Tuesday, 1 July 2014


ஆசிரியன்

ஆசிரியன் என்பவனது செயல்பாடுகள்தான் கடந்த இருபது முப்பது வருடங்களில் எவ்வளவு மாறிப்போனது. எங்கள் கிராமத்தில் அம்பேத்கர் தொடக்கப் பள்ளியில் விநாயக மூர்த்தி என்றொரு வாத்தியார் இருந்தார் அவர் மிகவும் கண்டிப்பானவர். யாராவது அன்று பள்ளிக்கூடம் வரவில்லையென்றால் நேராக அந்த சிறுவன்/சிறுமியின் வீட்டிற்கு சென்று வராததின் காரணம் என்ன என்று விசாரிப்பார் சரியான காரணம் (உடல் நிலை சரியில்லை போன்ற) இல்லை என்றால் தூக்கிக்கொண்டு வந்து விடுவார். கிராமக் குழந்தைகள் கல்வி கற்றால்தான் முன்னேற்றம் காண முடியும் என்பதில் முடிவாக இருந்தார். தினமும் பள்ளிகூடம் வரும்போது கையோடு ஊசி நூலையும் எடுத்து வருவார். யாருக்கெல்லாம் உடைகள் கிழிந்திருக்கிறதோ அதை அவரே தைத்து கொடுப்பார். இன்றும் எங்கள் கிராமத்தில் இவரை நினைவு கூறாத பெரியவர்கள் யாரும் இருப்பதில்லை. 

பங்கர் வாடி எனும் குஜராத்தி நாவல் ஒன்று சில வருடங்களுக்கு முன்பு படித்தேன் அதில் ஒரு ஆசிரியன் எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்திற்கு வேலைக்கு வருவான். அவன் வெறும் வகுப்பு எடுப்பவனாக மட்டுமே இருக்க மட்டான். அந்த கிராமத்தின் பொது நிகழ்வுகளில் அனைத்திலும் கலந்து கொள்வான். அந்த கிராமத்து இளைஞர்களுக்காக ஒரு பெரிய விளையாட்டு அரங்கை பல இன்னல்களுக்கிடையில் அவன் எவ்வாறு கட்டிமுடிக்கிறான் என்று நாவல் விவரித்துச் செல்லும். தற்போது ஒரு ஆசிரியன் தினமும் வகுப்பு எடுத்தால் மட்டும் போதும் அவன் மிகச்சிறந்த ஆசிரியன் என பெயர் வாங்கி விடுவான். ஒரு கருத்தரங்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் கோபால் குரு என்னிடம் மிகவும் வருத்தப்பட்டு தெரிவித்த விசயம் என்னவென்றால் ஆறாவது சம்பள ஆணையம் (2008) வந்து கல்வி சூழலையே முற்றிலும் மாற்றிவிட்டது. பேராசிரியர்களுக்கு கிடைக்கும் வருவாயின் மிச்சத்தை வேறு எதிலாவது மூதலீடு செய்து (ரியல் எஸ்டேட், வட்டிக்கு கொடுப்பது, தேங்காய் மண்டி, அரிசி மண்டி இப்படி பல) அதை கவனிப்பதிலேயே தங்களது நேரத்தையும் உழைப்பையும் செலவழிக்கின்றனர். தன்னிறைவான சம்பளம் கிடைத்தால் குடும்பம் வறுமையை போக்க ஆசிரியர்கள் பகுதி நேர வேலை (டியூசன்) பார்க்க வேண்டிய அவசியம் இல்லை இதனால் தங்களது முழு கவனத்தையும் கல்விப்பணியில் செலுத்த முடியும் என்ற நியாயப்படுத்தல் எவ்வளவு தவறாகிப்போனது. இதன் விளைவு ஆசிரியர் மற்றும் பேராசிரியர் வேலைகள் வாங்க பல லட்சங்களுக்கு விற்கப்படுகின்றன. இப்படி வேலை வாங்கும் போது மூதலீடு போட்ட தொழில் போல ஆகி விடுகிறது ஆசிரியன் வேலை. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்தியப் பல்கலைக் கழகங்களின் தரம் குறித்து மிகவும் கவலை தெரிவித்துள்ளார். அமைப்புப் பிரச்சனை என்று சொல்லி போராட்ட அழைப்பு விடுப்பதா அல்லது இது தனி மனித ஒழுக்கப்பிரச்சனை ஆகவே ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்று சொல்லி நம் வாயை நாமே மூடிக்கொள்வதா. இந்த மோசமான சூழலில் நாம் வாழ்வதால்தான் நமக்கு அமீர் கான் இயக்கிய தாரே ஜமீன் பர், சமீபத்தில் தமிழில் வெளியான சாட்டை போன்ற திரைப்படங்கள் மிகவும் பிடித்துப்போகின்றன. Utopian உலகம் எப்போதுமே நமக்கு பிடிக்கத்தானே செய்யும். அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களை நம்பியிருக்கும் ஏழை மக்கள், தலித்துகள் மற்றும் கிராமத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளாகவே இதை பார்க்கவேண்டும். ஏனென்றால் உயர் கல்விக்காக அரசு கல்வி நிறுவனங்களை சார்திருப்பது அவர்கள் மட்டுமே. இந்த மக்களுக்கான சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு அனைத்துமே அரசின் கருணையால் மட்டுமே நடக்க வேண்டியுள்ளது. ஆனால் இவை அனைத்திலும் ஊழல் மலிந்து கிடப்பது அம்மக்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுப்பது என்பதை தவிர வேறென்ன இருக்க முடியும்.

Posted in Facebook on 6 August 2013

1 comment:

  1. முதலீடு என்பது முன்னர்.. இப்போது, விலைக்கு வாங்கிவிட்டு, ஊதியத்தில் கழித்துக்கொள்கிறார்கள். கழித்தது போக மீத வரும்படி லாபம்!

    ReplyDelete