தலித் துணைவேந்தரைத் தேடி…
ஜெ.பாலசுப்பிரமணியம்
நான்கு
வருடங்களுக்கு முன்பு 6 ஜூலை 2011 அன்று த நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டது
அந்த செய்தியின் தலைப்பு ‘Not Many Dalits Become VCs’ என்பதுதான். அதில் தமிழ்நாட்டில்
24 பல்கலைக்கழகங்களில் அப்போது துணைவேந்தர்களாக பதவி வகித்தவர்களின் சாதிவாரி பட்டியல்
ஒன்றும் தரப்பட்டிருந்தது. அதில் முற்பட்ட
வகுப்பினர் 10 இடைநிலை சாதியினர் 14 பேரும் தலித்துகளில் ஒருவர்கூட இல்லை என்பதை தெரிவித்தது.
இந்த செய்தி மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை ஆதாரமாகக்
கொண்டு வெளியிடப்பட்டிருந்தது. அப்போது துணைவேந்தர் பதவிகள் காலியாகவிருந்த மதுரை காமராஜர்
பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தலித் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கவேண்டும் என்பதை தமிழக
அரசுக்கு கோரிக்கை வைப்பதே அந்த சுவரொட்டியின் நோக்கமாக இருந்தது. அதன்பிறகு பல்வேறு
பலகலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர் ஆனால் அதில் ஒருவர் கூட தலித்
இல்லை. தற்போது தமிழகத்தின் ஏழு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.
அதற்குத் தகுதியான நபரைத் தேடும் பணியைத் துணைவேந்தர் தேடுகுழு மேற்கொண்டுள்ளது. சமீபத்தில்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேடுகுழுவிற்கான உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும்
தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை எனச் சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஒரு உறுப்பினர் தனது
எதிர்ப்பை சிண்டிகேட் கூட்டத்திலேயே பதிவு செய்திருக்கிறார். அடுத்து தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர் தேடுகுழுவிற்கான உறுப்பினரை தேர்ந்தெடுத்ததை எதிர்த்து
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி
அதிகாரம் கொண்டது. அதில் பணி நியமனம், இடம் மாறுதல், புதிய கல்லூரிக்கான அங்கீகாரம்
என அனைத்து முடிவுகளையும் துணைவேந்தரே எடுப்பார். இதுபோன்ற அதிகாரக் குவியல்தான் துணைவேந்தர்
பதவிக்கு இவ்வளவு போட்டியும் சர்ச்சையும்.
துணைவேந்தர் தேடுகுழு
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தரை நேர்மையான முறையில்
தேர்ந்தெடுக்கும் பொருட்டுத் தேடுகுழு ஒன்று அமைக்கப்படும். இதில் பல்கலைக்கழகப் பேரவை
(senate) உறுப்பினர்கள் ஒருவரையும், பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை
(Syndicate) உறுப்பினர்கள் ஒருவரையும் தேர்ந்தெடுப்பர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்
அந்தப் பல்கலைக்கழகத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டவராக இருக்கக் கூடாது. மூன்றாவதாக
ஒருவர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுவார், இவரே தேடுகுழுவின் ஒருங்கிணைப்பாளராகவும்
இருப்பார். இந்தத் தேடுகுழு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று அதில்
மூவரைத் தெரிவு செய்து ஆளுநருக்குப் பரிந்துரைப்பார்கள். இதில் ஒருவரைத் துணைவேந்தராக
ஆளுநர் நியமனம் செய்வார். இதுவே தமிழகத்தில் பல்கலைகழகங்களுக்குத் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும்
முறை. மேலோட்டமாகப் பார்க்கும்போது எல்லாமே முறையாக நடப்பதாகவே தோன்றும், ஆனால் நடைமுறையோ
வேறுவிதமாக உள்ளது. தேடு குழுவிற்கான பொதுவான சட்டங்கள், வழிகாட்டுதல்கள் என ஏதும்
தமிழகத்தில் வரையறுக்கப்படாதச் சூழலில் ஒவ்வொரு பல்கலைக்கழகத் தேடுகுழுவும் தன்னிச்சையாக
முடிவு எடுத்துக்கொள்ளும் அதிகாரம் படைத்ததாகிறது. உதாரணமாக, தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான வயதுவரம்பு என்ன என்று இதுவரை முடிவாகவில்லை. பல்கலைக்கழக
மானியக்குழுவின் (UGC) விதிப்படி துணைவேந்தருக்கான அதிகப்பட்ச வயது எழுபது. ஆனால் வேளாண்
பல்கலைக்கழக விதி (Statute) வயது வரம்பு குறித்து ஏதும் குறிப்பிடாத நிலையில், வயதுவரம்பை
உறுதிபடுத்தக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாகத் துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படையான
அரசியல் தலையீடு கண்கூடாகத் தெரிகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும்
பொருந்தும். அமைச்சர்களின் நேரடி உறவினர்கள், கட்சிக்காரர்கள், தனியார் கல்லூரிகளை
நேரடியாகவோ பினாமி மூலமோ நடத்தக்கூடிய பெரும் பணக்காரர்கள், சாதி பலம் கொண்டவர்கள்
போன்றவர்களே துணைவேந்தராக வரமுடியும் என்ற நிலைக்குத் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஒரு
ஆட்சியில் அமைச்சரின் மருமகன் என்றால் மற்றொரு ஆட்சியில் அமைச்சரின் மருமகள் என்று
போகிறது துணைவேந்தர் பதவிகள்.
