து மது குடித்தல் விக்டோரிய ஒழுக்கம் சார்ந்து பார்க்கப்பட்டது. இதன் விளைவாகத் தேசியவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் மதுவிலக்குக் குறித்துப் பேச ஆரம்பித்தார்கள். இது பிரிட்டீஷ் இந்திய அதிகாரிகளுடன் பணிபுரிந்த பிராமணர்களின் பண்பாட்டு மேலாண்மைக்கு ஏற்றதாக இருந்தது. மதமாற்ற விசயத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் மாறுபட்ட சனாதனிகள் மதுவிலக்கில் ஒன்றுபட்டனர். மதுபானங்கள்மீதான வரி அரசின் முக்கிய வருவாயாக இருந்ததால் அரசின் தரப்பில் முழு மதுவிலக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மது அருந்துதலும் மதுவிலக்குப் பிரச்சாரமும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அரசாங்கத்திற்கு மதுமீதான வரி வருவாய் முக்கியம்; அதேவேளை ஒட்டுமொத்த மக்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்ற முரண்பாட்டில்தான் பிரிட்டீஷ் இந்திய அரசு மதுக்கொள்கைமீது விவாதம் நடத்திவந்தது. தேசியவாதிகளின் முழு மதுவிலக்கு கோரிக்கை எழுந்த அதேவேளையில் காலனிய அரசின் சட்ட வல்லுநர்கள் உள்நாட்டுச் சாராயத்தை அனுமதிக்கலாமா அல்லது உள்ளூரில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு அனுமதி தரலாமா, இந்த இரண்டில் எது அதிக தீங்கானது என்றும் மதுப் பயன்பாட்டினால் இராணுவ வீரர்கள், பொதுமக்களுக்கு  ஏற்படும் உடல் நலத் தீங்கு குறித்த மருத்துவர்களின் அறிவுரைகள், மதுமீதான வரியை நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மாகாணங்களுக்கிடையிலான வரியையாவது நீக்க வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கை, பெயின்ட், வார்னிஷ், டை, ஈத்தர் போன்ற தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காகத் தேவைப்படும் ஆல்கஹால் அனுமதி குறித்துக் கவலைகொண்ட அறிவியல் விஞ்ஞானிகள் - தொழிற்சாலை அதிபர்களின் கோரிக்கை எனப் பலதரப்பு கருத்துகள் வெளிப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் ஆல்கஹாலைக் கொண்டு மோட்டார் வாகனங்கள் இயக்குவதற்கான பரிசோதனைகளும் நடந்துவந்தன. ஆகவே மது மக்களுக்கான பயன்பாடு என்ற ஒற்றை நோக்கத்தில் மட்டும் இந்த விவாதம் நடைபெறவில்லை என்பதைக் கவனங்கொள்ள வேண்டும்.

இதே காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தரப்பில் நடந்த மதுவிலக்குச் செயல்பாட்டைச் சமஸ்கிருதமயமாக்கல், சமூகப் படிநிலையில் மேல் நோக்கிப் பயணித்தல் என்று சமூக அறிவியல் ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள். ஆனால் தமிழக அளவில் தலித்துகள் மத்தியில் நடைபெற்ற மதுவிலக்கு நடவடிக்கைகள் கிறிஸ்தவம், பௌத்தம் ஆகியவற்றின் தாக்கம் பெற்றதாகவும் சீர்திருத்தம். முன்னேற்றம் நோக்கம் கொண்டதாகவும் இருந்துள்ளதைக் காண முடிகிறது.

மதுவிலக்குச் சங்கம்

பி.ஒய். தெய்வசிகாமணி போன்ற சிலரால் ‘மதுவிலக்குச் சங்கம்’ 1902ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காகவே இச்சங்கம் தொடங்கப்பட்டது. 1850களில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட டெம்பரன்ஸ் இயக்கங்கள் கிறிஸ்தவ மிஷனரிகள்மூலம் இந்தியாவிலும் மதுவிலக்குப் பிரச்சாரங்களைத் தொடங்கியது. அமெரிக்கக் கிறிஸ்தவ மிஷனரிகள் சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தலித்துகள் மத்தியில் வேலை செய்துவந்தன; தேசியவாதிகளுக்கு முன்பே தலித்துகளின் முன்னேற்றத்திற்கு மதுவிலக்கு அவசியம் என வலியுறுத்திப் பேசிவந்தன.

காங்கிரசாரின் மதுஒழிப்புப் போராட்டம் (1931)

தலித்துகள் மத்தியில் பண்டிதர் அயோத்திதாசர், பூஞ்சோலை முத்துவீரன் நாவலர் போன்றோரின் முயற்சியில் பௌத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தீவிரமாகச் செயல்பட்டன. கள்ளுண்ணாமையைப் பஞ்ச சீலங்களில் ஒன்றாக வலியுறுத்தும் பௌத்த மார்க்கப் பரவலும் மதுவிலக்குச் சங்கத் தோற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். சங்கத்தின் அடிப்படை நோக்கம் மக்களிடம் சென்று குடியின் தீமை குறித்தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் பிரச்சாரம் செய்வது. இவர்கள் தங்களது சொந்தச் செலவிலே நகரங்களுக்கும் தூரத்திலுள்ள கிராமங்களுக்கும் சென்று மதுவின் தீமை குறித்துப் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பிரச்சாரத்தில் குடியால் சீரழிந்த குடும்பங்களின் கதைகள், பாடல்கள், பழமொழிகள் போன்றவற்றின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். வருடந்தோறும் சங்கத்திற்கான ஆண்டறிக்கை வாசித்தல், ஆண்டின் வரவு செலவுக் கணக்குப் பார்த்தல், சங்கச் செயல்பாடுகளை அளவிடுவது, வரும் ஆண்டிற்கான செயல்பாடுகளைத் திட்டமிடுவது என்று சங்கத்தைத் திறம்பட நடத்தினார்கள். மேலும் பண்டிதர் அயோத்திதாசர் போன்றோர்களை அழைத்துவந்து குடியின் தீமை குறித்துப் பிரசங்கம் நிகழ்த்தியுள்ளார்கள்.

மதுவிலக்குச் சங்கத்தின் ஒரு கூட்ட நடவடிக்கை பூலோகவியாஸன் (ஜூலை 1909) இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஜியார்ஜ் டவுனிலுள்ள சர்வதேசாபிமான மதுவிலக்கு சங்கத்தார் தங்களது 8ஆவது வருடோற்சவத்தைக் கொண்டாடச் சென்னை பாபம்ஸ் பெரிய சாலையிலுள்ள டேனிஷ் மிஷன் வாசகக் கூடத்தில் இவ்வருடம் ஜூலை மாதம் 31ந் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கூடினார்கள். அப்போது வேதவிற்பனர் சங்கை எம்.ஜி. கோல்ட் ஸ்மித் தேசிகர் பி.ஏ. அவர்கள் அக்கிராசனாதிபதியாய் வீற்றிருந்தார்.

சங்கத்தின் காரியதரிசி கனம் பி.ஒய். தெய்வசிகாமணியவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் நடத்தப்பட்ட வேலைகளைப் பற்றியும், வரவு செலவுக் கணக்கு விவரங்களைப் பற்றியும் ஸங்ஷேபமாக ஓர் அறிக்கைப் பத்திரம் வாசித்தார். அதிலடங்கிய விஷயங்களுள் குடியின் மயக்கத்தால் அறிவிழந்து சிறுமைக்குச் சமீபமாயும் பெருமைக்குத் தூரமாகவும் தாங்களே கெட்டுப்போவதல்லாமல் தம்சந்ததியும் தரித்திரத்தால் கணித்துப்போகும் ஜனங்களுக்கென்று வாராந்திரக் கூட்டமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் பட்டணத்தில் மாத்திரமல்ல. வெளியூர்களிலும் யாதோர் சம்பளமின்றித் தாங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு உற்சாகத்தோடு சென்று குடியின் தீமைகளைப் பிரசங்கித்து வரும் பரோபகாரமானது மிகவும் சிலாகிக்கத் தகுந்ததே. இந்தச் சங்கத்தாரைப் போல் பொதுநலத்தோடும் விருப்பமுள்ளவர்கள் ஆங்காங்கு மதுவிலக்குச் சபைகளை ஸ்தாபித்து இம்மாதிரி நடத்துவார்களானால் நம் நாடும் ஜனங்களும் எவ்வளவு மேன்மையை அடையக் கூடும்.

கனம் எம்.எஸ். இராமசாமி நாயகர் தமிழன் பத்திராதிபர் சங்கை க. அயோத்திதாஸப் பண்டிதரிவர்களிருவரும் தமிழிலும் கனம் எஸ். அஜீம் உதீன் சாயுபு அவர்கள் ஆங்கிலத்திலும் மதுவின் கேட்டைப் பற்றி முறையே வெகு விமரிசையாக உபந்நியாசித்தனர். அக்கிராசனாதிபதியும் சமயோஜிதமாக இரண்டொரு வார்த்தைகள் பேசினார். முடிவில் வந்தனங்களுடன் புட்பாரங்கள் அக்கிராசனாதிபதிக்கும் உபந்நியாசர்களுக்கும் சங்கை பி.பி. இராகவய்யரவர்களுக்கும் சூட்டப்பட்டன.  இச்சங்கம் உழைப்பில் தளராமல் மென்மேலும் ஊக்கமடையவும் இத்தகைய அநேக சங்கங்கள் ஆங்காங்கு ஏற்படவும் எல்லாம் வல்ல முழு முதற்கடவுள் அநுக்கிரகஞ் செய்வாராக

ஓர் பரோபகார சிந்தையான்

மதுவிலக்கு தூதன்

மதுவிலக்குச் சங்கத்தின் சார்பில் மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கெனத் தமிழும் ஆங்கிலமும் கலந்த இருமொழி இதழாக வெளிவந்த மதுவிலக்கு தூதன் அல்லது டெம்பரண்ஸ் ஹெரால்டு எனும் இதழை 1900ஆம் ஆண்டு தொடங்கினார்கள். வழக்கமாகச் சங்கத்தை முதலில் தொடங்கி அதன் குரலாகப் பத்திரிகையைத் தொடங்குவார்கள். ஆனால் இங்கு பத்திரிகையை முதலில் (1900 ஆம் ஆண்டில்) தொடங்கி சங்கத்தை 1902 ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளனர். இந்த இதழில் குடியினால் விளையும் தீமைகளைச் சிறு சிறு கதைகளாகவும் பழமொழிகளாகவும் விவரித்தனர். டி. மனுவேல் பிள்ளை (இவர் இதற்கு முன்பு திராவிடக் கோகிலம் எனும் பத்திரிகையை நடத்தியவர்) என்பவர்தான் இந்தப் பத்திரிகையையும் நடத்தினார். 300 பிரதிகள் விற்ற இப்பத்திரிகையின் வருடச் சந்தா ஒரு ரூபாய் எட்டணா. பிரிட்டிஷ் பாரிஸ்டர் அதிகாரி நார்டன் என்பவரிடம் பட்லராக வேலை பார்த்துவந்த ஆதிதிராவிடக் கிறிஸ்தவரான மனுவேல் பிள்ளை பின்பு அலுமினியப் பாத்திரக் கடை நடத்திவந்தார். இந்த இதழின் ஆசிரியர்களாக டி.ஏ சுந்தரம் BA.L.T,  எல்.ஐ. ஸ்டீபன் ஆகியோர் பணியாற்றினார்கள். இவர்களில் கிறிஸ்தவ ஆதிதிராவிடரான சுந்தரம் இராயப்பேட்டையிலுள்ள வெஸ்லியன் மிஷன் பெண்கள் பள்ளியில் தலைமையாசிரியராகவும் இராயப்பேட்டையிலுள்ள வெஸ்லியன் மிஷன் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார், அதேபோல இலண்டன் மிஷன் இவாஞ்சலிஸ்ட் ஆதிதிராவிடக் கிறிஸ்தவரான ஸ்டீபன் இதற்கு முன்பு சென்னை தாரகை எனும் தமிழ்ப் பத்திரிகையில் ஆசிரியராகப் பொறுப்பிலிருந்தார். சி.எம். சுந்தரம் பிள்ளை என்பவரின் அச்சகத்தில்தான் இப்பத்திரிகை அச்சானது.

