தலித் இதழ்களில் அரசியல் போராட்டம்: பத்திராதிபருக்குக் கடிதமும் இராகவன் கொலையும் | |
ஜெ. பாலசுப்பிரமணியம் | |
1913 மார்ச் 12 தேதியில் அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ இதழில் (1907-1914) “பரிதாபக் கொலை! பரிதாபக் கொலை!! பரிதாபக் கொலை!!!, பறையனென்றழைக்கப்பட்ட ஒருவனைச் சில ரெட்டிகளென்போர் சேர்ந்து கொலை செய்து விட்டார்கள்” என்று தலைப் பிட்டு அயோத்திதாசர் எழுதிய கட்டுரை வெளியானது. “தென் ஆற்காடு டிஸ்டிரிக்ட் திண்டிவனந் தாலுக்காவில் விட்லாபுரம் கிராமத்தில் ப.இராகவனென்னுமோர் குடியானவனிருந்தான்” என்று தொடங்கும் அக்கட்டுரையில் கொஞ்சம் நிலம் வைத்திருந்த இராகவன் என்னும் பறையர் தனது நிலத்தில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு நாளொன்றுக்கு இரண்டணா கூலி கொடுத்து வந்தார். ஆனால் அதே கிராமத்தில் உள்ள ரெட்டியார்கள் நாள் முழுவதும் வேலை வாங்கிக் கொண்டு ஓரணா மட்டுமே கூலி கொடுத்து வந்தனர். இதனால் கூலியாட்கள் இராகவனிடமே வேலைக்குச் சென்றனர். ஆத்திரம் கொண்ட ரெட்டிகள் இராகவனை மிரட்ட ஆரம்பித்தனர். மேலும் இராகவனிடம் சொந்தமாக நிலம் இருப்பதால்தான் அவனால் இரண்டணா கூலி கொடுக்க முடிகிறது. ஆகவே இராகவனை நிர்மூலமாக்க வேண்டுமென்று ரெட்டியார்கள் கங்கணம் கட்டினர். இதனால் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு இராகவன் சென்னையிலிருந்து வெளிவந்த ‘பறையன்’ பத்திரிகையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கடிதமாக எழுதி வெளியிட்டார்.
இதற்குப் பின்பும் இராகவனுக்குப் பல துன்பங்களைக் கொடுத்து வந்த ரெட்டிகள் தங்களது மாடுகளை விட்டு இராகவனின் நிலத்திலுள்ள பயிறுகளை மேயவைத்தனர். இதற்குப் பிறகு பவுண்டி எனப்படும் பிறர் நிலங்களில் மேயும் மாடுகளை அடைத்து வைத்துத் தண்டம் கட்ட வைப்பதற்கான கிராம நிர்வாக அதிகாரியின் சிறிய பட்டியில் ஒப்படைக்க ஓட்டிப்போன இராகவனை ரெட்டியின் ஆட்கள் மறித்து அடித்துக் கொன்றனர் என்று அப்பின்னணியை அயோத்திதாசர் விவாதிக்கிறார். இதழுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு அவர் இக்கட்டுரையை எழுதுகிறார்.
