Tuesday, 1 July 2014


வரலாறு என்னும் விடுதலைக்கருவி

சமீபத்தில் சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். 'தலித் சுதந்திரப் போராட்டம்' என்ற தலைப்பில் கேப்டன் கலியபெருமாள் எழுதிய அந்த புத்தகம் அம்பேத்கரின் வருகைக்குப் பின் நடைபெற்ற போராட்டங்களை விரிவாக விவரிக்கிறது. குறிப்பாக தலித்துகள் குளத்தில் இறங்கி நீரருந்தக் கூடாது என்ற தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களை திரட்டி அம்பேத்கர் நடத்திய போராட்டம், கலாராம் கோவில் நுழைவுப் போராட்டம், சட்டரீதியான போராட்டங்களான இரட்டை வாக்குரிமை போன்றவற்றை கவனப்படுத்துகிறது இந்நூல். சுதந்திரப் போராட்டம் என்றதுமே நமெக்கெல்லாம் ஞாபகத்திற்கு வருவது இந்திய தேசிய போராட்ட வரலாறுதான். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் சமூக உரிமைக்காக கடந்த காலங்களில் நடத்திய போராட்டகளை சுதந்திரப்போராட்டம் என்று கூறலாமா? என்ற கேள்வி யாருக்கும் எழலாம். ஏனெனில் சுதந்திரம் எனும் கருத்தாக்கம் அந்நியதேச பிடியிலிருந்து விடுபட்டு இந்திய தேசம் என்பது உருவான அரசியல் விடுதலையாக மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தலித் மக்களுக்கான அடிப்படை உரிமைகளான குடிநீர், கோவில் நுழைவு, பொதுப்பாதையில் நடக்கும் உரிமை போன்றவற்றை மறுத்த சொந்த தேசத்து ஆதிக்க சாதிகளை எதிர்த்து நடந்தப் போராட்ட வரலாறுகளை ஏன் சுதந்திரப் போராட்டங்களாக நாம் புரிந்து கொள்ளவில்லை. காலனிய சுரண்டலை எதிர்ப்பது என்பது வீரமார்ந்த செயலாகவும் சொந்த நாட்டு மக்களையே சுரண்டும் சாதி, தீண்டாமை போன்றவற்றை எதித்தப் போராட்டங்கள் தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தப் போராட்டங்களாக இன்றளவும் பார்க்கப்படுகின்றன. அதாவது சுதந்திர வரலாறு என்றாலே அது இந்திய தேசிய சுதந்திர வரலாறாகத்தான் இருக்க வேண்டும் என்று சமூக போராட்ட வரலாறுகள் கவனம் கொள்ளப்படாமல் இருக்கின்றன. இது ஒருபுறம் இருந்தாலும் சமூக விடுதலை குறித்து செயல்பட்டு வருபவர்கள் சமூக போராட்ட வரலாறுகளை எழுதியும் பேசியும் வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சாதி ஒழிப்பு, சமூக விடுதலை போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள் இன்றளவும் வரலாறு எனும் கருவியை நம்பிகொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். இந்தச்சூழலில் முதலுக்கே மோசம் என்பது போல வரலாறு என்பதே புறக்கணிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

தொழிலையும் தொழில்நுட்பத்தையும் நம்பும் கூட்டம்

ஒரு குறிப்பிட்ட சமூகக்குழு இங்கிருக்கக்கூடிய மரபார்ந்த ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட சீர்திருத்தவாதிகளால் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றமே தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளது. அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் நன்றாக கல்விகற்று அதன் மூலம் அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்புகளை பெற்று நிறைய சம்பாதித்து தங்களது பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதின் மூலம் தீண்டாமை மற்றும் சாதிகொடுமைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியும் என்ற செயல் திட்டம் பல்லாண்டு காலமாக பேசப்பட்டும் நம்பப்பட்டும் வருகிறது. இதற்கு முன்னுதாரணமாக நாடர்களை எப்போதும் சுட்டிக்காட்டுவதுண்டு. அதாவது தலித் மக்கள் தங்களுக்குள் மகமை அமைத்துக்கொண்டு பல சிறு அல்லது பெரு வியாபாரங்களை தொடங்கவேண்டும். நுகர்வோர்களாக இருக்கக்கூடிய தலித் மக்களை வாடிக்கையாளர்களாக மாற்றுவது என்பதாகும். இந்த இரண்டு திட்டங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களிடமே அவர்களின் முன்னேற்றத்திற்கான தீர்வு இருக்கிறது அதை விட்டுவிட்டு கடந்தகால ஒடுக்குதல்கள், போராட்டங்கள், தத்துவங்கள் போன்றவற்றை பேசிக்கொண்டிருப்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது என்கிற தொனியே இருக்கிறது. மேற்சொன்ன தீர்வுகள் மிகவும் எளிதானவையாகத்தான் தோன்றும், ஆனல் சமூக யதார்த்தம் அவ்வாறு இல்லை என்பதுதான் ஒவ்வொரு கலவரங்களிலும் வன்கொடுமைகளிலிருந்தும் நாம் புரிந்து கொண்டுள்ளோம். சமூக விடுதலைக்கு மாற்றாக முன்னேற்றம் என்பதை மட்டுமே முன்னிருத்தி கல்வி, பொருளாதார முன்னேற்றம் போன்றவைகளை தலித்துகளுக்கு பரிந்துரை செய்கின்றனர். மருத்துவம், பொறியியல், எம்.பி.ஏ இன்னும் பலவிதமான டெக்னாலஜிகளை படியுங்கள் சுய முன்னேற்றம் பெறுங்கள் சமூகத்தை மறங்கள் இதுவே நமக்கு இடப்படும் கட்டளை. அப்போதுதான் இப்போதிருக்கும் சமூகநிலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். மேலும் இவை தலித்துகள் மத்தியில் ஒரு மேட்டுகுடியை உருவாக்குவதை தவிர வேறொன்றுமில்லை. இதற்கு எதிரானதாகவே வரலாறு, சமூகவியல், இலக்கியம் போன்றவை கற்பதும் கற்பிக்கப்படுவதும் எழுதப்படுவதும் பார்க்கப்படுகின்றன.