இந்த இதழ் தாழ்த்தப்பட்டோரிடையே நல்ல வரவேற்பைக் கொண்டிருந்தது என்று அரசுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சமகால இதழ்களும் இந்த இதழை அறிமுகப்படுத்தி எழுதியுள்ளன. உதாரணமாக பூஞ்சோலை முத்துவீரன் நாவலர் நடத்திவந்த பூலோகவியாஸன் தலித் பத்திரிகையில் மதுவிலக்கு தூதன் பத்திரிகையைப் ‘பத்திரிகை வரவு’ என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், “மதுவிலக்கு தூதன் என்னும் ஓர் மாதாந்தரத் தமிழ்ப்பத்திரிகை வரப்பெற்றோம். அது இங்கிலீஸ், தமிழ் பாஷைகளில் வெளியிடப்படுகிறது இதனுள்ளடங்கிய விஷயம் பஞ்ச பாதங்களிலொன்றாகிய மது பானத்தைக் கண்டிப்பது,” என்று குறிப்பிடுகிறது. இதழின் தரம் குறித்து எழுதும்போது “சஞ்சிகையோ பார்வைக்கு மிக அழகாகவும், சுத்தமான பதிப்புடையதாகவும், பெருஞ்செலவை மேற்கொண்டதாகவும் விளங்குகிறது. இதே பெயராலாகிய பத்திரிகை முன்னொருக்கால் தோன்றிப் பின் மறைந்ததுபோலும் மற்றும் பத்திரிகைகள் தோன்றித் தோன்றி மறைவது போலுந் தடைபடாது வெளிவர அன்பர்கள் ஆதரிப்பதுசிதமாகும்” (பூலோகவியாஸன், டிசம்பர், 1909) என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

பூலோகவியாஸனும் வழிகாட்டுவோனும்

பூஞ்சோலை முத்துவீர நாவலரின் ஆசிரியத்துவத்தில் வெளியான பூலோகவியாஸன் இதழ் மதுவிலக்குக் குறித்துத் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தது. இந்தக் கட்டுரைகள் குடியை ஒழுக்கம்சார்ந்த பிரச்சினையாகப் பார்க்காமல் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்குக் குடி பெரும் தடையாக உள்ளதை விவாதிக்கிறது. உதாரணமாக மார்ச் 1906இல் எப்.சி. தம்புசாமி பிள்ளை என்பவர் எழுதிய கட்டுரையில், “கடும் உடல் உழைப்பிற்குச் சிறிது குடித்தால்தான் தூக்கம் வரும் என்று குடிப்பவர்கள், நான் சாப்பாட்டிற்கு முன்பு சிறிதளவே குடிப்பவன், எனது கொடூரமான நோய்க்குக் குடியில்லாமல் ஒருநாள்கூட வாழ முடியாது என்பவனும், நான் எனது சொந்தக் காசில் குடிப்பதில்லை எனக்குக் கிடைக்கும் லஞ்சப் பணத்தில்தான் குடிக்கிறேன் என்பவனும், மதியில்லாமல் குடித்துப் புரள்பவனும் ஒன்றே” என்கிறது. “குடிப்பவர்களில் நல்ல குடியர்கள், கெட்ட குடியர்கள் எல்லாம் கிடையாது. குடிப்பழக்கம் உள்ள எல்லோருமே குடியர்கள்தான்” என்கிறது. பூலோகவியாஸன் அச்சகத்தில் மதுவிலக்கிற்கான நூல்கள் அச்சிடப்பட்டன.

வழிகாட்டுவோன் இதழிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் மோசமான நிலைக்கு மது முக்கியக் காரணம் என இந்தியத் தலைமை ஆளுநர் மாண்டேகுவுக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்விண்ணப்பத்தில், “மதுபானம் ஒடுக்கப்பட்ட மக்களின் கீழ்நிலைக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் மதுவின் தீங்குகளைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவைப் பெற்றவர்களாக இல்லை. கள்ளுக்கடைகளோ பெரும்பாலும் தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அமைக்கப்படுகின்றன. மதுவிலக்கை அமுல்படுத்துவதற்காக அரசாங்கம் வருடந்தோறும் அதன்மீதான வரியை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறார்கள். ஆனால் எங்கள் ஜனங்களோ நாளுக்குநாள் மதுபானத்தைப் பெருக்கிக்கொண்டேபோகிறார்கள். ஆகவே மதுவின் வரி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்தளவிற்கு எங்கள் தரித்திரமும் அதிகரித்துவருகிறது.  ஆகையால் மதுபானக் கடைகள் எங்களுக்கு அதிகக் கெடுதியும் எங்கள் முன்னேற்றத்திற்குப் பெரிய தடையுமாயிருக்கின்றன. இவைகளைத் தாங்கள் தயவுகூர்ந்து கவனித்து, கள்ளு முதலிய மதுபானக் கடைகள் முற்றிலும் இல்லாமல் போகும்வரை அவைகளை வருடந்தோறும் குறைத்துக்கொண்டுவர வேண்டும் என வேண்டிக் கொள்ளுகிறோம்”, என்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அர்ச் அன்னம்மாள் மதுவிலக்குச் சபை

அர்ச் அன்னம்மாள் மதுவிலக்குச் சபை (St.Anne’s Temperance Society) பிரான்ஸிஸ் சி. தம்புசாமி பிள்ளை, ஜே.பி. சர்வாந்த்தோன் குருஸ்வாமிகள், சா.செ. துரைசாமி பிள்ளை ஆகியோரால் கோலார் தங்கவயல் சாம்பியன் ரீப்ஸில் தொடங்கப்பட்டது.  மதுவிலக்கை ‘வெறி விலக்கு’ என்றும் குறிப்பிட்டு வந்தார்கள். கோலார் தங்க வயலில் பெரும் எண்ணிக்கையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் மத்தியில் மதுவின் தீமை குறித்தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் பிரச்சாரம் செய்துவந்தார்கள். மதுவிலக்குச் சங்கத்தில் செயல்பட்டவர்கள் இந்தச் சங்கத்திலும் செயல்பட்டார்கள். எடுத்துக்காட்டாக எஃப்.சி. தம்புசாமி பிள்ளை இந்த இரண்டு சங்கங்களிலும் செயல்பட்டு வந்துள்ளார்.

மாநாட்டில் திருமாவளவன்


இச்சங்கத்தின் சார்பில் ‘மதுவிலக்குக் கும்மி’ ஒன்றை 1916 ஆம் ஆண்டு சி.எஸ். ஞானப்பிரகாஸம் பிள்ளை இயற்றியுள்ளார். இவர் செயின்ட் மேரீஸ் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். இந்தக் கும்மி பூலோகவியாஸன் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் முன்னுரையில்:

அன்பிற்கனிந்த அறிஞர்காள்!

பஞ்சமாபாதகத்து ளொன்றாகுங்கொடிய குடிப்பழக்கத்திலாழ்ந்து நம்மனோரில் பெரும்பான்மையோர் ஆத்தும சரீர நஷ்டத்துக்களாய், இகபரநன்மைகளை யிழந்து, வறுமை, குடும்பப் பிரிவு, தற்கொலை, பைத்தியம், ரோகம், அற்ப ஆயுள் முதலிய பெருந்தின்மைகளுக்குள்ளானார்கள், ஆகிறார்கள் என்று நாடோறும் நாம் பிடத்தியக்ஷாநுபவத்தோடு கண்டும் கேட்டும் வருமத்தியந்தப் பரிதாபக் காட்சிபெற்றனைவரும் ஒப்புக்கொள்ளும் பஹிரங்க ரஹஸ்யமன்றோ? இத்தீய பழக்க வழக்கத்தைக் குறைக்க, கல்வி கேள்விகளிற் சிறந்த மேதாவிகளிற் பலர் குடிவெறியாலுண்டாகும் அளவறுக்கப்படாக் கஷ்ட நஷ்டங்களை வியாஸங்களாகவும் செய்யுட்களாகவும் பத்திரிகை வாயிலாகவும் வெள்ளிடைமலைப் போல் விரித்துப் பிரசுரித்து வெளியிட்டிருப்பதோடு ஆங்காங்கு மதுவிலக்குச் சபைகளும் ஸ்தாபித்து வேண்டிய முயற்சியுமெடுத்து வருகின்றனர். வந்து

மென்ன? ஆலைப்பலாவாக்கலாமோ...மூர்க்கரைச் சீராக்கலாமோ? என்னு மூதுரைக்கிலக்காக குடியர்களின் தொகை அதிகப்பட்டுக் கொண்டு வருகிறதே யல்லாமல் குறைவதைக்காணோம். எனினும் “சகோதர நஷ்டம் சருவ நஷ்டம்” என்றறிந்த அறிஞர்களில் சிலர் இங்கு சங்: ஜே.பி. சர்வாந்த்தோன் குருஸ்வாமிகளக்கிராஸனத்தின் கீழ் அர்ச் அன்னம்மாள் மதுவிலக்குச்சபை யொன்று ஸ்தாபித்து இதின் கிளைச் சபைகள் பல இடங்களிலும் பஜனை சபைகளிலுமேற்படுத்தியவைகளினபிவிருத்தியை நாடி யல்லும் பகலுமுழைத்து வருகின்றனர். ஆகவே இச்சபையினங்கங்களும், அவர்கள் குடும்பங்களும் மதுபான பழக்கத்தின் தீமைகளையும் மதுவிலக்கின் நன்மைகளையும் தங்களுக்கொழிவான நேரங்களில் வாசித்துணர்ந்து தங்களயலாருக்கு மன்பர்களுக்கும் அறிவிக்குமாறு எளிய தமிழில் கும்மி நடையில் பாட வேண்டுமென்று விரும்பியதன் படிக்குக் கல்விகேள்விகளிற் சுத்த சூன்யமாகுமடிமை மேற்கூறிய மேதாவிகள் வெளியிட்டதை ஆதாரமாகக் கொண்டு எதிரொலிக்கொப்ப இம் “மதுவிலக்குக் கும்மி” பாடினேன். இது பொதுஜன சமூக நன்மையைக் கருதிய நூலாதலால், தீயக்குடிப்பழக்கமுள்ளோர் குறைகூறி கோபங்கொள்வாரெனினும், அஃதை அற்பமும் பொருட்படுத்தாது அவர்கள். நன்மை கடைபிடித்து நல்லொழுக்கத்தை நாட வேண்டுமென்பதே முழுநோக்கமாம். அறிஞர்கள் குற்றங்களைந்து குணத்தை ஹ்ரஹித்து அடியனை க்ஷமித்தங்கீகரிப்பார்களென்பது பூரண நம்பிக்கை. 