அயோத்திதாசரால் எழுதப்பட்ட இந்தச் செய்தியைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட இராகவனின் மகன் கணபதி என்பவர் ஒரு கடிதம் எழுதுகிறார். 12 மார்ச் 1913 தேதியிட்ட அந்தக் கடிதம் 19 மார்ச் 1913 ‘தமிழன்’ இதழில் வெளியானது. அக்கடிதம் அயோத்தி தாசர் விவரித்த ராகவன் கொலையின் பிற பின்னணியை விவரிக்கிறது. விட்லாபுரம் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜலு ரெட்டி வகையறாக்களுக்கு மேற்படி சேரிப் பறையர்கள்மீது 20 வருடங்களாக நீடித்த பகையும் குரோதமும் உண்டு. ரெட்டிகள் 1897 ஆம் வருடத்தில் மாடுகளை விட்டு மகசூலை நாசப்படுத்தியும் வீட்டைக் கொளுத்தினது மன்றி இராகவன்மீது பொய்யான களவுப் புகார் ஒன்றையும் கொடுத்ததோடு இராகவனைக் கொலை செய்யவும் திட்டமிட்டனர். இதைத் தெரிந்து கொண்ட இராகவன் சென்னை இராயப்பேட்டை மு.தங்கவேலு பிள்ளை என்பவரின் உதவியைக் கொண்டு ‘பறையன்’ பத்திரிகையில் ரெட்டிகள் செய்யும் கொடூரங்களைப் பிரசுரித்தார். இந்தக் கடிதத்தை ராகவன்மீதான ரெட்டிகளின் புகாரை ஒட்டி நடந்த வழக்கில் சாட்சியாகக் கொண்டு சென்றனர். அதன்படி அப்போ திருந்த திண்டிவனம் தாலுக்கா சப் மாஜிஸ்திரேட் கனம் கிருஷ்ணசாமி ஐயர், இராகவன்மீது கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்று தள்ளுபடி செய்தார். இதனால் அவமானமும் பணவிரயமும் அடைந்த ரெட்டிகள் அதற்குப் பின்பும் பறையர்கள்மீது பல பொய்ப் புகார்களைக் கொடுத்தார்கள். அவற்றில் பல விசயங்கள் பறையன் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளன. இவ்வாறு எந்தப் புகார் கொடுத்தாலும் அதை இராகவன் சட்டரீதியாக எதிர்கொள்வதைத் தெரிந்து கொண்ட ரெட்டிகள் 26 நவம்பர் 1912இல் இராகவனை அடித்துக் கொலை செய்தனர். இவ்வாறு இந்தக் கடிதத்தில் ராகவனின் கொலைப் பின்னணியை விவரிக்கும் கணபதியின் கடிதம் கொலைக்குப் பின்பு நடந்தவைகளையும் விவரிக்கிறது. முதலில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் அடித்ததினால் ராகவன் இறந்தார் என்று மருத்துவர் குறிப்பிடாததை ஆட்சேபித்து மறு பிரேத பரிசோதனைக்குக் கோரி மனு கொடுத்துள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் 29-11-12 அன்று தாசில்தார் மற்றும் இராகவனின் உறவினர்கள் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை நடந்தது என்று கூறுவதோடு அதில் இடம்பெற்ற எதிரிகள் மற்றும் சாட்சிகள் பெயர்ப் பட்டியலையும் தருகிறார். இந்தக் கடிதத்தைக் கணபதி எழுதியபோது நீதிமன்றம் எதிராளிகளிடம் தங்களின் வாதத்தை முன்வைக்கும்படி கூறி இருந்ததாகத் தெரியவருகிறது. இறுதியாக ‘ஐயா இதுவரையில் பப்ளிக் செய்யக் கேட்டுக் கொள்கிறோம். பின்னிட்டு நடக்கும் சங்கதி அறிவிக்கிறோம். நேரில் வந்து சேருகிறோம்” என்று கடிதத்தில் முடிக்கிறார். அதாவது இக்கொலைக்கான பின்னணி 1897இல் இருந்து தொடங்குகிறது. இந்நிலையில்தான் கணபதியின் இக்கடிதம் இராகவனின் கொலை வழக்கை விவரிக்கிறது.
