தேயிலை மற்றும் காபி உற்பத்தியிலிருந்து மட்டும் இலங்கைக்கு அரசுக்கு, வருடத்துக்கு 2,395 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. 2012-ம் ஆண்டு கணக்கின்படி 2 லட்சம் பேர் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். 1980-ம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 5,30,000. இன்று மலையகத் தமிழர்களின் மக்கள்தொகை சுமார் 15 லட்சம். 1948-ம் ஆண்டு இலங்கை அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்தாலும், 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் சாஸ்திரி - இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தத்தாலும் 10 லட்சம் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களானார்கள். இந்தக் காலகட்டங்களில் இந்தியா திரும்பியவர்கள் இன்றளவும் ‘சிலோன் அகதிகள்’ என்றே அழைக்கப்படுகின்றனர்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் சொந்தமாக நிலம் வாங்க முடியாது, கல்வி கற்க வசதி கிடையாது. அவர்களுக்கென்று அரசு எந்த ஆவணங்களும் வழங்குவதில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் கூலி மிகவும் குறைவு. நம்மூரிலேயே வேலைக்கேற்ற கூலி கேட்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை என்னவானது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் எப்படி இருக்கும், யோசித்துப் பாருங்கள்!

இலங்கைத் தமிழர் என்றாலே நமக்குத் தெரிந்தது ஈழத் தமிழர்கள் மட்டுமே. அதே அளவுக்கு நமக்கு மலையகத் தமிழர்களின் நிலை தெரியாமல் போனதுதான் வேதனை. இவ்வளவு பெரும் திரளான மக்களை எவ்வளவு வசதியாக நாம் மறந்துவிட்டோம். இவ்வளவுக்கும் அவர்களின் வரலாறு ஒன்றும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஆன ஒன்றல்ல. அவர்கள் நம்மை விட்டுச் சென்று, இந்த தமிழ் மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து சுமார் 200 ஆண்டுகள்தான் ஆகின்றன. இந்தச் சமீபத்திய வரலாறுதான் இனமான தமிழர்களாகிய நம் எல்லோராலும் மறக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்வு வரலாறு

இலங்கை 1815-ம் ஆண்டு பிரிட்டிஷாரின் ஆளுகையின் கீழ் வந்தது. அந்த வருடமே இலங்கையின் விவசாயம், பாரம்பரிய உணவு உற்பத்தியிலிருந்து பணப் பயிர் விவசாயமாக மாற்றப்பட்டது. 1820-ம் ஆண்டு முதல் காபித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு 1823 முதல் காபி உற்பத்தி தொடங்கியது. மதறாஸ் மாகாண அரசாங்கம், 1815-ல் தஞ்சாவூர் கலெக்டருக்கு தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்குத் தோட்டத் தொழிலாளர்களை அனுப்பக் கோரி ஒரு கடிதம் அனுப்பியது. கூலி அதிகம் வேண்டும் என்ற நிபந்தனையுடன் காபித் தோட்டங்களில் வேலை செய்வதற்காக 150 தொழிலாளர்கள் 1828-ல் இலங்கை சென்றடைந்தனர். ஆனால், தோட்ட வேலை என்பது விவசாய வேலையைப் போல எளிதாக இல்லை. இதனால், ஒரு வருடத்துக்குள் அனைத்துத் தொழிலாளர் களும் இந்தியா திரும்பினர்.

1837-ல் இலங்கை காபித் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காகப் புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 10,000. தொழிலாளர்களின் வருகையும், பின்பு தோட்ட வேலையின் கடுமை தாங்க முடியாமல் ஒப்பந்தத்தை மீறி, சொந்த ஊருக்கு ஓடிவிடுவதும் வாடிக்கையான நிகழ்வுகளாக இருந்தன. ஒப்பந்தத்தை மீறிச் செல்லும் தொழிலாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க 1841-ல் பிரிட்டிஷ் இலங்கை அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டுவந்தது. இந்தச் சூழலில், இந்தியாவிலிருந்து இலங்கை செல்லும் தமிழகத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வந்தது. 1839-ல் 3,000 என்று இருந்த எண்ணிக்கை 1844-ல் 77,000 ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 1840 மற்றும் 1850-களில் ஒரு வருடத்துக்குப் புலம்பெயரும் தொழிலா ளர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 ஆக இருந்தது. இலங்கைக்குத் தோட்டத் தொழிலாளர்களாகச் சென்றவர்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த விவசாயக் கூலிகளே அதிகம்.