இராஜாஜியின் விமோசனம்

காந்தியரான இராஜாஜி மதுவிலக்கிற்காக இந்திய மதுவிலக்குச் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கென விமோசனம் எனும் மாதப் பத்திரிகையை 1929இல் தொடங்கினார்.  கல்கியை ஆசிரியராகக் கொண்டு திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திலிருந்து வெளியான இப்பத்திரிகையில் மதுவின் தீமைகள் குறித்த கட்டுரைகள், கருத்துச் சித்திரங்கள் முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. காந்தி ஆசிரமம் சார்பில் மதுவிலக்கை வலியுறுத்தும் ‘குடிகெடுக்கும் கள்’, ‘திக்கற்ற பார்வதி’ போன்ற நூல்களும் வெளியிடப்பட்டன. விமோசனம் பத்திரிகை மொத்தம் பத்து இதழ்கள் வெளியானது. அதன்பிறகு இராஜாஜியின் கைதைத் தொடர்ந்து பத்திரிகை நின்றுபோனது. ஆனால் விமோசனம் பத்திரிகையின் கட்டுரைகளும் கருத்துப்படங்களும் இன்றளவும் பயனுள்ளவை. ‘மதுவிலக்கு ஏன்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில், “இப்போது பகிரங்கமாய் அனைவரும் சாப்பாட்டுக் கடைகளுக்குப் போய்த் தின்பண்டங்களைப் புசிப்பது போலவே மதுபானக் கடைக்குள்ளும் போய்ச் சாராய வர்க்கங்களை அருந்துவோம். கடைகளும் பெரிய மனிதர்கள் வருவதற்குத் தக்கவாறு சுத்தமாக்கப்பட்டு விளக்கு முதலியன வைத்து மனதைக் கவருமாறு அலங்கரிக்கப்படும். இப்படி நடக்குமென்பதற்குப் போதுமான அறிகுறிகள் இப்போதே பார்க்கலாம்” என்று நிகழ்காலத்தைக் கொண்டு எதிர்காலத்தைக் கணித்துள்ளனர். பத்திரிகையில் வெளியான கட்டுரைகள் உடல் ஆரோக்கியம், ஒழுக்கம், புத்தஜாதகக் கதைகள், பொன்மொழிகள், குடியினால் ஏற்படும் பணவிரயம், பிறநாடுகளில் பின்பற்றப்படும் மதுவிலக்குப் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டன.

காந்தியர்களின் மது ஒழிப்பு நடைபயணம்

காங்கிரஸார் 1930களில் தீவிரத் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகியவற்றை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டார்கள். அதில் மிகவும் முக்கியமான நடைபயணம் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் நடைப்பயணமாகும். இந்த நடைப்பயணத்தில் மதுவின் தீமையை விளக்கும் படங்களைத் தங்களுடன் எடுத்துச் சென்றார்கள். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மதுவிலக்குப் படங்களை வரிசையாகக் கட்டித் தொங்கவிடுவது அவர்கள் வழக்கம்.  மக்கள் இந்தப் படங்களைப் பார்ப்பதற்காகக் கூடியவுடன் அவர்களிடம் மதுவின் தீமை குறித்து விளக்குவார்கள் தொண்டர்கள். ஆதிதிராவிடர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று அவர்களின் வீதிகளைப் பெருக்கிச் சுத்தமாக்கிவிட்டு மதுவிலக்குப் படங்களைத் தொங்கவிட்டு அதன் தீமைகளை விளக்கிப் பேசுவார்கள்.

கல்வியறிவு அதிகமில்லாத நாட்டில் பிரச்சாரம் செய்வது மிகவும் கடினம். நூல்களும் துண்டுப் பிரசுரங்களும் ஓரளவே பயன்படும். ஆனால் சித்திரப் படங்களைக் காட்டிப் பிரச்சாரம் செய்வது நல்ல பலனளிப்பதாக காந்தியர்கள் கருதினார்கள். இந்தப் பிரச்சாரத்திற்காகவே தெளிவான படங்களை அச்சிட்டுக் குறைந்த விலையில் விற்றார்கள். படங்களைத் தொங்கவிடுவதற்கான துணி, சட்டம், கம்பி முதலியவற்றையும் சகாய விலையில் விற்றுப் பிரச்சாரத்தை முடுக்கினார்கள்.

மதுவிலக்குப் பிரச்சாரத்தின் ஒரு செயலாக மதுவுக்கு எதிராக மக்களிடம் உறுதிமொழிப் புத்தகத்தில் கையெழுத்துப் பெற்றார்கள். ஐந்நூறு தாள்கள் புத்தகத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் உறுதிமொழி அச்சிடப்பட்டிருந்தது. அதில் “நம்முடைய நாட்டில் தருமமும் பொருளும் இன்பமும் வளர்ந்து அனைவரும் ஷேமமாயும் சுகமாயும் வாழ கள்ளு, சாராயம், அபினி, கஞ்சா முதலிய லாகிரி வஸ்த்துக்களை முற்றிலும் ஒழிக்கும் சட்டங்களை உடனே செய்வது அவசியமென்றும், அவ்விதச் சட்டங்களைச் செய்வதற்கு நான் ஆதரவாயிருப்பேனென்றும் இந்திய சட்டசபை, சென்னை சட்டசபை, கிராம, நகர, தாலுகா, ஜில்லா சபைகள் இந்தத் தேர்தல்களில் பூரண மதுவிலக்குக்கு ஆதரவாக உறுதிமொழிக்குக் கையெழுத்திடாத எவருக்கும் நான் வாக்குக் கொடுப்பதில்லை என்றும் உறுதி கூறுகிறேன்” என்று அச்சிடப்பட்ட உறுதிமொழிக்குக் கீழே கையெழுத்துடன் பெயரும் முகவரியும் எழுதப்பட்டன. பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருபாலரிடமும் கையெழுத்துகள் பெறப்பட்டன. இந்தக் கையெழுத்து இயக்கம் இந்தியா முழுவதும் நடத்தப் பட்டது.

காந்தியும் இரட்டைமலை சீனிவாசனும்

1929இல் இரட்டைமலை சீனிவாசன் மதுவிலக்குத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார், அத்தீர்மானத்தில் “கலால் வரி வருமானத்திற்காக பிர்ட்டீஷ் இந்திய அரசாங்கம் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கிவருகிறது. ஆனால் மதுவினால் ஏழை எளிய மக்கள் தங்களது சொற்ப வருமானத்தை இழப்பதுடன் உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. ஆகவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. 1933ஆம் ஆண்டு காந்தி சென்னை வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்து மனு கொடுத்த இரட்டைமலை சீனிவாசன், “மகாத்மாஜீ, கள் குடியின் கேட்டைப்பற்றி நீங்கள் பேசலாம் அது ஒன்றும் தவறில்லை. ஆனால் மதுபானம் குடிக்கும் வழக்கம் அனைத்துச் சமூகத்தினர் மத்தியிலும் இருக்கும்போது தாழ்த்தப்பட்டோரை மட்டும் கூறுவது அவமானப்படுத்துவதுபோல் உள்ளது” என்றார். இதற்குப் பதிலளித்த காந்தி “மற்றச் சாதியினரிடமும் குடிப்பழக்கம் இருக்கிறதென்பது எனக்குத் தெரியும். ஆனால் எவ்வளவோ சிரமப்பட்டு முன்னேற வேண்டிய பிற்போக்கான நிலையிலுள்ள ஹரிஜனங்களுக்கு இது கட்டுப்படியாகாது. ஆகையால் குடிப்பழக்கத்திற்கு விலகி ஒதுங்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கே அதிகம். நான் அவர்களுடைய குடிப்பழக்கத்தை அகற்ற எத்தனையோ ஆண்டுகள் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். ஆகையால் தயவுசெய்து என்னுடைய சுதந்திரத்திற்கு வேலி கட்டிவிடாதீர்கள். யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடிய எந்தச் சொல்லையும் நான் சொல்ல மாட்டேன்,” என்றார். இந்தியாவில் நடந்த மதுவிலக்குப் பிரச்சாரத்தை மேற்கோள் காட்டி பிரிட்டன், அமெரிக்க மதுவிலக்கு இதழ்கள் “இந்திய விடுதலை தவிர்க்க முடியாதது” என்று கருத்துத் தெரிவித்தன.  

இந்தியாவில் மதுவிலக்குப் பிரச்சாரத்தை காந்தி தலைமையில் காங்கிரஸ் இயக்கம் 1920களுக்குப் பின்பே தொடங்கியது. காந்தியர்களால் இவ்வியக்கம் இந்தியா முழுவதும் பரவியது. மகாத்மா காந்திக்கு மதுவிலக்கு என்பது தேசத்தின் ஆன்மாவைத் தூய்மையாக்கும் திட்டம். இதையே கிறிஸ்தவ மிஷனரிகள் ஆத்ம இரக்ஷன்யத் தொழில் என்றன. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களைப் பொருத்தமட்டில் தங்களது வாழ்நிலையை உயர்த்தும் நோக்கிலும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழும் நோக்கத்திற்காகவும் மதுவிலக்குக் கோரப்பட்டது என்பதையே மதுவிலக்குச் சங்கமும் மதுவிலக்கு தூதனும் நமக்கு உணர்த்துகின்றன. 120 வருடங்களுக்கு முன்பு தலித் அறிவுக் குழுக்களிடமிருந்து மதுவிலக்குக்கென ஒரு பத்திரிகை வெளிவந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

                  மின்னஞ்சல்: balumids@gmail.com


தலித் குரலைச் சர்வதேசமயமாக்கியவர் வி.டி.ராஜ்சேகர்

 

தலித் குரலைச் சர்வதேசமயமாக்கியவர் வி.டி.ராஜ்சேகர்

அஞ்சலி: வி.டி. ராஜ்சேகர் (1932-&2024)
ஜெ. பாலசுப்பிரமணியம்
காலச்சுவடு டிசம்பர் 2024 இதழில் வெளியானது

1986ஆம் ஆண்டு ஒரு இதழில் வெளியான தலையங்கத்திற்காக அதன் ஆசிரியரை பஞ்சாப் போலீஸ் பெங்களூர் வந்து கைது செய்து விலங்கிட்டு சண்டிகர் அழைத்துச் சென்றது என்ற செய்தி பெங்களூரு பிரஸ் கிளப்பில் பரபரப்பாகியது. இந்தச் செய்தியை அறிந்த பிராமண, உயர்சாதிப் பத்திரிகையாளர்கள், “அந்தாளுக்கு இது தேவைதான், எப்ப பார்த்தாலும் நம்மையே சீண்டுவது, எதற்கெடுத்தாலும் பிராமணர்களையே குற்றம் சுமத்துவது. அடுத்தவரின் [உயர்சாதியினரின்] விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைப்பவர். இத்தோடு இவன் கதை முடிந்தது,” என்று மனத்திற்குள் மகிழ்ந்தனர். அந்த வெறுப்பிற்குரியவர் யாரென்றால் தலித் வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வி.டி. ராஜ்சேகர். வி.டி.ஆர். என்று அனைவராலும் அறியப்பட்ட அவரை இரயில் சன்னலில் பூட்டப்பட்ட கை விலங்குடன் போலீசார் அழைத்துச் செல்லும் புகைப்படங்கள் அடுத்த நாட்களில் நாளிதழ்களில் வெளியாகின. காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவாக  எழுதிய தலையங்கத்தை மற்றொரு பத்திரிகை பிரசுரித்ததே போலீஸ் நடவடிக்கைக்குக் காரணம். ஆனால் அடுத்த சில நாள்களில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான பூட்டா சிங்கின் தலையீட்டால் வி.டி.ஆர். விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமல்ல, பூட்டா சிங் வீ.டி.ஆரைத் தனது வீட்டிற்கு அழைத்து விருந்து உபசரித்து பெங்களூர் திரும்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இந்தியாவின் சாதிப் பிரச்சினைகளை வெளிநாட்டில் பேசியதற்காக ஒருமுறை அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இவையெல்லாம் அவரது எழுத்துக்குக் கிடைத்த வெகுமதிகள்.