இராகவன் கொலை குறித்து முதலில் அயோத்திதாசர், பிறகு இராகவன் மகன் கணபதி ஆகியோர் எழுதியதைத் தொடர்ந்து பறையன் (1893-1900) பத்திரிக்கையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருந்த மு.தங்கவேலுப்பிள்ளை (கொலையுண்ட இராகவனுக்கு உறவினரும் கூட) இந்த வழக்குடன் தொடர்புடைய பத்து வருடங்களுக்கு முன்பு (1897) நடந்த சம்பவங்களைக் கடிதம் மூலம் மூன்றாவது நபராகப் பகிர்ந்துகொண்டார். கொலையுண்ட இராகவன், ரெட்டிகளால் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தங்கவேலுப்பிள்ளை மூலமாகவே பறையன் இதழில் கடிதமாக வெளியிட்டார். இதழில் வெளியான இந்தக் கடிதத்தையே ஆதாரமாகக் கொண்டு தங்கவேலுப் பிள்ளையும் வழக்கில் சாட்சியாகக் சேர்க்கப்பட்டார். இராகவனுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதால் இராகவன் சொல்ல தங்கவேலுப் பிள்ளை எழுதி அதைப் பறையன் பத்திராதிபராகிய கனம் இரட்டைமலை சீனிவாசன்பிள்ளை பார்வையிட்டு பிரசுரஞ் செய்துள்ளார். சுமார் இருபது பிரதிகள் வரை திண்டிவனம் தாலுக்காவிலுள்ள சப் கலெக்டர், கலெக்டர், சப் மாஜிஸ்திரேட், தாசில்தார், போலீசு சூப்பிரண்டெண்ட் ஆகிய அதிகாரிகளுக்கும் சுற்றிலுமுள்ள கிராம கௌகரிகளுக்கும் அனுப்பப்பட்டது. இதற்கிடையில் இராகவன்மீது பகை கொண்ட ரெட்டிகள் சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குச் சென்று இராகவன் திருடிச் சென்றுவிட்டான் என்று தலித் அல்லாத சாதிகளிடம் கையெழுத்து வாங்கிப் புகார் கொடுக்கவும் அதற்கு முன்பே ‘பறையன்’ பத்திரிகை மூலம் இந்த விசயங்களைத் தெரிந்துகொண்ட மாஜிஸ்திரேட் கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள், இந்த வழக்கைப் பொய் வழக்கென்று தள்ளுபடி செய்ததுடன் ரெட்டியார்களைக் கூப்பிட்டு ‘இதோ நீங்கள் செய்வதை இராகவன் பட்டணம் போய் பேப்பரில் பப்ளிக் செய்திருக்கிறான் பாருங்கள்” என்று பறையன் இதழைக் காண்பித்து இனி இவ்விதமான காரியங்களில் ஈடுபடக்கூடாது என்றும் கண்டித்து அனுப்பியுள்ளார். ரெட்டியார்களின் தாக்குதலுக்குப் பயந்து குடும்பத்துடன் சென்னை சென்ற இராகவனைத் தங்கவேலுப்பிள்ளை மீண்டும் விட்லாபுரம் கிராமத்திற்கு அழைத்துவந்து அங்குள்ள ரெட்டியார்களிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்துச் சொல்லியும் நீதிமன்றத் தீர்ப்பு முதலானவற்றை வாசித்தும் காட்டியுள்ளார். “இதன் பிறகு பத்து வருட காலம் பெரிய அளவிலான எந்தப் பிரச்சினையும் செய்யாமல் இருந்த ஆதிக்கச் சாதியினர் இப்போது இராகவனைக் கொலை செய்திருப்பதைப் பார்க்கும்போது இத்தனை வருட கால ரெட்டியார்கள் ஒப்புக்குதான் சமாதானமாக இருந்துள்ளனர் என்று தெரிகிறது” என்று தனது கடிதத்தில் தங்கவேலுப் பிள்ளை எழுதுகிறார். இங்கே ஒரு போராட்டம் முதலில் கட்டுரையாகத் தொடங்கிப் பின்பு கடிதங்கள் மூலம் வளர்த்தெடுக்கப்படுகிறது. மேலும் அந்தக் கடிதங்களையே சாட்சிகளாக மாற்றுவது பின்னர் கடிதங்களைப் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்துவது என்று அமைகிறது தலித்துகளின் இதழியலூடான போராட்டம்.
