Saturday, 11 February 2012

இந்திய ஊடகங்களில் தலித்துகள்

இந்திய ஊடகங்களில் தலித்துகள்
இந்த கட்டுரையின் அடிப்படை நான் வேலைத் தேடும் சொந்த அனுபவத்தில் தொடங்குகிறது. நான் தகவல் தொடர்பியலில் முதுகலை படிப்பு முடித்துவிட்டு, சென்னை வந்தேன், தமிழ் ஊடக நிருபராவதற்கு; ஒரு தமிழ் தினசரி நிருபர் பதவிக்கு நேர்முகத்தேர்விற்காக  அழைத்தனர். நேர்முகத்தேர்வின் முதல் கட்டமாக, என்னைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதச் சொன்னார்கள். எழுதி செய்தி ஆசிரியரிடம் கொடுத்தேன். அதற்குப் பின் ஒரு நேர்காணல். சிறிது பயத்துடன், ஊடகங்களின் நெறிமுறைகள், இந்தியாவின் முதல் செய்த்தித்தாள், அன்றைய தலைப்பு செய்திகள், இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து கொண்டிருந்தேன். நேர்காணலின் போது, செய்தி ஆசிரியர் முதல் கேள்வியை ஒரு புன்னகையுடன், தமிழில் கேட்டார்,

 “பாலசுப்ரமணியம், உங்களோட சொந்த ஊர்?

திருநெல்வேலி, சர்.
ஆசிரியர்: திருநெல்வேலில பிள்ளைமார்தான் அதிகம் இல்லையா?
நான்: ஆமாம், டவுனில்  நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஆசிரியர்: நீ பிள்ளைமாரா?
நான்: இல்ல, சர்.
ஆசிரியர்: அப்புறம்?
நான்: எஸ்.சீ
ஆசிரியர்: ஓஹோ …(மௌனம்)
ஆசிரியர்: சரி, ஆள் தேவைப்படும் போது சொல்கிறோம்.
நான்: நன்றி சர்.”
அந்த அலுவலகத்தில்  இருந்து அதற்குப்பின் எந்த அழைப்பும் வரவில்லை
இந்திய ஊடங்களில் தலித்துகள் 
தி வாஷிங்டன் போஸ்ட் செய்திதாளின் இந்திய செய்தியாளராக பணியாற்றிய கென்னெத் ஜே கூபர் எனும் ஆப்பிரிக்க அமெரிக்கர் 1996 -ல் எழுதிய தனது கட்டுரையில் "இந்தியாவில் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் செய்திதாள்களில் மிகமிகக்  குறைவாகவே உள்ளனர்" என்று குறிப்பிட்டார். இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக தில்லியில் உள்ள பத்திரிக்கையாளர் பி என் உனியால் தனது கட்டுரையில் "கடந்த முப்பது வருடமாக நான் செய்தியாளராக பணியாற்றுகிறேன் ஆனால் இதுவரை ஒரு தலித் பத்திரிக்கையாளரை கூட நான் சந்தித்ததில்லை " என்று எழுதினார். இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு 1998 -ல் தலித் நிறுவனம் ஒன்று “End Apartheid in Indian media – Democratise Nation’s Opinion” எனும் தலைப்பில் கோரிக்கை மனு ஒன்றை இந்திய பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு அளித்தது, அதில் 2005 - ம் ஆண்டுக்குள் தலித் மக்கள் தொகை சதவீதத்திற்கு நிகராக இந்திய பத்திரிக்கைகளிலும் தலித்துகள் இடம்பெறுவதை உறுதி செய்ய  தேசிய ஆணையம் ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் (ராபின் ஜெப்ரி 2001).

ராபின்  ஜெப்ரியின் கட்டுரையில் 'இந்திய ஊடகங்களில் தலித் செய்தி ஆசிரியரோ தலித்துகள் நடத்தும் செய்தித்தாள்களோ இல்லை, குறிப்பாக இந்திய பத்திரிகைத் துறையில் தலித் செய்தியாளர்களோ துணை ஆசிரியர்களோ இல்லை என்பதே உண்மை" என்கிறார். சித்தார்த் வரதராஜன் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில் "தொலைக்காட்சிகளில் இடஒதுக்கீடு தொடர்ப்பான செய்திகள் ஒருதலைபட்சமாக வருவதற்கு ஊடகங்களில் தலித்துகள் இல்லாததே காரணம்" என்றும் அதற்குத்  தீர்வாக "செய்தி ஊடக நிறுவங்களில் சமவாய்ப்பு வழங்குவதற்கு இதுவரை ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினரை (தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர்) உட்கொணர்வு மூலமே இதற்கு தீர்வு காண முடியும்" என்கிறார். 2006 - ம் ஆண்டில் சி.எஸ்.டி.எஸ் ஆராய்ச்சி நிறுவனம் தில்லியில் இந்தி மற்றும் ஆங்கில ஊடக நிறுவனங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நடத்திய ஆய்வில் அச்சு ஊடகங்களில் 90 சதவீதம் பேரும் தொலைக்காட்சி ஊடகங்களில் 70 சதவீதம் பேரும் பிராமணர்கள் மற்றும் உயர் சாதியினர் என்பது தெரிய வருகிறது.