அகில இந்திய அளவில் தலித் அரசியலைக் கவனித்துவருபவர்களுக்கு வி.டி. ராஜசேகரைத் தெரியாமல் இருக்க முடியாது. மாதமிருமுறை வெளியான தலித் வாய்ஸ்மூலம் தலித் பிரச்சினைகளை இந்தியா முழுமைக்கும் கொண்டுசென்றவர். ஆங்கிலப் பத்திரிகையாக இருந்ததால் வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களுக்கிடையிலான தலித்துகளின் இணைவைச் சாத்தியப்படுத்தியவர். அருகிலுள்ள மாநிலங்களில் உள்ள தலித் பிரச்சினைகள் மொழித்தடையால் கவனத்திற்கு வராமலிருந்த காலத்தில், தனது எழுத்தின் மூலம் இந்திய சாதிப் பிரச்சினைகளை உலகமயமாக்கினார்.



தெற்கு கர்நாடகம் உடுப்பி, மணிப்பால் அருகிலுள்ள ஒந்திபெட்டு கிராமத்தில் திம்மப்பா ஷெட்டி, வனஜாக்ஷி ஹெக்டே பெற்றோருக்கு மகனாக 1932, ஜூலை 17  இல் பிறந்தார். சாதியடுக்கில் பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள பந்து சாதியில் பிறந்தவர். குடும்பச் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு உயர்பதவி வேலைகளைப் பெற்றிருக்க முடியும். சமூக மாற்றத்தின் மீது அக்கறை கொண்டு இதழியல் பணியைத் தேர்ந்தெடுத்தார். 25 ஆண்டுக் காலம் இதழாளராக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வேலைபார்த்தவர். 1981ஆம் ஆண்டு தலித் வாய்ஸ் பத்திரிகையை மாதமிருமுறை இதழாகத் தொடங்கினார்.

மைசூர் மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த தேவராஜ் அர்ஸ் கர்நாடகத்தின் முதல்வராகப் பதவி வகித்த காலங்களில் (1972-77, 1978-80) தலித்துகளுக்கான பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தலித்துகளுக்கு இலவச நிலம் வழங்குதல், மலம் அள்ளுதலைத் தடை செய்தல் போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலமைச்சரின் சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் வி.டி.ஆர். கவரப்பட்டார். இது குறித்துத் தொடர்ந்து தான் பணியாற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிவந்தார். இந்தக் காலத்தில்தான் அவருக்கு அம்பேத்கர், பெரியார் நூல்களின் அறிமுகம் கிடைத்தது.  அம்பேத்கர் வழியில் பௌத்தம் தழுவினார். இந்துத்துவத்திற்கு எதிராக தலித்-இஸ்லாமியர் ஒற்றுமை குறித்துத் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தார்.

1996ஆம் ஆண்டு ‘தலித் பத்திரிகையாளரைத் தேடி’ என்று சந்திரபான் பிரசாத் கட்டுரை எழுதும் நிலையில்தான் பத்திரிகைத் துறையில் தலித்துகளின் பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் 90களில் வி.டி.ஆரின் எழுத்துக்கள் தலித்துகளின் பிரச்சினையை மிகத்தீவிரமாகக் கவனப்படுத்தின. அவர் முதல் தலைமுறைச் சாதி எதிர்ப்புக் கருத்துநிலை கொண்டவர். அதாவது சாதியைத் தோற்றுவித்தவர்கள் பிராமணர்கள். பிராமணியம் என்பது பிராமணர்கள், உயர்சாதியினரிடம் மட்டுமே இயங்கக்கூடியது. ஆகவே பிராமண மேலாதிக்கத்தை ஒழிப்பதன் மூலம் பிராமணியத்தை ஒழிக்க முடியும் என்று நம்பினார். பிராமணர்கள் கம்யூனிஸ்ட் முகமூடி அணிந்துகொண்டு தங்களின் சாதிய முகத்தை மறைத்துக்கொள்கிறார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள பிராமணர்களை விமர்சித்தார். சாதி அமைப்பை ஒழித்துக்கட்டாமல் கம்யூனிஸம் இந்தியாவில் வேலை செய்யாது என்னும் கருத்துச் செல்வாக்கின் அடிப்படையில் ‘How Karl Marx Failed in Hindu India?’ என்ற நூலை எழுதினார்.

இந்திய தலித்துகளின் பிரச்சினைகளை உலகின் பிறபகுதிகளில் ஒடுக்கப்படும் பாலஸ்தீனியர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஈழத்தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருடன் இணைத்துப் பார்த்தார். வி.டி.ஆர். எழுதுவதோடு நில்லாமல் புரட்சிகர இயக்கங்களின் தலைவர்களான யாசர் அராஃபத், கடாஃபி, அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி ஜெஸ்ஸி ஜாக்சன், அமெரிக்காவின் கறுப்பர் விடுதலையின் புரட்சிகர இயக்கமான ‘நேஷன் ஃஆப் இஸ்லா’மின் தலைவர் லூயி ஃபரக்கான் ஆகியோரோடு நேரடி அறிமுகம் கொண்டிருந்தார். எங்கெல்லாம் புரட்சி வெடிக்கிறதோ அங்கெல்லாம் விசயங்களைத் தேடி வாசித்தார். அவற்றை தலித் வாய்ஸ் பத்திரிகையில் சாதி எதிப்புப் போராட்டத்துடன் இணைத்து எழுதினார். இதன்மூலம் தலித் போராட்டத்தை உலகளாவிய பார்வையில் விளக்க முற்பட்டார்.

கோலார் தங்கவயல் சட்டமன்ற உறுப்பினராக 1978-83 காலங்களில் பதவி வகித்த இந்தியக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கே. ஆறுமுகம், கர்நாடகச் சட்டமன்றத்தில் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலையை நிறுவவும், சட்டமன்றப் பிரதான வீதிக்கு அம்பேத்கர் வீதி என்று பெயரிடவும் கோரிக்கை வைத்துவந்தார். இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக வி.டி.ஆரும் தனது எழுத்தின் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். 1987ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தேசிய அளவிலான தலித் இலக்கிய மாநாட்டை நடத்தினார் வி.டி.ஆர். இவர் எழுதிய ‘Brahminism; Why Godse Killed Gandhi?’; ‘Caste a nation within the nation’; ‘Dalit: The Black Untouchable of India’; ‘Know the Hindu Mind’ போன்ற ஆங்கில நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றன. தோராயமாக 30 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். ‘India’s Intellectual Desent’ என்ற நூலுக்காக London Institute of South Asia (LISA) என்னும் அமைப்பின் 2018ஆம் ஆண்டிற்குரிய சிறந்த நூலுக்கான விருதையும் பெற்றார்.

தலித்துகளின் சமஸ்கிருதமயமாதலைத் தொடர்ந்து சாடி வந்தார். தலித்துகள் வரதட்சணை பெறுவது, பெண் சிறு தெய்வங்களை வணங்காமல் ஆண் பெருங்கடவுள்களை வணங்குவது போன்ற மாற்றங்கள் சமஸ்கிருதமயமாக்கத்தால் விளைந்தவை என்றார். முப்பது ஆண்டுகள் வெளியான தலித் வாய்ஸ் வி.டி. ஆரின் உடல் நலிவால் 2011ஆம் ஆண்டில் நின்றுபோனது. கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தவர் தனது 93ஆவது வயதில் நவம்பர் 20இல் விடைபெற்றார்.

தலித் பத்திரிகைகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொள்வதற்காகக் கடந்த அக்டோபர் மாதம் உடுப்பியிலுள்ள மணிபால் பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். அகில இந்திய அளவில் வெவ்வேறு மொழிகளில் தலித் பத்திரிகைகளை நடத்தியவர்களிடம் பேட்டி எடுக்கத் திட்டமிட்டோம். அப்போது உடனே நினைவுக்கு வந்தவர் வி.டி. ராஜ்சேகர். அவருடன் தொடர்பில் இருந்த மங்களூர் பல்கலைக்கழக இதழியல் துறைப் பேராசிரியரான நண்பர் உமேஷ் சந்திராவிடம் வி.டி. ஆரைப் பார்க்கலாமா என்றபோது, அவரின் உடல் நிலை விருந்தினர்களைச் சந்திக்கும் நிலையில் இல்லை என்று அவர் தெரிவித்தார். அடுத்த முறை நீங்கள் வரும்போது அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் உமேஷ் சந்திரா உறுதியளித்தார். ஒரு மாதத்திற்குள் அவரின் இறப்புச் செய்தி வரும் என்று நினைக்கவில்லை. தனது எழுத்தின் மூலம் சாதியவாதிகளைக் கலங்கடித்த வி.டி. ஆரை ஒரு முறை பார்த்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.

                 மின்னஞ்சல்: balumids@gmail.com

Friday, 12 February 2016

தலித் துணைவேந்தரைத் தேடி…

ஜெ.பாலசுப்பிரமணியம்

நான்கு வருடங்களுக்கு முன்பு 6 ஜூலை 2011 அன்று த நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டது அந்த செய்தியின் தலைப்பு ‘Not Many Dalits Become VCs’ என்பதுதான். அதில் தமிழ்நாட்டில் 24 பல்கலைக்கழகங்களில் அப்போது துணைவேந்தர்களாக பதவி வகித்தவர்களின் சாதிவாரி பட்டியல் ஒன்றும் தரப்பட்டிருந்தது.  அதில் முற்பட்ட வகுப்பினர் 10 இடைநிலை சாதியினர் 14 பேரும் தலித்துகளில் ஒருவர்கூட இல்லை என்பதை தெரிவித்தது. இந்த செய்தி மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பட்டிருந்தது. அப்போது துணைவேந்தர் பதவிகள் காலியாகவிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தலித் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கவேண்டும் என்பதை தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதே அந்த சுவரொட்டியின் நோக்கமாக இருந்தது. அதன்பிறகு பல்வேறு பலகலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர் ஆனால் அதில் ஒருவர் கூட தலித் இல்லை. தற்போது தமிழகத்தின் ஏழு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. அதற்குத் தகுதியான நபரைத் தேடும் பணியைத் துணைவேந்தர் தேடுகுழு மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேடுகுழுவிற்கான உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை எனச் சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஒரு உறுப்பினர் தனது எதிர்ப்பை சிண்டிகேட் கூட்டத்திலேயே பதிவு செய்திருக்கிறார். அடுத்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர் தேடுகுழுவிற்கான உறுப்பினரை தேர்ந்தெடுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. அதில் பணி நியமனம், இடம் மாறுதல், புதிய கல்லூரிக்கான அங்கீகாரம் என அனைத்து முடிவுகளையும் துணைவேந்தரே எடுப்பார். இதுபோன்ற அதிகாரக் குவியல்தான் துணைவேந்தர் பதவிக்கு இவ்வளவு போட்டியும் சர்ச்சையும்.