இந்தப் பின்னணியில் ஒரு பத்திரிகைக்குக் கடிதம் எழுதும் செயல் அன்றைக்கு அரசியல் நடவடிக்கையாக மாறி இருந்ததைப் பார்க்க முடிகிறது. கடிதம் ஆவணமாக, சட்ட இடையீடு மேற்கொள்ளும் மனுவாக, உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்த அரசுக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்தில்கூட பத்திரிகையின் நோக்கங்களாகத் தகவல் தெரிவிப்பது, அறிவூட்டுவது, பொழுதுபோக்குவது என அறியப்படுகின்றன. ஆனால் வரலாற்றில் தலித் பத்திரிகைகள் மக்களை ஒருங்கிணைப்பது அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது என்று சமூக இயக்கமாகவே செயல்பட்டுள்ளது. இதேபோலக் கடிதங்களும் கருத்துகளை வெளிப்படுத்துவதாக மட்டும் இருக்கவில்லை. அவை மக்களின் கோரிக்கைகளாக, மனுக்களாக இருந்துள்ளன. ஒரு பிரச்சனையைப் பத்திரிகையில் வெளியிடுவதன் மூலம் அரசின் கவனத்தைப் பெறுவது இன்றும் நடக்கும் செயலாக உள்ளது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகப் பத்திரிகைகளும் அவற்றின் பிரசுரமும் இருந்துள்ளதைக் காண முடிகிறது. பத்திரிகைகளில் எழுதப்பட்ட கடிதங்கள் சமூகத்தில் எத்தகைய வினையாற்றின என்பதற்கு இராகவன் போராட்டம் அதையொட்டிப் பறையன் இதழோடு உருவான தொடர்பு போன்றவற்றின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
சமூக இயக்க இதழியல்
அச்சு எனும் தொழில்நுட்பம் வந்தவுடன் எவ்வாறு புதிய வகை இலக்கியச் செயல்பாடுகள் உருவாயினவோ அதேபோல இதழ்கள் வெளிவரத் தொடங்கிய காலங்களில் இதழ்களில் கடிதம் எழுதுதல் (இதழின் உள்ளடக்கத்தில் பங்கெடுத்தல்) எனும் புதிய வகை அரசியல் செயல்பாடு உருவாகியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து “பத்திராதிபருக்குக் கடிதம்” எனும் தலைப்பில் இதழ்களில் வாசகர்களின் கடிதங்கள் வெளிவரலாயின. இக்கடிதங்கள் மக்களின் பிரச்சனைகளை முன்வைக்கக்கூடிய மனுக்களாகவும் ஏற்கனவே இதழ்களில் வெளிவந்த கருத்துகளுக்கு மறுப்பாக அல்லது ஆதரவாக வெளிவந்தன. அதாவது தனி நபருக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ நடக்கும் அநீதி கடிதமாக இதழ்களில் வெளியாவதன் மூலம் அரசியலாக்கப்பட்டது. இவ்வாறு செய்வதன்மூலம் அரசின் கவனம் பிரச்சினைமீது குவியும் என்றும் மக்கள் மத்தியில் பொதுக்கருத்தை உருவாக்க முடியும் என்றும் நம்பப்பட்டது. அச்சு ஊடகங்களில் இதழ் எனும் வடிவம் அதிக ஐனநாயகத் தன்மையுடையதாகப் பார்க்க முடியும். இதையே வால்டர் பெஞ்சமின் புரட்சிகரமான வடிவம் என்கிறார். அதாவது அச்சு ஊடகத்தின் புத்தக வடிவமானது ஒரு பக்கமாக மற்றும் மேலிருந்து கீழாகப் பரவக்கூடிய தொடர்பியல் முறையாக உள்ளது. இங்கே உரையாடலுக்கான வாய்ப்பு கிடையாது. ஆனால் இதழ் எனும் வடிவத்தில் வாசிப்பாளர்கள் கடிதப்பகுதியின் மூலம் பத்திராதிபருடனும் (பத்திரிகை நடத்துபவர்) வாசகர்களுடனும் உரையாட முடியும். இதழ் என்பது தொடர்ச்சியாக (வாரந்தோறும் அல்லது மாதந்தோறும்) வெளி வருவதால் ஒரு விவாதத்தைத் தொடர்ந்து வளர்த்தெடுப்பதற்கு உதவியது. இங்கு பத்திராதிபர் என்பது பத்திரிகை உரிமையாளர் என்ற அர்த்தத்தில் இருந்தாலும் ஆரம்ப காலங்களில் இதழின் உரிமையாளரே ஆசிரியராக, அச்சக உரிமையாளராக மற்றும் வெளியீட்டாளராகவும் இருந்துள்ளார். ஒருசில பத்திரிகைகளே வெளி அச்சகங்களில் அச்சிடப்பட்டன. பெரும்பாலான பத்திரிகைகள் பத்திரிகை நடத்துபவரின் சொந்த அச்சகத்திலேயே அச்சிடப்பட்டன. ஆகவேஇங்கு பத்திராதிபர் என்பது பத்திரிகை ஆசிரியரையே சுட்டும்.