ஊடக நிறுவனங்களில் தலித்துகள் குறைவாக இருப்பதற்கு ஊடக நிறுவனங்களின் சமுக விலக்குதலே காரணம் என்று முடிவாக கூறமுடியாது, ஏனென்றால் ஊடக (தனியார்) நிறுவனங்களில் ஆட்கள் தேர்தெடுக்கும் முறை மிகவும் ரகசியமாக பின்பற்றப்படுகிறது.  ஊடக நிறுவனங்களில் செய்தியாளர்கள் தேர்ந்தெடுக்கும் முறை வெளிப்படையாக இல்லாமல் இருப்பதால் இது குறித்து தெளிவான முடிவுக்கு வருவது சிக்கலாகிறது. ஆனால் ஏற்கனவே வேலை பார்க்கும் செய்தியாளர்களின் பரிந்துரை மற்றும் நிர்வாகத்திற்கு தெரிந்தவர்களின் பரிந்துரையின் பேரிலேயே வேலை நியமனம் நடைபெறுகிறது. இந்திய சமூகத்தில் மனித உறவுகள் என்பது சாதி சார்ந்தே புழங்குவதால் இது போன்ற பரிந்துரைகள் யார் யாருக்கு செய்வார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆக இந்திய ஊடகங்களில் தலித்துகள் இல்லாமல் போனதற்கு ஊடக நிறுவனங்கள் பணியாளர் பண்மைத்தன்மையில் கவனம் செலுத்தாததே காரணமாகும். இதன் விளைவு (பணியாளர் குறைவு அல்லது இல்லாமல் போவது) அந்த ஊடகங்களின் உள்ளடக்கங்களிலும் வெளிப்படுகிறது.

வெகுசன ஊடகங்களின் இடமளிப்பு 

வெகுசன ஊடகங்களில் தலித்துகள் குறித்த செய்திகள் முந்தைய காலங்களை விட கடந்த இரண்டு பதிற்றாண்டுகளாக அதிகம் இடம்பெறுகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. அம்பேத்கர் நூற்றாண்டான 1990 களுக்குப் பின்பு பல்வேறு மாநிலங்களில் தலித் இயக்கங்கள் ஊடக கவனம் பெற்றன.  மேலும் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் வருகையாலும் தலித் மக்கள் மற்றும் அவர்கள் மீதான வன்முறைகள் ஊடக கவனம் பெற்றன. தமிழகத்தில் தமிழ் செய்திதாள்கள் மற்றும் இதழ்களை விட ஆங்கில ஊடகங்கள் (அவுட் லுக், பிரன்ட் லைன், தி ஹிந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்) தலித்துகள் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தன. இதனால், ஆங்கில ஊடகங்கள் தலித்துகளை அதிகமாக நியமனம் செய்திருக்கின்றன என்று அர்த்தம் இல்லை. ஆங்கில ஊடகங்கள் அகில இந்திய அளவில் செயல்படுவதால் அவை தங்களை முற்போக்கு முகங்களாக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது, அதே வேளை ஆங்கில ஊடகங்கள் சாதி அமைப்பு மற்றும் தலித்துகளுக்கான அரசு திட்டங்களில் உள்ள குறைகளை கேள்விக்குட்படுத்தாமல் தலித்துகள் மீதான வன்முறைகளை மட்டுமே (சோம்ஸ்கி சொல்வது போல Road Crime ) சித்தரிப்பதிலேயே கவனமாக உள்ளன. ஆனால் மொழி பத்திரிக்கைகளுக்கு இது போன்ற எந்த கட்டாயமும் இல்லை, ஏனென்றால் இந்திய மொழி பத்திரிக்கைகளின் செயல்பாட்டு வெளி மொழி மாநிலம் எனும் கிராமத்திற்குள்ளேயே  இருக்கிறது, அது எப்போதுமே சாதி அமைப்பிற்குள்ளேயே செயல்படுகிறது.தலித் சார்ந்த செய்திகளுக்கு ஆங்கில ஊடகங்கள் இடமளித்து தலித் இயக்கங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. அனால் இங்கு நாம் கவனம் கொள்ள வேண்டியது தலித்துகள் குறித்த செய்திகளுக்கு இடமளிக்கப்படுகிறதா இல்லையா என்பது மட்டுமல்ல, இடமளிக்கப்படும் செய்திகளில் தலித்துகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது முக்கியம். 

இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு தலித்துகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் பல ஊடக கவனம் பெற்றன. உதாரணமாக 1968 - ல் கீழவெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு கொழுத்தப்பட்டனர். இந்தச் செய்தியை தினமணி நாளிதழ் 'கிசான்களுக்கிடையிலான மோதல்' என்றே தலைப்பிட்டது. அப்போது இந்த சம்பவம் அனைத்து ஊடகங்களாலும் ஒரு வர்க்கப் பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்பட்டது (அதற்கு இடது சாரி இயக்கங்கள் ஒரு காரணம்). ஆனால் பல வருடங்களுக்குப் பின்பு தலித் இயக்கங்கள் எழுச்சிப்பெற்ற காலகட்டங்களில் கீழவெண்மணி சம்பவத்தை சாதிய படுகொலையாக மறுவரையறை செய்தன. ஆனால் அப்போது இந்த சம்பவத்தை ஊடகங்கள் ஒரு தீண்டாமையின் வெளிப்பாடாக சாதிய வன்மமாக பர்கத்தவறின. தலித் இயக்கங்கள் எழுச்சிப்பெற்ற 1990 களுக்குப் பின்பும் கூட தலித் இயக்கங்களின் போராட்டங்களை ஊடகங்கள் வன்முறையாளர்களின் கூட்டங்கள் எனவும், ஆகவே அவர்களை தாக்குவது காவல்துறையின் தார்மீக கடமை என்றும் 'செய்திகளை' பதிவு செய்தன(தாமிரபரணி, கொடியங்குளம் ஆகிய சம்பவங்களில் இதுவே நடந்தது). ஹுகோ  கோரின்ஜ் கூறுவது போல "தாமிரபரணி சம்பவத்தில் காவல்துறையால் கொல்லப்பட்டவர்களை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி செத்ததாகவே பொது மக்களை நம்மவைக்க முயற்சு செய்தன". மகாராஷ்டிரா மாநிலம் கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ஊரின் பொது இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துன்புறுத்தி கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து முடிந்து எட்டு நாட்களுக்குப்பிறகே DNA நாளிதழில் செய்தி வெளியாகியது. சில இந்தி நாளிதழ்கள் காவல்துறையின் பொய்யையே தங்களின் 'உண்மை செய்தியாக' வெளியிட்டன. இந்த கொலைகளை ஆதிக்கச் சாதியினரின் 'ஒழுங்கு நடவடிக்கை' என்றே நாளிதழ்கள் வெளியிட்டன. ஆனந்த் டெல்டும்ப்டே கூறுவது போல "இது போன்ற செய்திகள் சாதியின் கொடூரத்தை மறைப்பதோடல்லாமல் செய்தி வாசிப்பவர்களை தலித்துகள் மீது பரிதாபப்படாமலும் பார்த்துக்கொள்கிறது."