துணைவேந்தர் தேடுகுழு

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தரை நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கும் பொருட்டுத் தேடுகுழு ஒன்று அமைக்கப்படும். இதில் பல்கலைக்கழகப் பேரவை (senate) உறுப்பினர்கள் ஒருவரையும், பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை (Syndicate) உறுப்பினர்கள் ஒருவரையும் தேர்ந்தெடுப்பர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தப் பல்கலைக்கழகத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டவராக இருக்கக் கூடாது. மூன்றாவதாக ஒருவர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுவார், இவரே தேடுகுழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார். இந்தத் தேடுகுழு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று அதில் மூவரைத் தெரிவு செய்து ஆளுநருக்குப் பரிந்துரைப்பார்கள். இதில் ஒருவரைத் துணைவேந்தராக ஆளுநர் நியமனம் செய்வார். இதுவே தமிழகத்தில் பல்கலைகழகங்களுக்குத் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் முறை. மேலோட்டமாகப் பார்க்கும்போது எல்லாமே முறையாக நடப்பதாகவே தோன்றும், ஆனால் நடைமுறையோ வேறுவிதமாக உள்ளது. தேடு குழுவிற்கான பொதுவான சட்டங்கள், வழிகாட்டுதல்கள் என ஏதும் தமிழகத்தில் வரையறுக்கப்படாதச் சூழலில் ஒவ்வொரு பல்கலைக்கழகத் தேடுகுழுவும் தன்னிச்சையாக முடிவு எடுத்துக்கொள்ளும் அதிகாரம் படைத்ததாகிறது. உதாரணமாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான வயதுவரம்பு என்ன என்று இதுவரை முடிவாகவில்லை. பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) விதிப்படி துணைவேந்தருக்கான அதிகப்பட்ச வயது எழுபது. ஆனால் வேளாண் பல்கலைக்கழக விதி (Statute) வயது வரம்பு குறித்து ஏதும் குறிப்பிடாத நிலையில், வயதுவரம்பை உறுதிபடுத்தக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாகத் துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படையான அரசியல் தலையீடு கண்கூடாகத் தெரிகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் பொருந்தும். அமைச்சர்களின் நேரடி உறவினர்கள், கட்சிக்காரர்கள், தனியார் கல்லூரிகளை நேரடியாகவோ பினாமி மூலமோ நடத்தக்கூடிய பெரும் பணக்காரர்கள், சாதி பலம் கொண்டவர்கள் போன்றவர்களே துணைவேந்தராக வரமுடியும் என்ற நிலைக்குத் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஒரு ஆட்சியில் அமைச்சரின் மருமகன் என்றால் மற்றொரு ஆட்சியில் அமைச்சரின் மருமகள் என்று போகிறது துணைவேந்தர் பதவிகள்.

துணைவேந்தர் நியமனத்திற்குப் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. யூ.ஜி.சி 2010 விதியின்படி பத்து ஆண்டுகள் பேராசிரியராகவோ அல்லது அதற்கு இணையான கல்லூரி முதல்வர், ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவோ பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகள் எல்லாம் பெயரளவில் மட்டுமே. உதாரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் குறித்துச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பில், துணைவேந்தர் நியமனம் குறித்து மாநில அரசின் வழிகாட்டுதல்கள் ஏதும் இல்லாத நிலையில் மத்திய அரசு ஏற்படுத்திய விதிகளையே பின்பற்ற வேண்டும்; மேலும் பேராசிரியர்கள் நியமனத்திலும் சம்பள நிர்ணயத்திலும் யூ.ஜி.சி. விதியை பின்பற்றிவிட்டு, துணைவேந்தர் நியமனத்தில் மட்டும் வசதியாக யூ.ஜி.சி. விதியை மறப்பது அபத்தமாக உள்ளது என்றார் நீதிபதி ராமசுப்பிரமணியன். ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது ரத்து பெறப்பட்டு பதவிக்காலத்தையும் முடித்துச் சென்றார் அந்தத் துணைவேந்தர். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர் நியமனத்தில் யூ.ஜி.சி. விதியைப் பல்கலைக்கழகங்கள் பின்பற்றவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.




தலித் ஒருவரை கண்டடையுமா?

    தமிழகத்தில் தற்போது இருபது பல்கலைக்கழகங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 1957இல் தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் முதல் 2012இல் தொடங்கப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழகம் வரை இதில் அடங்கும். இப்பல்கலைகழகங்களில் எல்லாம் இதுவரை துணைவேந்தர்களாகப் பதவிவகித்தவர்களைக் கணக்கிட்டால் 150க்கு மேல் வரும். ஆனால் தமிழக வரலாற்றில் இதுவரை வெறும் ஆறு தலித்துகளே துணைவேந்தர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். இதுவரை பதவி வகித்த தலித் துணைவேந்தர்கள்: சாந்தப்பா (சென்னைப் பல்கலைக்கழகம்), மாரியப்பன் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), ஜெகதீசன் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), முத்துகுமாரசாமி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), பாலகிருஷ்ணன் (பெரியார் பல்கலைக்கழகம்), காளியப்பன் (அண்ணா பல்கலைக்கழகம்-திருநெல்வேலி). அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியை மட்டுமே பார்த்தால் இன்னும் எத்தனையோ தலித்துகள் துணைவேந்தர்களாகியிருக்க முடியும். ஆனால் துணைவேந்தர் பதவி என்பது அரசியல் பலமுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பதவி என்றாகிவிட்டதால் பொது அரசியலில் புறக்கணிக்கப்படும் தலித்துகள் உயர் அரசு பதவிகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனர். அரசியலில் ஏற்படும் வெற்றிடம் எல்லாத்துறைகளிலும் பிரதிபலிக்கிறது. திராவிட ஆட்சிகளில் தலித்துகளுக்கு வழங்கப்படும் அமைச்சர் பதவிகள் ஆதிதிராவிட நலத்துறை, கால்நடைத்துறை, செய்தி ஒளிபரப்புத் துறை, துணைசபாநாயகர், சபாநாயகர் போன்ற முக்கியத்துவமில்லாத துறைகளே ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தின் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளிலும் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய தலித்துகளே இருக்கின்றனர். இந்த அரசியல் வெற்றிடமே தலித்துகளுக்கான பேர பலம், சிபாரிசு பலம் போன்றவை இல்லாமல் போகிறது. இது வெறும் இடஒதுக்கீட்டுப் பிரச்சனை அல்ல. ஒரு துறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு நிகழ்கால உதாரணம் இந்தத் துணைவேந்தர் பதவிகள்.


சுதந்திர தமிழகத்தில் எத்தனையோ துணைவேந்தர்கள் வந்துபோனாலும் தலித்துகளுக்கு மட்டும் ஏன் இந்தத் வாய்ப்பு தடைபடுகிறது? யூ.ஜி.சி. விதியைப் பின்பற்றவில்லை என்பதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். தலித்துகளுக்கு இடமில்லை என்பதை எந்த நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது?

இந்தக் கட்டுரை ஒரு வடிவம் தி இந்து நாளிதழில் வெளியானது
  (http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/article8197005.ece)

Tuesday, 2 February 2016

கலக்கிட்ட வாத்தியாரே

கலக்கிட்ட வாத்தியாரே
திரை பிம்பம் எனும் பொறியில் சிக்கிய தமிழர்கள்

ஜெ.பாலசுப்பிரமணியம்

       எம்.எஸ்.எஸ். பாண்டியனின் The Image Trap: M.G. Ramachandran in Film and Politics புத்தகம் 1992 ஆம் ஆண்டு SAGE பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. The Image Trap எனும் ஆங்கிலத் தலைப்பை “பிம்பம் எனும் பொறி” என்று மொழி பெயர்தாலும் அதை விளக்கினால்தான் அதன் முழுமையான அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும். கதாநாயக பிம்ப உருவாக்கத்தின் மூலம் சாமானிய தமிழர்கள் எவ்வாறு பொறியில் சிக்கினார்கள் என்பதை விளக்கும் புத்தகம். பாண்டியன் அரசியற் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதால் எம்ஜிஆர் ஆட்சி காலத்தின் மாநிலத்தின் வருமானம் அதில் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பங்கு என்ன போன்ற புள்ளி விபரங்களை வைத்து ஆய்வை விளக்குகிறார். எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் மாநில வருமானத்தின் பெரும்பகுதி (60%) விற்பனை வரி மூலம் ஈட்டப்படுகிறது. இந்த வரி பெரும்பாலும் நடுத்தரவர்க்க மக்கள் வாங்கும் பொருட்களிலிருந்தே (சோப்பு, மருந்து பொருட்கள்) பெறப்படுகிறது. ஆனால் ஏழை மக்கள் அத்தியாவசிய பொருட்களில் மட்டுமே முக்கியத்துவம் தருவதால் மாநில அரசின் உள்நாட்டு வரியில் அவர்களின் பங்கு முக்கியமாகும். மாநிலத்தின் மொத்த வருமானத்தில்1980-ல் 1 சதவீதமாக இருந்த உள்ளூர் வரி கள்ளுக்கடை சாராயக்கடைகள் திறந்ததன் மூலம் 13.9 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்கள் செலுத்தும் நில வர், விவசாய உற்பத்தி வரி போன்ற நேரடி வருமானம் 4.6 சதவீதத்திலிருந்து (1975) 1.9 சதவீதமாக குறைந்தது. இதற்கு காரணம் வசதி படைத்தவர்கள் வர்விதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டும் கண்டுகொள்ளப்படாமலும் இருந்தனர். இப்படி பெறப்பட்ட வருமானத்தின் சிறிய பங்கு இலவச மதிய உணவு, இலவச பல்பொடி என்று ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது ஆனால் பெரும்பகுதி மானியமாக நிலவுடமையாளர்களுக்கு இலவச மின்சாரம், நீர்பாசன திட்டங்கள் என்று செலவிடப்பட்டன. இந்த புள்ளி விவரங்கள் நிரூபிக்கும் விசயம் என்னவென்றால் ஏழைகளின் இதயக்கனி என்று போற்றப்படும் எம்ஜிஆரின் ஆட்சி என்பது ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சரிகட்டும் விதமாக பணக்காரர்களிடமிருந்து வரிகளை பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை செய்யாமல் ஏழை மக்களின் மிச்ச சொச்ச பணத்தையும் வரியின் மூலம் வசதிபடைத்தவர்களுக்கு திருப்பியது. எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு பாதகமான பல விசயங்களை பட்டியலிடுகிறது பாண்டியனின் புத்தகம். பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது இந்த அரசு. இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன, காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர். விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது. 1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியைசேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது. எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கொமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும் நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது. இதைத் தழிவி எடுக்கப்பட்ட K. பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தை தடைசெய்ய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். மக்களின் ஆதரவிருந்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது.