பொதுவாக இதழியல் வரலாறுகள் பத்திரிகையின் வரலாறாக இல்லாமல் பத்திராதிபரின் வரலாறுகளாகவே இருக்கின்றன. அவை இதழ் ஆசிரியரை மையமாகக் கொண்டே எழுத்தப்படுபவையாக இருக்கின்றன. இதனால் பத்திரிகை நடத்துவது என்பது ஒரு தனிநபர் செயல்பாடாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இதழியல் வரலாற்றில் வாசிப்பாளர்கள், கட்டுரையாளர்கள், சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள் போன்றவர்களின் பங்குதான் பத்திரிகைச் செயல்பாட்டை சமூகச் செயல்பாடாக்கியது. மேலும் பொதுவெளி எனும் கருத்தாக்கத்தைத் தமிழ் வெளிக்குள் சாத்தியப்படுத்தியதும் இது போன்றோரின் பங்களிப்புகளே என்று கூற முடியும். தமிழ் இதழியல் வரலாற்றில் இதழ்களுக்குக் கடிதம் எழுதும் மரபு ஆரம்ப காலம்தொட்டு இன்றுவரை தொடர்கிறது. இன்றுகூடக் குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகளில் ‘ஆசிரியருக்குக் கடிதம்’ பகுதி கருத்து உருவாக்கத்திற்கான ஒரு முக்கிய வடிவமாக இருக்கிறது. இந்த வகையில் இதழியல் வரலாற்றில் வாசகர் கடிதம் பகுதியை ஆராய்வதன் மூலம் கருத்து உருவாக்க வரலாற்றில் வாசகர் கடிதங்கள் எவ்வாறு வினையாற்றியுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சமூகப் பிரச்சினைகள் கடிதங்களாகப் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்கும் பிரச்சனையின்மீது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து விளங்கிக்கொள்ள முடிகிறது.
தலித் இதழ்களில் கடிதங்கள்
அயோத்திதாசர் தனது ‘தமிழன்’ இதழில் கடிதக்காரர்களுக்கறிக்கை எனும் தலைப்பில் இதழுக்குக் கடிதங்கள் எவ்வாறு எழுத வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
அரசாங்க விரோதமில்லாததாயும் மததூஷணமற்ற தாயும் உண்மெய்க்கு விரோதமில்லாததாயும் முள்ளக் கடிதங்களைப் பிறருக்கறிவிக்கப்படும் தெரியாத விஷயங்களைத் தெரியவிரும் மன்பர்களுக்குத் தெரிபொருள் பாகஞ் தேர் விளக்கப்படும் தெரிந்தும் தெரியாததுபோல் விரிந்த சங்கையை விளித்து விதண்டவாதம் வளர்க்கும் கடிதங்களைப் பிறருக்கறிவிக்கப்படா. இப்பத்திரிகை சகலருடைய பொது நன்மையை நாடும் கடிதங்களை நன்றியறிந்த வந்தனத்துடனேற்றுக் கொள்ளப்படும். கடிதக்காரரபிப்பிராயங்களுக்குப் பத்திராபர் பொருப்பாளியன்று.
கடிதக்காரர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அப்படியே வெளியிடுவது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இது போன்ற எச்சரிக்கை அறிவிப்புகள் ஒவ்வொரு இதழிலும் வெளிவந்தன. எனவே எவையெல்லாம் ‘கடிதம்’ என்று வரையறுக்க வேண்டிய தேவை உருவாகிவிடுகிறது. ஏனென்றால் 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை பெரும்பாலான இதழ்களில் ‘பத்திராதிபருக்குப் கிடைத்த நிருபங்கள்’ போன்ற தலைப்புகளில் வாசகர்களின் கடிதங்கள் வெளிவந்தன. இந்தக் கடிதங்கள் பெரும்பாலும் தனிநபர்களின் பிறப்பு, இறப்புச் செய்திகளை அறிவித்தல், சங்கக் கூட்டப் பதிவுகள் என்ற வகையிலேயே இருந்தன. பெரும்பாலான கட்டுரைகள் கடிதங்களாகவே வரையப்பட்டன. அதேபோல் விளம்பரங்களும் கடிதங்களாகவே வெளியிடப்பட்டன. ஆனால் இவையெல்லாம் கடிதங்களாக இருந்தாலும் இங்கு ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்ட கடிதங்கள் எழுதப்பட்ட நோக்கமென்பது உரையாடலை ஏற்படுத்துவது என்பது மட்டுமேயாகும். ஆனால் இங்குக் கடிதம் என்பது கட்டுரை வடிவில் இல்லாமல் ஆசிரியர் அல்லது கட்டுரையாளருடன் உரையாடுவது பொதுமக்களுக்குத் தங்களது கருத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிவமாகும். மேலும் கடிதங்கள், இதழ்களில் ஏற்கனவே வெளியான கட்டுரை மற்றும் செய்திகளுக்கு எதிர்வினையாகவோ ஆதரவாகவோ அல்லது மேற்கொண்டு தகவல்களைச் சொல்லும் பொருட்டோ எழுதப்பட்டன.