1911-ம் ஆண்டில் இலங்கை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, அங்கு 1833 தோட்டங்கள் இருந்தன. அதில் 3,58,040 இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்தனர். இதில், 3,55,459 பேர் சென்னை மாகாணத்திலிருந்து சென்றவர்கள். இலங்கைப் பதிவாளரின் அறிக்கையின்படி, 1915-ல் அங்கு வசித்த இந்தியத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 6,28,300. இது 1931-ல் 7,90,376 ஆக உயர்ந்தது.

மேற்கண்ட புள்ளிவிவரங்களிலிருந்து, இந்தியா விலிருந்து குறிப்பாக சென்னை மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் தமிழர்களே அதிகமாகவும் அதில் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகளே அதிகம் என்பதும் உறுதியாகிறது. இவர்கள் ஏன் இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்ய ஒப்புக்கொண்டார்கள்?

புலம்பெயர்வின் சமூகப் பொருளாதாரப் பின்னணி

சாதிக்கும் நிலத்துக்குமான நேரடி உறவு, தீண்டாமை, 1840-களில் ஏற்பட்ட சில முக்கியமான சமூக / பொருளாதார / அரசியல் மாற்றங்கள்தான் தமிழகத்திலிருந்து பெருந்திர ளான தாழ்த்தப்பட்ட மக்கள் இலங்கை மற்றும் பிற நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்ததற்கு முக்கியக் காரணிகள். அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 மற்றும் சட்டம் வி-1843 நடைமுறைக்கு வந்ததையொட்டி, தொழிலாளர் கள் இந்தியாவிலிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு வேலை தேடிச்செல்வது எளிதாகியது. அதுவரை நிலவுடைமை அமைப்பில் இருந்துவந்த இறுக்கம் இந்தக் காலகட்டங்களில் தளர்வடையத் தொடங்கியது. நிலவுடைமைச் சாதிகளிடமிருந்து சற்றே விடுபட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் இடைநிலைச் சாதியினர் தங்களின் பொருளாதாரப் பின்னணியை உயர்த்திக்கொள்ளும் பொருட்டும், இங்கு நிலவிய சமூக இறுக்கங்களிலிருந்து விடுபடும் நோக்கத்தோடும் இலங்கை, மலேசியா, மொரீசியஸ், ஃபிஜி, பர்மா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள்.

இலங்கைக்குச் சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமானதற்கு இலங்கைத் தீவின் அண்மையும், மலிவான கப்பல் பயணமும் முக்கியக் காரணங்களாக அமைந்தன. இங்கிருந்து தனுஷ்கோடி துறைமுகத்தில் புறப்பட்டு, இலங்கையின் தலைமன்னார் துறைமுகத்தில் சென்று இறங்கினார்கள். இவ்வாறு நம்பிக்கையோடு இலங்கை சென்ற இந்த மக்களால் ஒரு தலைமுறையேனும் நிம்மதியாக வாழ முடிந்ததில்லை.
இவர்களின் தற்போதைய நிலை, எந்த விதத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக இல்லை. இவர்கள் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்டாலும், காலத்தின் ஓட்டத்தில் இவர்களின் சந்ததியினர் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களாகவும், கண்டி, கொழும்பு போன்ற நகரங்களை அண்டிப் பிழைப்பு நடத்துபவர்களாகவும் உள்ளார்கள். இலங்கை யுத்தத்தில் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். ஏனென்றால், இவர்கள் கடந்த 40 வருடங்களாக வன்னிப் பகுதியில் வாழ்ந்தாலும், இவர்களுக்கு நில உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மலையகத் தமிழரின் பிரதிநிதிகள் இலங்கை அரசில் தொடர்ந்து அங்கம் வகிப்பவர்களாக இருக்கிறார்கள். தங்களின் பிரச்சினைகள் ஜனநாயக அரசியல் மூலம் தீர்ந்துவிடும் என்று இவர்கள் நம்புகிறார்கள். மேலும், ஈழத் தமிழர்களுக்கான பிரச்சினையும் மலையகத் தமிழரின் பிரச்சினையும் ஒன்றல்ல. ஆகவேதான், ஈழத் தமிழர்களின் அரசியல் சாயலை நாம் இவர்களிடம் தேடினால் அது நமக்குக் கிடைக்காது.
- ஜெ. பாலசுப்பிரமணியம்,
உதவிப் பேராசிரியர், இதழியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: balumids@gmail.com