      மேற்சொன்ன பாதகமான பலவிசயங்களுக்கு ஒரு மாநிலத்தின் முதல்வராக எம்ஜிஆருக்கு பொறுப்பு உண்டு. ஆனால் அன்று மக்களிடம் எம்ஜிஆரின் செல்வாக்கு இம்மியளவும் குறையவில்லை. இதன் பின்னனி அவரின் 40 வருட திரை வாழ்க்கையில் அவர் நடித்த 136 திரப்படங்களில் இருக்கிறது. எம்ஜிஆரின் இந்த ஏழைகளின் நண்பன் எனும் செல்வாக்கு முழுக்க திரைபிம்பத்தின் மூலம் மக்கள் மனதில் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும். இலங்கை கண்டியில் பிறந்து நாடகக் கலைஞராக தொடங்கி 1936-ல் சதிலீலாவதி மூலம் திரையில் அறிமுகமானார். 1953-ல் திமுகவில் சேர்ந்த பின்பு அவரது படங்கள் அரசியல் பேச ஆரம்பித்தன, 1962-ல் அவர் சென்னை சட்டமன்ற எம்.எல்.சி ஆனபின்பு பிரச்சார சினிமா உத்தி கையாளப்பட்டது. அவரது படங்களின் மையக்கரு ஏழைகளின் மீட்பராக உருவாக்கப்பட்டது. விவசாயி படத்தில் ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் வில்லன் அதை தடுக்கும் கதாநாயகன் (மன்னிக்கவும் எம்ஜிஆர்). எங்கவீட்டுப்பிள்ளையில் பணக்கார கோழை எம்ஜிஆரை கொடுமைபடுத்தும் வில்லன், அதை தடுக்கும் வீரமான ஏழை திருட்டு எம்ஜிஆர். படகோட்டியில் ஏழைகளை உறிஞ்சும் வட்டிக்காரர்கள் அதில் ஏழைகளை காப்பாற்றும் படித்த வீரமான எம்ஜிஆர். இப்படி தீயசக்திகளை தனது தனிமனித சாதனைகள் மூலம் முறியடித்து ஏழைகளை காப்பாற்றும் எம்ஜிஆரை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். எம்ஜிஆரின் படங்கள் மூன்று விசயங்களை மய்யப்படுத்துகிறது அதாவது ஒன்று, அநீதி ஒன்றை கட்டமைத்து அதை வன்முறை மூலமாக அடித்து நொறுக்கி நீதி வழங்கும் எம்ஜிஆர்,  இரண்டு, எவ்வளவு கஷ்டப்பட்ட அல்லது கிராமத்து குடும்பத்தை சேர்ந்த கதாநாயகனாக இருந்தாலும் படித்து அறிவாளியாக உள்ள எம்ஜிஆர், மூன்று, எப்பேர்பட்ட பணக்கார, உயர்சாதி, படித்த, அழகான, கர்வம் பிடித்த பெண்ணாக இருந்தாலும் அதை அடையும் எம்ஜிஆர். இப்படி அடித்தட்டு மக்களுக்கு மறுக்கப்படும் நீதி, கல்வி, காதல் அனைத்தையும் அந்த மக்களின் பிரதிநிதியான எம்ஜிஆர் அடைகிறார். இப்படி இருந்ததால்தான் முன்வரிசையில் மணலை கூட்டிவைத்து டூரிங்க் தியேட்டரில் படம் பார்த்த ஒரு பார்வையாளன் ‘நம்மாளு கலக்கிடாருப்பா’ என்று சொல்ல முடிந்தது. எம்ஜிஆர் படங்களில் பெண்கள் குறித்த சித்த்ரிப்பு மிகவும் பிற்போக்காக இருந்தது. விவசாயி படத்டின் “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள; இங்கிலீஸீ படிச்சாலும் இந்த தமிழ் நாட்டுல” என்ற ஒரு பாடல் இதற்கு உதாரணம் போதும். உலகம் சுற்றும் வாலிபனின் நிலவு ஒரு பெண்ணாகி என்று தொடங்கும் பாடலில் “மடல் வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க” என்ற பாடல் பெண்ணுடல் வர்ணிப்புக்கு மற்றொரு உதாரணம்.


      தமிழகத்தில் சினிமா ஒரு வெகுஜன ஊடகமவதற்கு சாதகமான பல காரணிகளை கூறமுடியும். இங்கிருந்த நாடக, கூத்து மரபு. இந்தியாவிலேயே அதிகமான திரையரங்குகள் தமிழ்நாட்டில்தான் இருந்தன, 1986-ல் 2,153 திரையரங்குகள் இருந்தன இதில் டூரிங்க் டாக்கீஸ்களின் எண்ணிக்கை 320. இங்கிருந்த நாட்டுபுற கலைகளில் இருந்த சாதி வேற்றுமை என்பது திரையரங்குகளில் கிடையாது, யார் வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் உட்காரலாம். திரையரங்கில் அனைவரும் சமம். திரையரங்குகளுக்கான டிக்கெட்டுகளும் மிகவும் குறைவாகவே இருந்தது. எம்ஜிஆர் ரசிகர்கள்தான் இன்றைய கட்டவுட், பாலபிஷேகம், கைகளில் கற்பூரம் ஏற்றுவது போன்ற எல்லா சடங்குகளுக்கும் முன்னோடிகள். திரைப்படமும் இந்துமத சடங்குகளும் இணைந்தன. சரி சினிமா ஒருவரை கதாநாயகர் என்று சொல்கிறது என்றால் மக்கள் ஏன் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் என்ற கேள்வி எழுவது இயல்புதான். எந்த ஒரு புதிய பண்பாட்டு வரவும் இங்குள்ள பண்பாட்டுடன் இணைவது அல்லது போலச்செய்வது மூலமே மக்களோடு இணைய முடிந்தது. அதாவது கதாநாயக போற்றுதல்/வழிபாடு என்பது ஏற்கனவே தமிழ் மரபில் வாய்மொழி மரபுக்கதைகளாக நிலவிவந்த ஒன்றுதான். சாகசங்கள் புரிந்த பலியாகி அடித்தட்டு மக்களின் நாட்டுப்புற கதாநாயகர்களான காத்தவராயன், முத்து பட்டன், சின்னதம்பி, மதுரை வீரன் போன்ற கதைகளின் மூலம் புரிந்து இந்த மரபை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் எம்ஜிஆரின் திரைப்படங்கள் இந்த நாட்டுப்புற கதாநாயகர்களின் அப்படியே பிரதிபலிக்கவில்லை அதாவது நாட்டுபுற கதாநாயகர்களை வழிபடும் மக்களும் அந்த கதாநாயகனும் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் இங்கு திரை கதாநாயகன் இல்லாதவனாக இல்லை. இந்த சமூகத்தை பிரதிபலிக்கும் கதாபத்திரத்தை தேர்ந்தெடுத்தாலும் சாதாரண மக்களுக்கு கிடைக்காத சில தன்னிடம் உள்ளவனாக இருக்கிறான். மக்கள் சார்ந்த செயல்பாட்டிலிருந்து பிரித்தெடுத்து எல்லாம் பெற்ற தனிநபர் இந்த மக்களை மீட்பார் என்றே திரையில் காட்டப்பட்டது. ஒரு தாழ்ந்த சாதி அல்லது வஞ்சிக்கப்பட்ட அல்லது உழைப்பு சுரண்டப்பட்ட ஒரு பார்வயாளன் தன்னை எம்ஜிஆர் தனது வீரத்தின் மூலம் மீட்பார் என்று நம்பினான். அதாவது மானத்தை வீரத்தின் மூலம் காப்பாற்றுவது, குறிப்பாக பெண்களின் மானத்திற்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் எம்ஜிஆர் சண்டையிட்டு காப்பாற்றுவது. அதையும் மிகவும் சாதாரணமாக செய்வது, அதாவது ஆயுதமுள்ள வில்லனிடம் நிராயுதபணியாக சண்டையிடுவது, ஒரு கையை பின்னால் மடக்கிக் கொண்டு ஒற்றைக் கையால் சண்டையிடுவது, சிலம்பம் சுற்றுவது என்று அவரின் வீரம் செலுமைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது.




       எம்ஜிஆரின் படத்தில் அவர் வெல்லமுடியாதவராக சாகாவரம் பெற்றவராக பார்க்கவே அவரது ரசிகர்கள் விரும்பினர்.1962-ல் வெளியான பாசம் எனும் படத்தில் எம்ஜிஆர் பாத்திரம் இறந்துபோனதால் அந்தப்படம் தோல்வி அடைந்தது. கம்பீரமாக கையை மடித்து விட்ட சிகப்பு சட்டை, அதிகாரம் படைத்த வில்லன்களுக்கு சவால் விடும் வசனம், கையை மார்பில் கட்டி நிமிர்ந்து நிற்கும் உடல் மொழி இப்படி ஒவ்வொரு விசயங்களும் அவர் மக்களை காப்பற்ற வந்தவர் என்பதை சொல்வதாக அமைந்தன. எம்ஜிஆர் என்ற தனி மனிதன் என்பதைத் தாண்டி எம்ஜிஆர் எனும் கருத்து (Idea) உருவானது. இந்த கருத்து உருவாக்கத்தில் பாடல்கள் மிகவும் முக்கியபாத்திரம் வகித்தன. மலைக்கள்ளன் படத்தின் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே”, உழைக்கும் கரங்கள் படத்தின் “உழைக்கும் கைகளே; உருவாக்கும் கைகளே” நம்நாடு படத்தின் “வாங்கைய்யா வாத்தியாரைய்யா; வரவேற்க வந்தோமைய்யாஇந்தப் பாடல்கள் எல்லாம் அதை எழுதிய கவிஞர்களால் அறியப்படாமல் எம்ஜிஆரின் தத்துவப்பாடல்கள் என்றே புரிந்துகொள்ளப்பட்டது. இது அவர் மக்களுக்கு சொல்லும் செய்தியாக பார்க்கப்பட்டது. எம்ஜிஆருடன் உணர்வுரீதியாக மக்கள் பிணைக்கப்பட்டனர். இந்தப்பாடல்கள்தான் இன்றளவும் அ.தி.மு.க. வின் தேர்தல் பிரச்சாரப்பாடல்களாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் தொடர்சியாக அகில இந்திய எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. 1972-ல் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பின்பு ரசிகர்கள் கட்சி தொண்டர்களானார்கள். 1977-ல் தொண்டர்கள் எம்.எல்.ஏக்களானர், மந்திரிகளானார்கள். அதிலிருந்து 11 ஆண்டுகள் அ.தி.மு.க. செல்வாக்கு என்பது எம்ஜிஆரின் செல்வாக்காகவே நிலைத்தது. திமுக பலமுறை அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சாட்டியும் எம்ஜிஆரை எதுவும் செய்யமுடியவில்லை. ஆனால் தாமாகவே முன்வந்து கருப்பு பணத்தை ஒப்படைக்கும் திட்டத்தில் எம்ஜிஆரே முன் வந்து தன்னிடமுள்ள 80 லட்சம் ரூபாயை ஒப்படைத்தார். எம்ஜிஆர் எனும் தனி நடிகர் தமிழ் மக்களின் மீட்பர் எனும் கருத்தாக மாறிப்போனார். 24 டிசம்பர் 1987-ல் எம்ஜிஆர் இறந்தபோது சென்னையில் 20 லட்சம் பேர் கூடினர். தமிழகத்தின் குக்கிராமங்களிலிருந்தும் எம்ஜிஆருக்கு இறுதிமரியாதை செலுத்த சென்றனர். இறுதிமரியாதை செலுத்த முடியாதவர்கள் அவரது படத்தை வைத்து அனைத்து சாவு சடங்குகளும் செய்தனர்.



       இந்த புத்தகம் எம்ஜிஆரை மட்டுமே மையப்படுதினாலும் இன்றைய அரசியல் சீர்கேட்டின் ஒட்டுமொத்த பலியையும் எம்ஜிஆரின் மீது மட்டுமே போட்டுவிட முடியாது. திரைப்படத்தில் அனைத்தையும் கதாநாயகனுக்கு தந்துவிட்டு திரைக்குப் பின்னால் இருந்து கதாநாயகனை இயக்குபவர்களை வசதியாக மறந்துவிட கூடாது. திமுகவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சரியான காலத்தில் பொருத்தமான ஊடகமாக சினிமா பயன்படுத்தப்பட்டது. ஒரு புதிய அரசியல் இயக்க உருவாக்கம் என்பது மாற்றத்திற்கான திட்டங்களை மக்களிடம் பிரச்சாரப்படுத்தி அதன் மூலம் மக்களை திரட்ட வேண்டும். இதற்கு ஊடகங்கள் மிகவும் முக்கியம். வரலாற்றைப் பார்க்கும் போது புதிய இயக்கங்கள் உருவாக்கத்தில் பத்திரிக்கைகள், பிரசுரங்கள், வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல திமுக உருவாக்கத்திலும் சினிமா மூலம் முற்போக்கு கருத்துக்கள் பரப்பப்பட்டன. ஆனால் கட்சியே முற்போக்கு கருத்துகளைவிட மக்களை கவரும் ஒப்பனை பிம்பங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தது. கட்சிக்கூட்டங்களில் அண்ணா தவறாமல் எம்ஜிஆருக்கு இடமளித்தார். ஆனால் இந்த கதாநாயக முக்கியத்துவத்தை எதிர்த்து கட்சியில் குரல்கள் எழும்பாமல் இல்லை. ஈவிகே சம்பத் திமுகவிலிருந்து வெளியேறி தமிழ் தேசியக் கட்சியை ஆரம்பித்ததற்கு அடிப்படைக் காரணம் கட்சித்தலைமை சினிமாக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான். அன்றிலிருந்து இன்றுவரை சினிமாவையும் தமிழ் சமூகத்தின் அரசியலையும் பிரிக்க முடிவதில்லை. கடவுள் இல்லை, சாதிவேற்றுமை இல்லை, ஆண்பெண் பேதமில்லை என்றெல்லாம் பெரியாரிடம் கற்று வந்தவர்கள் சினிமா என்பது பிம்பமே அது நிஜமல்ல என்பதை மட்டும் ஏனோ மக்களுக்கு சொல்ல மறந்துவிட்டனர். அதன் விளைவை இன்றுவரை தமிழ் சமூகம் எதிர்கொண்டுதான் இருக்கிறது. 

Saturday, 30 January 2016

மேலிருந்து கீழாகச் சரியும் உயர்கல்வி

மேலிருந்து கீழாகச் சரியும் உயர்கல்வி

ஜெ.பாலசுப்பிரமணியம்


   பல்கலைக்கழகங்கள் என்பவை பலகலைகளைப் பயிற்றுவித்து வெறும் பட்டங்களை வழங்கும் கழகங்கள் மட்டுமல்ல. அது சமூக அக்கறை கொண்ட விமர்சனப்பூர்வமான சமூக அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சமூகத்தின் சமநிலையற்றத் தன்மையை மாற்ற துணைபுரியக் கூடியவைகளாகவும், அரசாங்கத்திற்கு சமூகம், அறிவியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற துறை சார்ந்த அறிவுரைகளை வழங்கக்கூடிய அறிவுக்கூடாரங்களாகவும் திகழவேண்டும். உலக வரலாற்றில் அரசியல், சமூக மாற்றத்தில் பல்கலைக்கழகங்களுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. கல்விப்புலம் சாராத சிந்தனையாளர்கள் பலர் நம்மிடையே உண்டு என்றாலும் சிந்தனையின் முதலிடம் அதுதான், சீர்திருத்தத்தின் விருப்பம் அங்குதான் உருவாக்கப்படும், சமத்துவத்தின் குரல் அங்கிருந்துதான் எழும். இதற்காகத்தான் பல்கலைக்கழக வளாகங்களை சுதந்திரமான வளாகங்களாகப் பார்த்துக்கொண்டனர். அங்கு மாணவரகள் ஜனநாயக ரீதியாக தாங்கள் நம்பும் கருத்தியல்களை பரிசோதித்துப் பார்க்கும் களமாக இருக்க வேண்டும். சமூகத்தில் கற்பிக்கப்பட்ட ஆண் பெண் பாலின வேறுபாடுகளை களையும் இடமாக இருக்க வேண்டும். சாதியை நொறுக்கும் தளமாகவும் மதத்தை கேள்விக்குள்ளாக்கும் இடமாகவும் இருக்க வேண்டும்.
தமிழக உயர்கல்வியின் கவலைக்கிடமான நிலை குறித்த ஊடகங்களின் மூலம் ஓரளவு எல்லோரும் அறிந்திருப்பார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. துணைவேந்தர் நியமனங்கள், பேராசிரியர் வேலை நியமனங்கள், முனைவர் பட்ட ஆய்வுகள் நடக்கும்விதம், அறிவுத்திருட்டு ஆய்வுகள், தொலைதூரக்கல்வி நிலையங்களில் வழங்கப்படும் அவசர அட்டைகள் (பட்டங்கள்), பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், பல்கலைக்கழகத்தின் மோசமான் நிர்வாகத்தை விமர்சிக்கும் பேராசிரியர்களை பழிவாங்கும் போக்கு இப்படி பல பிரச்சனைகள் குறித்து சமீப காலமாக நாம் செய்தித்தாள்களில் படித்து வருகிறோம். என்னதான் நடக்கிறது பல்கலைக்கழகங்களில்.




பல்கலைக்கழக நிர்வாக பதவிகள் அனைத்துமே அரசியல் நியமனங்களைப்போல் நடைபெறுகிறது. இதில் பணம், அரசியல், சாதி என அனைத்து காரணிகளுக்கும் சம பங்குண்டு. இந்த ஊழல் நீரோட்டம் மேலிருந்து கீழ் பாயக்கூடியதாக இருப்பதால் பல்கலைக்கழக துணைவேந்தரிலிருந்து அடிமட்டம்வரை பாய்கிறது. ஆனால் இதன் ஊற்றுக்கண் எங்கிருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும். அதன் விளைவு கல்விப்புலம் என்பது முதல் போட்டு லாபம் பார்க்கும் தொழிலாகிப்போனது. அதனால் பல்கலைக் கழகங்களுக்கென விதிக்கப்பட்ட கற்பித்தல், ஆராய்ச்சி, சமூகம் சார்ந்த செயல்பாடுகள் போன்ற மரபான பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. சீர்கேடுகளைக் கண்டு  ஜனநாயக வழி அறச்சீற்றம் கொள்ளும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களை எளிதில் அப்புறப்படுத்துவதற்கு (தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ) பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரம் உதவுகிறது. ஏனென்றால் பல்கலைக்கழகங்களின் உயர் நிர்வாகக்குழுவான சிண்டிகேட் உறுப்பினர்கள் துணைவேந்தரை சார்ந்து ஆதாயம் பெறுபவர்களாக இருப்பதால், அவர்கள் கையெழுத்து போடும் எந்திரங்களாக ஆகிப்போனார்கள். பல்கலைக்கழக வளாகங்களில் ஜனநாயக ரீதியான அரசியல் செயல்பாடுகளுக்கு முழுமையாக தடைவிதிக்கப்படுகிறது. மாணவர், ஆசிரியர் அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மீறிப் போராடும் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். புதிய தலைமுறை பேராசிரியர்கள் தொழிற்சங்க செயல்பாடுகள் மீது மிகவும் அவநம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். நாம் உண்டு நமது வேலை உண்டு என்று இருப்பதே சிறந்த பேராசிரியப் பண்பாக வரித்துக் கொண்டுள்ளனர். அதிகாரத்திடம் மக்கள் எதையும் உரிமையாகக் கேட்கக்கூடாது என்ற அரசின் நிலையும், தயவால் மட்டுமே பெற முடியும் என்ற மக்களின் அவநம்பிக்கையும் இணைந்து போராட்ட குணத்தை மங்கிப்போகச்செய்கிறது. இந்த எதிர்ப்பற்ற சூழல் உயர்கல்வியை மேலும் சீரழிவிற்கு தள்ளுகிறது. இந்தப் பேராசிரியர்கள் மத்தியிலே படித்து வெளியேவரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும், கற்பனை செய்து பாருங்கள்.




இன்று அரசு பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்விக்காக நாடிவரும் மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையினர், கிராமத்தினர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆவர். இவர்கள் வெறும் பட்டம் பெறுபவர்களாக இல்லாமல் உயர்கல்விக்கான அறிவைப்பெற வேண்டும். பிற தனியார் பல்கலைக்கழகங்களில் படித்து வெளியே வரும் மாணவர்களுடன் போட்டியிடும் தகுதியைபெற வேண்டும். அதற்கு இப்போதைய பல்கலைக்கழக சூழல் நூறு சதவீதம் எதிராகவே உள்ளது. உயர் கல்வியின் சீரழிவை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது அரசின் மாற்றத்தை முடிவு செய்யும் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அரசுக்கு அக்கறை இல்லை என்றே அர்த்தமாகும். இன்னமும் காலம் இருக்கிறது. இதையெல்லாம்  சரிபடுத்துவதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. பல்கலைக்கழகங்கள் இன்னும் முழுமையாக சரிந்துவிடவில்லை. ஆனால் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறது. துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை அகற்ற வேண்டும். பணத்திற்கு விற்கப்படும் எந்தப்பதவியும் ஊழலின் உறைவிடமாகவே இருக்கும். பல்கலைக்கழகங்களிலிருந்து, மாணவர், ஆசிரியர், அலுவலர், ஓய்வூதியதாரர், இப்படி எந்தத் தரப்பிலிருந்தும் வரும் புகார்களுக்கு அரசு உடனே செவி சாய்க்க வேண்டும். இன்னமும் மாணவர்களின் மீது அக்கறை கொண்ட பேராசிரியர்கள், சிறந்த அறிஞர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் அவர்களை துணைவேந்தர்களாக நியமியுங்கள். காட்டு வளத்தை கானுயிர்களில் உணவுச்சங்கிலியின் மேலிருக்கும் புலியை வைத்தே அளவிடுவார்கள். புலி இல்லாத காடு வளமில்லாத காடாகும். ஒரு நாட்டின் வளம் அறிவைக்கொண்டே அளவிடப்படும். அந்த அறிவை உற்பத்தி செய்யும் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக இருப்பதே நாட்டின் வளமாகும்.




நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனும் பாரதிதாசனின் வரிகள் நல்ல குடும்பத்தைக் குறிப்பதற்கு இதுவரை பயன்படுத்தபடுகிறது. ஆனால் இனியும் பயன்படுத்தவேண்டுமானால் தமிழக உயர்கல்விக்கு தேவை தீவிர சிகிச்சை.

Monday, 14 September 2015

முதல் தலித் இதழும் முதல் நாத்திக இதழும்


முக்கியக் குறிப்பு: இந்தக்கட்டுரை இரண்டு பெருமைகளை உள்ளடக்கியது.

பெருமை 1: தத்துவம், கடவுள், படையெடுப்பு, ஆட்சி, புத்தகம், முத்தம், கம்யூனிஸ்ட் இப்படி சாதாரணமாக தொனிக்கும் எந்த வார்த்தைக்கு முன்னாலும் முதல் என்ற முன்னொட்டைச் சேர்த்துவிட்டால் அது வரலாற்றைக் குறிக்கும் முக்கியமான சொல்லாடலாக மாறிவிடுகிறது. எதையும் முதல் என்று சொல்வதில்தான் என்ன ஒரு அலாதி மகிழ்ச்சி. இந்த முதல் என்பது முதல்தான் அதற்கு முந்தையது ஒன்றை கண்டுபிடிக்கும் வரை. புதிய ஆதாரங்கள் கிடக்கும் போது பழைய முடிவுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும், இதுவே வரலாற்று விதி.