இந்தக் கட்டுரையில் தலித் இதழ்களான பறையன் (1893-1900), பூலோகவியாசன் (1903-1917), தமிழன் (1907-1914) மற்றும் ஆதிதிராவிடன் ஆகியவற்றில் வெளியான கடிதங்களைக் கொண்டு விவாதிக்கப்படுகிறது. இந்த இதழ்களில் வாசகர் கடிதங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. அவை பல்வேறு விசயங்களைத் தாங்கி நின்றாலும் சமூகம் சார்ந்த விவாதங்களுக்கு அதிக இடம் தந்தன. உதாரணமாக பூலோகவியாசன் ஆசிரியர் ஒரு கடிதம் வெளியிடப்பட முடியாது என்பதை எழுதும்போது “விகடனும் பாஷிதனும் என்று சுட்டியெழுதி பொது நலப் பிரியனென்று கைத்சாத்திட்டவர் கடிதம் போடப்பட மாட்டது. சில கால முன் நடந்து மறைந்த ‘திராவிடப் பாண்டியன்’, ‘பறையன்’, என்னும் பத்திரிகைகளும் ‘மகாவிகடனும் ஒன்றுக்கொன்று தூறித்தூறி அடைந்த அவமானத்தையுலகம் மறந்து விடவில்லையே” என்று கூறுகிறார். இதன் மூலம் தலித் இதழ்கள் (பறையன், திராவிடப்பாண்டியன், மகாவிகட தூதன்) தங்களுக்குள் நடத்திக்கொண்ட கருத்து மோதல்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்ததாகப் ‘பறையன்’ இதழ் ஆசிரியர் இரட்டை மலை சீனிவாசன்மீது அவதூறு வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டதாக அவரது சுயசரிதையில் அறிய முடிகிறது. அந்த வழக்கு ‘பறையன்’ இதழில் வெளியான ஒரு கடிதத்தை ஆதாரமாகக் கொண்டே தொடுக்கப்பட்டது. இதை இரட்டைமலை சீனிவாசன்,
“1896-ம் வருடம் ‘பறையன்’ பத்திரிகை கடிதக்காரர் ஒருவர் ஏதோ அவதூறான விஷயம் எழுதியதைப் பத்திரிகையில் வெளிபடுத்தினதின் காரணமாகக் கொண்டு இவ்வினத்தவரின் ஒரு பிரிவார் என்னைக் கோர்ட்டுக்கு இழுத்தார்கள். கோர்ட்டுக்கு இந்த இனத்தவர் பெருங்கூட்டாய் வந்தார்கள். அவர்கள் தலைச் சீராக்களிலும் மார்புகளிளும் பறையர் என்ற மகுடத்தைப் பூண்டு பணமுடிப்புகளுடன் கோர்ட்டுக்கு வந்தார்கள். நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.”
இவ்வினத்தவரின் ஒரு பிரிவால் என்று கூறுவது அயோத்திதாசர் தலைமையிலான குழுவே என்று ஊகிக்கமுடியும். அதாவது திராவிடப்பாண்டியன் (1896) இதழ் ஜான்ரத்தினமும் அயோத்திதாசரும் இணைந்து நடத்திய பத்திரிக்கையாகும். ‘பறைய’னுக்கும் திராவிடப்பாண்டியனுக்கும் நடந்த விவாதமே நீதிமன்றம் வரை சென்றது என்று தெரிகிறது. அயோத்திதாசர் குழு ‘பறையன்’ எனும் சொல்லை இழிவான சொல்லாக, அதாவது சாதியைத் தோற்றுவித்தவர்கள் இம்மக்களை இழிவுபடுத்துவதற்காக ஏற்படுத்திய சொல் என்ற புரிதலைக் கொண்டிருந்தனர். ஆனால் இரட்டைமலை சீனிவாசன் தலைமையிலான குழு பறையன் எனும் சொல்லைப் பகிரங்கமாக வெளிபடுத்திக்கொள்வதன் மூலம் மட்டுமே அச்சொல் மீதான இழிவைப் போக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தது. இந்தப்பிரச்சனையில் அயோத்திதாசர் நடத்திய ‘திராவிடப்பாண்டியன்’ இதழிலும் இரட்டைமலை சீனிவாசன் நடத்திய ‘பறையன்’ இதழிலும் பல கடிதங்களை வெளியிட்டு ஒரு பெரும் கருத்து மோதல் நடந்தது. அந்தக் கடிதங்கள் எல்லாம் கிடைக்கும்போது இது குறித்து முழுமையான விசயங்கள் தெரியவரும். வரலாற்றில் இது போன்ற கடிதம் எழுதும் செயல்பாட்டை இன்றைய போராட்ட வடிங்களுடன் ஒப்பிடலாம். இன்றைய ஜனநாயகப் போராட்ட வடிவங்கள் (ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்) அரசுக்கு