வரலாற்றை நம்பும் கூட்டம்

சமூக ஒடுக்குதலுக்கு எதிராக போராடிய தலைவர்களில் இன்றளவும் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துபவர்கள் வரலாற்றை போதித்தவர்களே. அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் போன்றோர் இன்றைய நிலையை மாற்ற கடந்த காலத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றனர். சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி எவ்வாறு தோன்றியது, சமூகத்தில் அது எவ்வாறு நிலை பெற்றது என்பதை தெரிந்து கொள்ளும் பொருட்டு 'சாதியின் தோற்றமும் அதன் வளர்ச்சியும்' என்ற வரலாற்று நூலை எழுதினார் அம்பேத்கர். அதன் பின்பு வரலாற்றை கற்றதன் மூலம் சாதியை ஒழிப்பதற்கான எதிகால திட்டத்தையும் முன்வைத்தார். அதாவது சாதியின் தோற்றத்திற்கும் நிலைபேறுக்கும் இந்து மதமும் அகமண முறையுமே அடிப்படை காரணங்கள் இந்த இரண்டிலிருந்தும் வெளியேறுவதின் மூலம் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும் என்று நம்பினார். அயோத்திதாசரோ, தீண்டாமை சாதி போன்றவை இங்கிருந்த பூர்வ பௌத்தர்களுக்கு எதிராக இந்து மதத்தினரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்ற வரலாற்றை முன்வைத்து மீண்டும் பௌத்த மதத்திற்கு திரும்புவதன் மூலமே சாதியை ஒழிக்க முடியும் என்று நம்பினார். பெரியாரோ ஆரியரின் வருகையே சாதியின் தோற்றத்திற்கு காரணம் என்ற வரலாற்றை முன்மொழிந்தார்.

மேற்சொன்ன சமூக மாற்றத்துக்கான மூன்று கருத்துக்களுமே வரலாற்றை அடிப்படையாடகக் கொண்டு தோன்றியவை. அதாவது நிகழ்கால பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வரலாற்றிலிருந்தே தொடங்கவேண்டும் என்பதும் அந்த வரலாறே ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்யும் என்பதும் நியதி. ஆகவேதான் தலித் விடுதலையை நோக்கமாக கொண்டு வெளிவரும் புத்தகங்கள் வரலாற்றுப் புத்தகங்களாகி விடுகின்றன. அதேபோல தலித் விடுதலையை முன்வைக்கும் இயக்கங்களும் வரலாற்றை முன்மொழிகின்றன. 'வரலாறு தெரியாதவர்களால் வரலாறு உருவாக்க முடியாது' என்ற சொற்றொடரை மேடையெங்கும் முழங்குகின்றனர்.

வரலாற்றை கற்பித்தல்

இங்கு வரலாற்றை கற்பித்தல் என்பதை தமிழகச் சூழலில் கல்விப்புலத்தில் வரலாற்றை கற்பிப்பதாக புரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேறியவுடன் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கணிதப்பிரிவிற்கும், அதைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அறிவியல் பிரிவிற்கும் மூன்றாம் தர மதிப்பெண்கள் எடுத்தவர்கள்தான் வரலற்றுப்பிரிவுக்கும் அனுப்பப்படுகின்றனர். இந்தப்பிரிவினை உயர்கல்விவரை எதிரொலிக்கிறது. அதாவது பன்னிரெண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற மானவர்களுக்கு வரலாற்றுப் பாடம் அல்லது தமிழ் இலக்கியம் போன்ற பாடபிரிவுகளே கல்லூரிகளில் தரப்படுகிறது. இன்று தமிழகத்தின் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைகளில் பயிலுபவர்கள் பெரும்பாலும் தலித் மாணவர்களாகவும், கிராமப்புற பிற்படுத்தப்பட்ட மாணவர்களாகவும் உள்ளனர். இங்கு அவர்கள் என்ன படிக்கிறார்கள் கல்வியின் தரம் போன்றவை ஒருபுறமிருக்கட்டும். அதை எழுதப்புகுந்தால் தனிப்புத்தகம் எழுதவேண்டும். இங்கு கவனப்ப்டுத்த வேண்டியது வரலாறு என்பது ஒருபுறம் சமூக மாற்றத்திற்கான அறிவாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதே வரலாற்றுக்கல்வி ஒதுக்கப்பட்ட ஒரு கல்வியாகவும் வரலாற்றை படிக்கும் மாணவர்கள் தீண்டப்படாதவர்களாகவும் பார்க்கும் போக்கு இருந்து வருகிறது. இங்குள்ள அனைத்து தனியார் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மருத்துவம், பொறியியல் இன்னும் பல டெக்னாலஜிகளை விற்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன. வரலாற்றுக் கல்வியை புறக்கணிப்பது என்பது நேரடியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை புறகணிக்கும் ஒன்றாகவும் மறைமுகமாக அதைக்கற்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாகவுமே பார்க்க முடியும். வரலாறு எம்மை விடுதலை செய்யும் என்பது உண்மைதான் ஆனால் வரலாற்றை யார் விடுதலை செய்வது.

Posted in Facebook on 10 March 2014

No comments:

Post a Comment