பெருமை 2: இதுவரை வெளிவராத, இதுவரை கண்டிராத, இதுவரை உணர்ந்திடாத என்று சொல்வதில்தான் எவ்வளவு போதை இருக்கிறது. இப்பூவுலகத்திலே இதற்கு முன் யாராலும் இந்த தகவல் அனுபவிக்கப்படவில்லை. இப்போது புத்தகம் எழுதுபவர்களும் குறிப்பாக ஆவணங்களை மய்யப்படுத்தி எழுதப்படும் வரலாற்றுப் புத்தகங்களில் முக்கியமாக ஒரு குறிப்பை காணமுடியும். அது, “இதுவரை வெளிவராத ஆவணங்களின் துணைக்கொண்டு எழுதப்பட்டது”. ஆம் இந்தக்கட்டுரையும் அப்படித்தான். வெளிவராத புதிய தகவல்களைக் கொண்டுள்ளது.

சூரியோதயம் (1869)

இதுவரை கிடைத்த முதன்மை ஆதாரங்களின்படி பார்த்தால் 1869-ல் திருவேங்கிடசாமி பண்டிதர் என்பவரால் தொடங்கப்பட்ட சூரியோதயம் இதழ்தான் முதல் தலித் இதழ் என்ற முடிவுக்கு வர முடிகிறது. அயோத்திதாசர் தனது தமிழன் இதழில் தலித் அறிவாளிகள் குறித்து குறிப்பிடும்போது "இச்சென்னை ராஜதானியில் ஆதியாகத் தமிழ்ப்பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டவர்களும் இக்குலத்தோர்களேயாகும். அதாவது புதுப்பேட்டை திருவேங்கிடசாமி பண்டிதர் 'சூரியோதயப்பத்திரிக்கை' என்னும் ஒன்றை வெளியிட்டிருந்தார். இரண்டாவது சுவாமி அரங்கையாதாஸவர்களால் 'சுகிர்தவசனி' என்னும் பத்திரிக்கை வெளியிட்டிருந்தார். மற்றும் இக்குலத்தோருள் அனந்த பத்திரிக்கைகளும் புத்தகங்களும் வெளிட்டிருக்கிறார்கள். நாளதுவரையிலும் வெளியிட்டும் வருகின்றார்கள்" என்கிறார்.[i] மற்றொரு கட்டுரையில் அயோத்திதாசர் "இச்சென்னையில் பர்ஸீவேலையர்[ii] தமிழ்ப்பத்திரிக்கை வெளியிடுவதற்கு முன் புதுப்பேட்டையில் 'சூரியோதயப்பத்திரிக்கை' யென வெளியிட்டு வந்த திருவேங்கிடசாமி பண்டிதரால் சித்தர்கள் நூற்களையும் ஞானக்கும்மிகளையும், தேரையர் வைத்தியம் ஐந்தூரையும், தன்விந்தியர் நிகண்டையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்".[iii] என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து சூரியோதயம் பத்திரிக்கையை நடத்திய திருவேங்கிடசாமி பண்டிதர் பத்திரிக்கை மற்றும் பதிப்புப்பணிகளிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தது புலப்படுகிறது. இந்த இதழ் ஒன்றுகூட பார்வைக்கு கிடைக்கவில்லை. இந்தியமொழி பத்திரிக்கைகளின் அறிக்கைப்படி (Native Newspapers Report) இந்த இதழ் சென்னை புதுபேட்டையிலிருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.[iv]

சுகிர்தவசனி (1872)

சுவாமி அரங்கையாதாஸ் அவர்களால் 1872-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[v]ராயப்பன் என்பவருக்கு சொந்தமான, எண். 28, நைனப்பன் தெரு, பிளாக் டவுண், மெட்ராஸ் எனும் முகவரியில் செயல்பட்டு வந்த சுகிர்தவசனி அச்சகத்தில் இந்த இதழ் அச்சிடப்பட்டது. 1873-ஆம் ஆண்டு இதன் விற்பனை எண்ணிக்கை 250 ஆக இருந்துள்ளது.[vi] அயோத்திதாசர் இந்த இதழ் குறித்து எழுதிய குறிப்பிலிருந்து[vii] இது ஒரு தலித் இதழ் என்ற முடிவுக்கு வர முடிகிறது. 1872-ஆம் ஆண்டின் இந்திய மொழி பத்திரிக்கை அறிக்கையில் இந்த இதழில் வெளி வந்த சில செய்திகளின் சுருக்கம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இதழில் வெளிவந்த நான்கு செய்திகள் கிடைக்கின்றன. இந்த தகவல்களிலிருந்து இந்த இதழின் சமூக அரசியல் பார்வை குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இதழ் முற்போக்கு கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்துள்ளது. குறிப்பாக மூட நம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, சமூக சீர்திருத்தம் போன்ற விசயங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளது புலப்படுகிறது. உதாரணமாக ஒரு கட்டுரையில் வள்ளலாரின் (இராமலிங்க அடிகள்-1823-1874) தெய்வீக சக்தி குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது, வள்ளலார் தனது சக்தியை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார் கட்டுரையாளர்.

இந்துமத அடிகளாரான இராமலிங்கப்பிள்ளை இறந்தவரை பிழைக்க வைப்பேன் என்று உறுதிகூறி வந்தார். ஆனால் ஒரு மாதமாகியும் எதுவும் நடக்கவில்லை. அறியாமையிலிருக்கிற பல இந்துக்கள் இவரின் வாக்குறுதியை நம்பி தங்கள் வேலைகளை துறந்துவிட்டு இவருக்காக காத்திருக்கின்றனர். பாவப்பட்ட விதவைகள் இறந்துபோன தங்கள் கணவர் திரும்ப கிடைப்பார் என்ற நம்பிக்கையில் பெருங்கூட்டமாக கூடியிருக்கின்றனர். இவரை பின்பற்றுபவர்களில் ஒருவர் இவரின் ஆசி பெறுவதற்காக தனது அரண்மனையை விட்டு ஒரு குடிசையில் காத்துக்கிடக்கிறார். இராமலிங்கம் அவர்கள் இறந்தவரை உயிர்பிக்கும் செயலை நிரூபிக்கும் வண்ணம் ஒரு காய்ந்த இலையை மீண்டும் பச்சையாக்குவாரா என்று கேட்கிறோம்.[viii]

அடுத்த செய்தி விதவை மறுமணத்திற்கு ஆதரவாக பேசுகிறது அந்த செய்தியில், பம்பாயில் ஒரு பள்ளியில் வேலைபார்க்கும் ஒரு விதவை ஆசிரியை மறுமணம் செய்து கொண்டார் என்பதற்காக அந்தப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் நிறுத்தப்பட்டனர். உறுதியாக பெண்கள் சாதிக்கட்டுபாடுகளை மீறுவதாலும் சாதியை துறப்பதாலும் அவரின் கற்றுக்கொடுக்கும் திறன் எந்தவிதத்திலும் குறைந்து போகாது.[ix]

மற்றொரு செய்தி நாடகங்கள் மற்றும் புத்தகங்களை தடைசெய்யக்கோரும் செய்தியில், டம்பாசாரி விலாசம் நாடகத்தை அரசாங்கம் தடை செய்ததில் சுகிர்தவசனி மிக்க மகிழ்சியடைகிறது, அதேபோல சிந்து, கோவை, தெம்மாங்கு போன்ற பாடல்களுக்கும் அரசாங்கம் இது போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும். இளம்வயதினரை கெடுக்கக்கூடிய புழக்கத்தில் உள்ள இந்த புத்தகங்களை அழித்துவிட வேண்டும். தருதலை விலாசம் எனும் புதிய நாடகமொன்று தயாராகிக் கொண்டு இருக்கிறது. இதன் பெயரே இது டம்பாச்சாரி விலாசத்தைவிட மோசமானதாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. இந்த நாடகத்திற்கான நடிகர்கள் இப்போது நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வெளிவருவதற்கு முன்பே இதை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால்தான் இதன் மேனேஜர் பிரச்சனைகளில் மாட்டாமல் இருக்கவும் வீணான செலவுகள் ஏற்படாமல் தவிக்கவும் முடியும்.[x]

அறிக்கையில் (1873) கிடைக்கும் நான்காவது செய்தி ஒருசில புத்தகங்களையும் பாடல்களையும் தடைசெய்யக்கோருகிறது. இந்தப் பாடல்களில் ஆபாசமான வார்த்தைகள் நிறைந்திருப்பதாக [அரங்கையாதாஸ்] கூறுகிறார், என்ற குறிப்பு மட்டுமே கிடைக்கிறது. ஆனால் கிடைத்திருக்கும் இந்த நான்கு செய்திகளைக் கொண்டு சுகிர்தவசனி இதழ் குறித்து நம்மால் சில முடிவுகளுக்கு வர முடிகிறது. இந்த இதழ் மூடப்பழக்கவழக்கங்களுக்கு எதிராகவும், முற்போக்கு சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்பவும், கலைப்படைப்புகளிலும் தனது கருத்தை உறுதியாகவும் எடுத்துக்கூறியுள்ளது. இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலத்திலேயே அவரின் தெய்வீக சாகசங்கள் குறித்து விமர்சனம் செய்துள்ளது இந்த இதழின் துணிவைக்காட்டுகிறது. சுகிர்தவசனியில் வெளிவந்த இந்த விமர்சனங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாக பயன்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது இராமலிங்க அடிகளின் அருட்பாவிற்கு எதிர்வினையாக மருட்பா எனும் நூல் கதிரைவேல் பிள்ளையால் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து இராமலிங்க அடிகளாரின் தம்பி தனராய வடிவேல் பிள்ளை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் கதிரைவேற் பிள்ளைக்கு ஆதரவாக சுகிர்தவசனியில் வெளியான இரமலிங்க அடிகளார் குறித்த விமர்சனங்கள் பயன்படுத்தப்பட்டன.
      
       வீ.அரசு மற்றும் ஆனைமுத்து ஆகியோர் தனித்தனியாகத் தொகுத்து வெளிவந்துள்ள 'தத்துவவிவேசினி' இதழே முதல் நாத்திக இதழ் என்று அறியப்படுகிறது. P.முனுசாமி என்பவரால் 1878-ஆம் ஆண்டு 'தத்துவவிசாரிணி' என்று பெயர் மாற்றம் பெற்று 1888 வரை வெளிவந்தது. இதற்கு ஆறு வருடங்களுக்கு முன்பே வெளிவந்த சுகிர்தவசனியில் முற்போக்கு கருத்துகளும் நாத்திக சிந்தனைகளும் வெளிப்பட்டுள்ளது உறுதியாகிறது. ஆகவே இனி நாத்திக இதழ்கள் என்று பேசுபோது சுகிர்தவசனி இதழையும் கணக்கில் கொள்ளவேண்டும்.




[i] தமிழன், 21 ஏப்ரல் 1909.
[ii] ரெவெரெண்ட் பெர்சிவல் என்பவர் தினவர்தமானி எனும் இதழை 1855-ல் தொடங்கினார். ஆனால் அயோத்திதாசர் குறிப்பிட்டபடி சூரியோதயம் தினவர்தமானி இதழுக்கு முன்பாக வெளிவந்ததற்கான சான்றுகள் இல்லை. காலப்பிழையாக இருக்கலாம்.
[iii] தமிழன், 24 பிப்ரவரி 1914.
[iv] NNPR, 1872, TNA.
[v] தமிழன், 21 ஏப்ரல் 1909.
[vi] No. 1184, Home, 10 November 1873, NAI
[vii] தமிழன், 21 ஏப்ரல் 1909
[viii] NNPR, 1872 January to February 1874
[ix] NNPR, October, 1872.
[x] NNPR, December 1872.