எதைச் சொல்ல விரும்புகின்றனவோ அதை அன்று இது போன்ற கடிதங்கள் சொல்லின. மேலும் சங்கங்கள் மற்றும் சபாக்களிடமிருந்து வரும் கடிதங்களை அரசாங்கம் பரிசீலித்தது, அதுவும் பத்திரிகையில் வெளியான கடிதம் என்றால் அரசாங்கம் அதை நம்பிக்கைக்குரிய ஆவணமாக எடுத்துக்கொண்டது. இந்திய மொழிப் பத்திரிக்கை அறிக்கைகள் (Native Newspapers Report) தயாரிக்கும் முறை இந்த நோக்கத்திலிருந்து விளைந்ததே ஆகும். இந்த அறிக்கையில் இந்திய மொழிப் பத்திரிகைகளில் வரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் மூலம் இந்திய மொழிப் பத்திரிகைகள் அரசியல் கண்காணிப் பிற்கு உட்படுத்தப்பட்டன. இந்தக் கண்காணிப்பில் சமூகப் பிரச்சினை குறித்துக் கடிதங்கள் வெளியாகும் போது அவற்றை அரசாங்கம் மனுக்களாவே கவனத்தில் எடுத்துக் கொண்டது.
கடிதம் எழுதியவர்கள்
கடிதம் எழுதியவர்களின் பின்னணி குறித்த ஆதாரங்கள், தரவுகள் கிடைக்காத நிலையில் ஒருசில தகவல்களைக் கொண்டு சில முடிவுகளுக்கு வர முடிகிறது. தலித் இதழ்களுக்குக் கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகளாக இருந்தாலும் தலித் அல்லாதவர்கள் சிலரும் சில முக்கியமான விவாதங்களில் கடிதம் மூலம் பங்கேற்றுள்ளனர். உதாரணமாக, பூலோகவியாசன் இதழில் வெளிவந்த கடிதங்களில் சிவானந்த முதலியார், தி. வெங்கடராம ஐயர் போன்ற பெயர்களைக் காண முடிகிறது. கடிதம் எழுதும் தலித்துகள் இலங்கை, பர்மா போன்ற பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள், பெங்களூர் (கோலார் தங்க வயல்) ஆகிய பகுதிகளில் உருவான தொழிற்சாலை வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டவர்களாக இருந்தனர். படித்து ஆசிரியராக வேலை பார்க்கக் கூடியவர்கள், கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் பொருளாதார முன்னேற்றமடைந்தவர்கள் என்று தலித்துகள் மத்தியில் ஒரு அரசியல் வகுப்பு உருவாகியது. இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் நகரத்தில் குடியமர்ந்தவர்களாக இருந்தனர். ஒருசில கடிதங்கள் கிராமங்களிலிருந்தும் வந்தன. அப்படி ஒரு உதாரணம்தான் இராகவனின் கடிதம்.
இந்த வகுப்பினருக்குச் சமகால அரசியல் போக்கும் அது குறித்த புரிதலும் இருந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் எதை நோக்கிச் செயல்பட வேண்டும் என்று கடிதங்கள் மூலம் அம்மக்களை அரசியல்படுத்தினர். மதம், சமூகம் போன்றவை குறித்துத் தீண்டப்படாத மக்கள் என்ன நிலைப்பாடு கொள்ள வேண்டும் என்று எழுதினர். இந்தக் கடிதங்கள் எல்லாம் சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன நடக்கிறது, அவர்களின் மனநிலை என்ன என்று காட்டக்கூடியவைகளாக இருந்தன. ஒருசில கடிதங்கள் மட்டுமே பத்திரிகையில் வெளியிடப்பட்டாலும் வெளியிடப்படாத பல கடிதங்கள் பத்திராதிபருக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்த தகவல்களைச் சேர்க்கும் பணியைச் செய்தன. அது வரைசாதிரீதியான நீதியைக் கொண்டிருந்த சமூகத்தில் சட்டரீதியான நீதியை நிலைநாட்டுவதில் பத்திரிகைக் கடிதங்கள் மூலம் தலித்துகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதைக் காண முடிகிறது.