துணைவேந்தர் நியமனத்திற்குப் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைகளையும்
வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. யூ.ஜி.சி 2010 விதியின்படி பத்து ஆண்டுகள் பேராசிரியராகவோ
அல்லது அதற்கு இணையான கல்லூரி முதல்வர், ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவோ பணியாற்றியிருக்க
வேண்டும். ஆனால் இந்த விதிகள் எல்லாம் பெயரளவில் மட்டுமே. உதாரணமாக மதுரை காமராசர்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் குறித்துச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை
வழங்கிய தீர்ப்பில், துணைவேந்தர் நியமனம் குறித்து மாநில அரசின் வழிகாட்டுதல்கள் ஏதும்
இல்லாத நிலையில் மத்திய அரசு ஏற்படுத்திய விதிகளையே பின்பற்ற வேண்டும்; மேலும் பேராசிரியர்கள்
நியமனத்திலும் சம்பள நிர்ணயத்திலும் யூ.ஜி.சி. விதியை பின்பற்றிவிட்டு, துணைவேந்தர்
நியமனத்தில் மட்டும் வசதியாக யூ.ஜி.சி. விதியை மறப்பது அபத்தமாக உள்ளது என்றார் நீதிபதி
ராமசுப்பிரமணியன். ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற
தீர்ப்பின் மீது ரத்து பெறப்பட்டு பதவிக்காலத்தையும் முடித்துச் சென்றார் அந்தத் துணைவேந்தர்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர் நியமனத்தில் யூ.ஜி.சி. விதியைப் பல்கலைக்கழகங்கள்
பின்பற்றவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
தலித் ஒருவரை கண்டடையுமா?
தமிழகத்தில்
தற்போது இருபது பல்கலைக்கழகங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 1957இல்
தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் முதல் 2012இல் தொடங்கப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழகம்
வரை இதில் அடங்கும். இப்பல்கலைகழகங்களில் எல்லாம் இதுவரை துணைவேந்தர்களாகப் பதவிவகித்தவர்களைக்
கணக்கிட்டால் 150க்கு மேல் வரும். ஆனால் தமிழக வரலாற்றில் இதுவரை வெறும் ஆறு தலித்துகளே
துணைவேந்தர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். இதுவரை பதவி வகித்த தலித் துணைவேந்தர்கள்:
சாந்தப்பா (சென்னைப் பல்கலைக்கழகம்), மாரியப்பன் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), ஜெகதீசன்
(பாரதிதாசன் பல்கலைக்கழகம்), முத்துகுமாரசாமி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), பாலகிருஷ்ணன்
(பெரியார் பல்கலைக்கழகம்), காளியப்பன் (அண்ணா பல்கலைக்கழகம்-திருநெல்வேலி). அரசியல்
தலையீடு இல்லாமல் தகுதியை மட்டுமே பார்த்தால் இன்னும் எத்தனையோ தலித்துகள் துணைவேந்தர்களாகியிருக்க
முடியும். ஆனால் துணைவேந்தர் பதவி என்பது அரசியல் பலமுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
பதவி என்றாகிவிட்டதால் பொது அரசியலில் புறக்கணிக்கப்படும் தலித்துகள் உயர் அரசு பதவிகளிலும்
புறக்கணிக்கப்படுகின்றனர். அரசியலில் ஏற்படும் வெற்றிடம் எல்லாத்துறைகளிலும் பிரதிபலிக்கிறது.
திராவிட ஆட்சிகளில் தலித்துகளுக்கு வழங்கப்படும் அமைச்சர் பதவிகள் ஆதிதிராவிட நலத்துறை,
கால்நடைத்துறை, செய்தி ஒளிபரப்புத் துறை, துணைசபாநாயகர், சபாநாயகர் போன்ற முக்கியத்துவமில்லாத
துறைகளே ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தின் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளிலும் மாவட்டச்
செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய தலித்துகளே இருக்கின்றனர்.
இந்த அரசியல் வெற்றிடமே தலித்துகளுக்கான பேர பலம், சிபாரிசு பலம் போன்றவை இல்லாமல்
போகிறது. இது வெறும் இடஒதுக்கீட்டுப் பிரச்சனை அல்ல. ஒரு துறையில் ஒடுக்கப்பட்ட மக்கள்
எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு நிகழ்கால உதாரணம் இந்தத் துணைவேந்தர்
பதவிகள்.
சுதந்திர தமிழகத்தில் எத்தனையோ துணைவேந்தர்கள் வந்துபோனாலும்
தலித்துகளுக்கு மட்டும் ஏன் இந்தத் வாய்ப்பு தடைபடுகிறது? யூ.ஜி.சி. விதியைப் பின்பற்றவில்லை
என்பதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். தலித்துகளுக்கு இடமில்லை என்பதை
எந்த நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது?
இந்தக் கட்டுரை ஒரு வடிவம் தி இந்து நாளிதழில் வெளியானது
(http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/article8197005.ece)
இந்தக் கட்டுரை ஒரு வடிவம் தி இந்து நாளிதழில் வெளியானது
(http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/article8197005.ece)
No comments:
Post a Comment