செய்தியறைகளில் தலித்துகள்

செய்தியறை எனும் கருத்தாக்கம் ஊடக நிறுவனகளின் செய்தி உற்பத்தியாகும் அறையை குறிக்கிறது, அதாவது சமையலறையில் சாப்பாடு தயாராவது போல செய்தியறைகளில் செய்து உருவாக்கப்படுகின்றன. அமெரிக்காவில் செய்தியறைகளில் பன்மைத்தன்மையை பேணுவதற்காக ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின்படி '"நாம் செயலாற்றும் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் செய்தியறைகளில் வாய்ப்பளிப்பதே சமூக பொறுப்புள்ள ஊடகங்களின் கடமை" என்றது. 1975 - ல் அமெரிக்க ஊடகங்களில் கருப்பர்கள் மற்றும் சிறுபான்மையினர் 3.95% மட்டுமே இருப்பதை 'அமெரிக்க ஊடக செய்தி ஆசிரியர்கள் சங்கம்' கண்டது. இதைத்தொடர்ந்து 1978 -ல் நடந்த இந்த சங்கத்தின் வருடக்கூட்டத்தில் ஒரு கொள்கை முடிவு எடுக்கப்பட்டது அதற்கு 'இலக்கு - 2000' என்று பெயரிட்டனர். இலக்கு என்னவென்றால் 2000-ம் வருடத்தில் அமெரிக்க செய்திதாள்களில் மக்கள் தொகைகேற்ப அனைத்து சமூக குழுக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு பின்வரும் வழிமுறைகளை முன்மொழிந்தனர் 1. செய்திதாள்கள் வேலைக்கு ஆள் சேர்க்கும்போது பன்மைத்தன்மையை கடைபிடிக்கவேண்டும், 2. கறுப்பர் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு இதழியல் கல்வி படிப்பதற்கான உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டும், 3. சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பளிக்கும் பொருட்டு சிறப்பு வேலைவாய்ப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் 4. வருடந்தோறும் செய்தியறைகளில் இனக்குழுவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த கொள்கை முடிவை மொத்தம் உள்ள 1446 செய்தித்தாள் நிறுவனங்களில் 950 (66%) நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன. அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாள் நிறுவனங்கள் செய்தி பன்மைத்துவத்தை அடையும் நோக்கத்தில் சிறுபான்மையினரை பணிக்கமர்த்தினர். மேலும் இது போன்ற முடிவுகளுக்கு சமூகப்பொறுப்பு மட்டுமே காரணம் அல்ல அதையும் தாண்டி இனிவரும் காலங்களில் சந்தையில் தாக்குபிடிக்க வேண்டுமானால் செய்தியறைகளில் பன்மைத்தன்மையை கடைபிடிக்கவேண்டும் என்ற நிலை அங்கு உருவாகியது. (சிட்டி ஆப் காட் திரைப்படத்தில் கறுப்பர் இனத்தை சேர்ந்த கதாநாயகனுக்கு இதுவரை கிடைக்காத புகைப்படங்களை எடுத்தமைக்காக ஒரு பத்திரிக்கையில் புகைப்படக்காரராக வேலை கிடைப்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம்).
இந்த அமெரிக்க உதாரணம் இந்திய ஊடகங்களில் தலித்துகள் மிகவும் குறைவாக இருப்பதற்கு சரியான தீர்வாக இருக்கும். ஆனால் பிற தனியார் வணிக நிறுவனங்கள் கேள்வி எழுப்பவது போல ஊடக நிறுவனங்களும் 'திறமை' 'தகுதி' குறித்து கேள்விகள் எழுப்பலாம். ஆனால் ஊடக நிறுவனங்கள் தலித்துகள் ஊடக வேலையை விரும்புவது இல்லை அல்லது இந்த 'சவாலான' வேலைக்கேற்ற திறமையானவர்கள் அங்கு இல்லை என்ற காரணங்களைக் கூறி தட்டிக்கழிக்க முடியாது. ஊடகங்கள் தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் அனைவருக்கும் செய்தியறைகளில் வாய்ப்பளிக்கும் சமூகப்பொறுப்பு அவர்களுக்கிருக்கிறது. தேசிய எஸ்.சி. எஸ்.டி. ஆணையர் திரு.புனியா தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தும்போது "தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனங்களான வங்கி மற்றும் அரசு சலுகைகளை சார்ந்தே செயல்படுகின்றன. ஆகவே இடஒதுக்கீட்டிலிருந்து இவை விலக முடியாது" என்கிறார்.
வெவ்வேறு சமூக குழுக்களிலிருந்து பத்திரிக்கையாளர்களை அடையாளம் காண்பது என்பது சாதாரண காரியம் அல்ல. ஆனால் பத்திரிகைத்துறையில் இதுவரை வாய்ப்பளிக்கப்படாத குழுக்களுக்கு பத்திரிக்கையாளர் பயிற்சியளிப்பது கடினமான ஒன்றல்ல. இதை ஒவ்வொரு ஊடக நிறுவனமும் செயல்படுத்த முன்வரவேண்டும். அதாவது இந்திய ஊடகங்களில் பன்மைத்தன்மையை செயல்படுத்த தலித்துகளை உட்கொணர உதவித்தொகையுடன் கூடிய பத்திரிக்கையாளர் பயிற்சியை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு பயிற்சி பெற்றவர்களை ஊடக நிறுவனங்கள் வேலைக்கமர்த்தி தங்களின் சமூகப்பொறுப்பை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். சென்னையில் செயல்பட்டுவரும் 'ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்' இதற்கு ஒரு உதாரணமாக கொள்ளலாம்.

ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்

இந்த கல்லூரி மீடியா டெவலப்மென்ட் பவுண்டேசனால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஒரு வருட டிப்ளமோ இதழியல் கற்றுக்கொடுக்கப்படுகிறது. தொலைக்காட்சி, அச்சு ஊடகம், வானொலி, மற்றும் இணைய ஊடகம் ஆகிய நான்கு பிரிவுகளில் பயிற்சியளிக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கான கல்விக் கட்டணம் மூன்று லட்சம் ரூபாய் வரை இருப்பதால் சாதாரணமானவர்கள் அணுக முடியாது என்பது உண்மை. ஆனால் இங்கு பயிற்சி பெரும் மாணவர்கள் இந்திய அளவில் ஆங்கில ஊடகங்களில் வேலைவாய்ப்பு  பெறுகின்றனர். கடந்த 2005 -ம் ஆண்டு இந்த கல்லூரி வருடந்தோறும் நான்கு தலித் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுவதும் இலவசமாகப் பட்டு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சியை அறிமுகப்படுத்தியது. இந்தியாவிலேயே தனியார் இதழியல் கல்லூரிகளில் தலித்துகளுக்கான பெல்லோஷிப் வழங்கும் முதல் கல்லூரி இதுவே என்பது முக்கியம். இந்த பெல்லோஷிப் அறிமுகப் படுத்தப்பட்ட முதல் வருடத்தில் (2005) மூன்று தலித் மாணவர்கள் பயிற்சி பெற்று ஊடகங்களில் வேலைக்கமர்ந்தனர். ஆனால் அதற்கு அடுத்த வருடம்  போதிய விண்ணப்பங்கள் தலித் மாணவர்களிடமிருந்து பெறப்படாததால் இதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இந்தப் பிரச்னை கடந்த 2010 வரை நீடித்தது. கடந்த மார்ச் 2010 அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டபோது தலித் மாணவர்களிடமிருந்து குறைவான விண்ணப்பங்களே வந்தன. இந்த முறை ACJ -ல் படித்த பழைய மாணவர்கள் மற்றும் தலித் ஆர்வலர்கள் இந்த பெல்லோஷிப் விஷயத்தை எஸ்.எம்.எஸ், இ.மெயில் மூலமாக தகவல்களை பரப்பினர். இதன் பயனாக நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் விண்ணப்பித்தனர். எழுத்து தேர்வு முடிவில் மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டாலும், தேர்வு எழுதிய பெரும்பாலோர் தமிழ்வழிக் கல்வி கற்றவர் என்பதால் ஆங்கில மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது. இந்த தகவல் பரப்பலில் பங்கெடுத்தவர்கள் கண்டுணர்ந்த விஷயம் என்னவென்றால் அடுத்த முறை அனுமதி தேர்வுக்கு முன்பே தலித் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

இறுதியாக 

ஊடகங்களில் தலித்துகளுக்கான இடத்தை கோருவது என்பது மற்றுமொரு இடஒதுக்கீட்டுக் கோரிக்கையல்ல. ஒரு நாட்டின் கருத்தைச் சொல்லும் ஊடகங்களில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் இல்லையென்றால் அந்த கருத்து ஒரு சார்புடையதாக, குறைவுடையதாகிவிடும். ஊடகங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடியதாக பன்மைத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். தலித்துகளுக்கு ஊடகங்களில் இடம் வழங்குவது என்பது அறம் மற்றும் வியாபாரம் ஆகிய இரண்டு அடிப்படைகளில் தவிர்க்க முடியாததாகிறது. ஓன்று, சமூக பொறுப்பு எனும் அறம் அனைத்து ஊடகங்களுக்கும் இருக்க வேண்டும், அதாவது இருபது சதவீதம் எண்ணிக்கை கொண்ட மக்கள் நாட்டின் பொதுக்கருத்தை பிரதிபலிப்பதில் பங்கு கொள்ள வேண்டும்.  இரண்டாவது, வியாபார ரீதியில் பார்த்தால் தலித் வாசக சந்தையை சென்றடைய வேண்டுமென்றால் அவர்களுக்கான செய்தி அதில் இடம் பெற வேண்டும், இல்லையென்றால் அந்த மக்கள் இந்த ஊடகங்களை புறக்கணிக்கலாம்.

ஜெ. பாலசுப்பிரமணியம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இந்த கட்டுரை எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லியில் (12.03.2011) வெளியானதின் தமிழ் வடிவம்.

No comments:

Post a Comment