புனைபெயர்
காலனி ஆட்சியில் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு அபராதம் செலுத்திய சுதேசியப் பத்திரிகைகள் குறித்தே இதழியல் வரலாறுகள் பேசுகின்றன. ஆனால் சமூகப்பிரச்சினை சம்பந்தமாக (பறையன் எனும் பெயரைப் பயன்படுத்துவது) விவாதம் எழுந்து அபராதம் விதிக்கப்பட்ட பத்திரிகை ‘பறையன்’ மட்டுமே எனத் தெரிகிறது. இதன் பின்பு அனைத்துப் பத்திரிகைகளுமே குறிப்பாகத் தலித் பத்திரிகைகள் இதுபோன்ற விசயங்களில் கவனமாக இருந்தன. பின்னாட்களில் வெளிவந்த இதழ்களின் ஆசிரியர்கள் வாசகர் கடிதங்கள் குறித்துத் தந்த எச்சரிக்கையிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீதிமன்ற வழக்குகள், அபராதங்கள் போன்றவை பத்திரிகை ஆசிரியர்களுக்குக் கடிதங்கள் வெளியிடுவதில் எச்சரிக்கை உணர்வைத் தந்திருக்கலாம். இதன் விளைவாக கடிதம் எழுதுவோர் மத்தியில் புனைபெயரில் எழுதும் ஒரு வழக்கம் ஏற்பட்டது. அனைத்து இதழ்களிலும் கடிதம் எழுதுவோருக்கு எவ்வாறு எழுத வேண்டும் என்ற எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன. இங்குக் கடிதங்கள் எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு புனைபெயர்களும் முக்கியம்; ஏனென்றால் புனைபெயர்கள் கடிதம் எழுதுபவர் சார்ந்திருக்கும் அரசியலை, கருத்தியலை வெளிப்படுத்துவதாக இருந்தன. உதாரணமாக பூலோகவியாசன் இதழில் வெளியான கடிதங்கள்; உண்மை ஞானப்பறையன், ஆத்மநேசன், அவதானியார், செந்தமிழ்பாநு, தேசிகன், கருப்பண்ணாச்சாரி, சோதரப் பிரியன், அஷ்டாவதானியார், ஓர்பரோபகார சிந்தையான், கண்டுகளித்தோன் என்ற புனைபெயர்களில் எழுதப்பட்டன. இலங்கையிலிருந்து வெளிவந்த ஆதிதிராவிடன் இதழில் உண்மை விளம்பி, மாத்ரு பாஷாபிமானி, கண்டுதுக்கித்தவன், ஆதிதிராவிட ஈசுவர பக்தர், திராவிடகுலாபிமானி, பத்திரிகை நேயன், யாழ்ப்பாணி, குருகுலதிலகன், நாகரீகப்பிரியன், உண்மைப்பிரியன், விடைவிரும்பி, உள்ளதுரைப்போன் என்றிருந்தன. தமிழன் இதழில் உண்மை உரைப்பவன், சமணகுலத்திலகன், குருகுலத் திலகன், நாகரீகப் பிரியன், உண்மைப் பிரியன், விடை விரும்பி மற்றும் உள்ளதுரைப்போன் என்றிருந்தன. தமிழ் இதழியல் வரலாற்றில் புனைபெயர் எனும் வழக்கம் தேசிய கருத்தியலுக்கு அரசு நெருக்கடி ஏற்பட்டபோது அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தலித் வாசகர்கள் சாதி, மத விசயங்களை விமர்சிப்பதற்குப் புனைபெயர் எனும் அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். தலித்துகளைப் பொருத்தவரையில் பத்திரிகைகளில் கடிதம் எழுதுதல் என்பது வெறும் விமர்சனக் கலையாக இல்லாமல் அவர்களின் வாழ்வைக் காப்பதற்கான, சமூக மாற்றத்திற்குப் பயன்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது.
காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை
|
Friday, 11 September 2015
தலித் இதழ்களில் அரசியல் போராட்டம்: பத்திராதிபருக்குக் கடிதமும் இராகவன் கொலையும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment